தென்றல் வீசும்: தொடர் 1

          மாலை நேரம். சூரியன் மேற்குத்திசையில் பயணத்தை முடித்துக்கொண்டு நாளைக்கு பார்ப்போம் என்ற நம்பிக்கையில் மறையத் தயாராகிறது. செவ்வாய்க் கிழமையாதலால் வாசலைப் பெருக்கிச் சுத்தப்படுத்திவிட்டுச் சாம்பிராணி தூபம் காட்டத் தூபச்சட்டியைத் தேடுகிறாள் சோபா.
          ஆறரைமாதக் குழந்தை அடிவயிற்றில் அடிக்கடி உதைக்க அதை ரசித்தபடியே மெதுவாகச் செல்கிறாள். சிறிது நேரத்திற்குள் வீட்டைச் சுற்றித் தூபம் காட்டிவிட்டு ஹாலில் வந்தமர்கிறாள்.
          கிழக்கிலிருந்து மாதா கோயில் ஜெபமாலை கேட்க, மேற்கே பள்ளிவாசலில் இருந்து தொழுகை ஒலி கேட்க, வடக்கிலிருந்து பிள்ளையார் கோவில் பாட்டுக் கேட்க, தெற்கிலிருந்து நாத்திகவாதிகள் நடத்திய நாத்திக சொற்பொழிவு ஒருபுறம் கேட்க, நடுஹாலில் அமர்ந்து கணவன் வாங்கிக் கொடுத்த புத்தரின் உபதேசங்களைப் படித்துக்கொண்டிருந்தாள் சோபா.
          சிறிதுநேரம் புத்தகத்தைப் படித்துவிட்டு இன்றைக்கு இதுவரை போதும் என எண்ணியபடியே படித்து முடித்த பக்கத்தை மடித்து மூடுகிறாள், மறுநாளைக்கு எந்த இடத்திலிருந்து படிக்க வேண்டும் என்ற அடையாளத்தை வைத்தபடி.
          பின் மெதுவாக எழுந்து புத்தகத்தை அலமாரியில் வைத்துவிட்டுத் திரும்புகிறாள். அவள் திரும்பும் போது கைவிரல் பட்டு அலமாரியில் இருந்த இவர்களது போட்டோ ஆல்பம் கீழே தவறி விழ, அதிலிருந்த இவர்களது திருமண போட்டோ வெளியே தரையில் விழுகிறது,
          உடனே குனிந்து அதனை எடுக்க மனம் தயராக இருந்தும், அவளது மூளை அதற்கு சம்மதம் தரவில்லை. சிறிது சிரமப்பட்டு லேசாக மூச்சைப்பிடித்தபடி குனிந்து தங்களது ஆல்பத்தையும், அதிலிருந்து கழன்றுவிழுந்த திருமணப் போட்டோவையும் அழுக்குப்படாமல் பத்திரமாக எடுக்கிறாள்.
          ‘திருமணப்போட்டோ.’ மணமகள் பட்டுப்புடவையில் அலங்கரிக்க, அவளுக்கு இணையாக மணமகனும் திருமண கோலத்தில் நிற்க, மாலையும் மகிழ்ச்சியும் சேர்ந்திருக்க எடுக்கப்பட்ட போட்டோ அல்ல இவர்களின் திருமணப் போட்டோ.
சாதாரண ஆடையுடன், கழுத்தில் மணமாலை மட்டும் இருக்க மகிழ்ச்சி பெயரளவிற்கு அதுவும் போட்டோவிற்காக மட்டுமே சிரித்தபடி நின்றிருந்த திருமணப்போட்டோ.

          இதிலிருந்து தெளிவாய்த் தெரிகிறது இவர்களது திருமணம் பெற்றோர் சம்மதம் இல்லாமல், உற்றார் உறவினர்களின் வாழ்த்துகள் இல்லாமல் தனிச்சையான, அதுவும் நண்பர்கள் துணையோடு செய்யப்பட்ட காதல் திருமணம் என்று.

          ஆல்பத்தையும், அதிலிருந்து கழன்று விழுந்த திருமணப்போட்டோவையும், கூடவே ஆல்பத்தில் ஒட்டுவதற்கு சிறிதளவு கம்மையும் எடுத்துக்கொண்டு மீண்டும் சோபாவில் உட்கார்கிறாள் சோபா.

          ஆல்பத்தைத் திறந்து போட்டோ ஒட்டப்பட்டிருந்த பக்கத்தைத் தேடி எடுக்கிறாள். கையில் இருந்த கம்மை கீழே வைத்துவிட்டுச் சிலமணித்துளிகள் போட்டோவை உற்று நோக்குகிறாள்.
          எண்ணச் சிறகுகள் சிறிது காலம் பின்னோட்டமாய் போகிறது, இவர்களின் காதல் உதித்த காலத்தைக் கூற.

– தொடரும்

 

மின்னூலாகப் படிக்க

Spread the love