சாரல் கவிதைகள் – பகுதி 1

1. பெற்றோரை வணங்குகிறேன்

 

அப்பாவின் அருந்துணையாய்

  இல்லறத்தில் இணைந்தவராய்

அழகுமகனாக பெற்றெடுத்தீர்

  அன்பான அன்னையானீர்

 

உதிரத்தை உணவாக்கி

  உயர்வான உறவானீர்

நிறைவாகவே எனைவளர்க்க

  நிம்மதிக்கே கேள்வியானீர்

 

பெற்றோரின் பொறுப்புணர்ந்து

  பேணியதால் நான்வளர்ந்தேன்

மற்றவர்போல் நானுமில்லை

  மனசாட்சியில் கறையுமில்லை

 

அமைதிகெட்டு அல்லலுற்று

  ஆஸ்திக்காய் பண்பைவிற்று

பாசத்திற்காய் பரிதவிக்கும்

  பாதகராய் நீங்களில்லை

 

உங்களின் உழைப்பையும்

  உறவையும் மதிக்கின்றேன்

உயரினமாய் நாம்தொடர

  உருப்படியாய் நிலைக்கின்றேன்

 

நன்றிகொன்ற மானிடராய்

  நன்மையின்றி வாழ்கின்றார்

நல்லொழுக்கம் ஏதுமின்றி

  நாடிபணம் விளைக்கின்றார்

 

வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்

  வாழ்வளித்த என்பெற்றோரே

போற்றுகின்றேன் புகழுகின்றேன்

  பொறுமையோடு வளர்த்தவரே……

 

***

 

2. பேரண்டமே…!

 

ஆய்ந்திட ஆய்ந்திட

  விரிந்திடும் அண்டமே!

அறிவியல் அறிஞரை

  வளர்த்திடும் அண்டமே!

 

கோடி கோடியாய்

  கோளங்கள் ஈன்றதால்

குடும்பம் குடும்பமாய்

  அமைந்திட்ட அண்டமே!

 

அருகிலோர் சூரியக்

  குடும்பத்தை அமைத்து

அனைத்து உயிர்களும்

  பலிகிடும் விதத்தில்

 

புவியையும் புதிரையும்

  புதுமையாய் இணைத்துப்

புரிந்திடும் புத்தியை

  மனிதர்க்கு அளித்து

 

இயற்கையும் இனிமையும்

  இரண்டறக் கலந்து

இயங்கிவரும் முறைமையில்

  வியப்பையும் விழைத்து

 

அறிவினம் அனைவரும்

  அமைதியே இழந்திட

ஆண்டவன் படைத்திடா

  அண்டமே! நீயும்தான்

தெண்டமே!…..

 

 

 

3. மதிதரும் மாயை

 

இயக்கமும் ஆற்றலும்

  இணைந்தீயும் ஊற்றாய்

காற்றாய் ஒளியாய்

  கலந்துதவும் செயலாய்

 

கண்டிடா உருவாய்

  காரியத்தில் உயர்வாய்

பஞ்சமெண்ணப் பூதமாய்

  பயன்களை விளைத்திடும்

 

தோற்றமும் முடிவும்

  ஒன்றாய் நிலைத்திட

பயப்படும் உணர்வினை

  பண்பால் விளைத்திட்ட

 

விண்ணோடும் மண்ணோடும்

  விரிகின்ற சிந்தையே

வியத்தகு விந்தையே!

  வித்தாகும் தந்தையே!

 

வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்

  போற்றுகிறேன் புகழுகிறேன்

ஆய்ந்திடும் மூளையாலே

  அனைத்திலும் உயர்ந்திட்டேன்

 

பார்த்திடவே முடியாமலே

  பரனொன்று என்றுகூற

எதுவுமே நிலைக்கவில்லை

  எல்லாமே மாயை!

மாயை!! மாயைதானே!…..

 

 – தொடரும்

 

மின்னூலாகப் படிக்க

Spread the love