தென்றல் வீசும்: தொடர் 2

     மதனும், சோபாவும் படித்தது ஒரே கலைக்கல்லூரியில்தான். மதன் பட்ட மேற்படிப்பும், சோபா இளங்கலையும் படித்துக்கொண்டிருந்த காலம் அது. இவர்களின் காதலும் மலர்ந்தது அப்போதுதான்.

     மதன் வீட்டிற்கு மூத்தவன். தலைமகன். ஒரு தங்கை இருக்கிறாள். முதலாம் ஆண்டு முதுகலைப் பட்டதாரியான மதன் மற்ற கல்லூரி மாணவன் போல் கல்லூரிக்குச் செல்வது, நண்பர்களோடு சேர்ந்து கிண்டலடிப்பது, அவ்வப்போது கல்லூரிக்கு கட் போட்டுவிட்டுச் சுற்றச் செல்வது, செலவிற்குத் தேவையான காசை அன்னையிடம் கெஞ்சி, கொஞ்சி பெறுவது என அப்பருவத்தை அதனுடைய சிறப்புகளோடு சிறப்பாகச் செய்துவந்தான்; காதலைத் தவிர.

     ‘காரணம்: காலம் அமையவில்லை போலும்.’

     மூன்றாண்டு இளங்கலையை இதே கல்லூரியில் படித்ததால் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் மீண்டும் பழகுவதில் யாதொரு பிரச்சனையும் அவனுக்கு இருந்ததில்லை.

     இவர்கள் இருவரின் சந்திப்பு நடைபெறும் இடம் சோபா பேருந்திற்காக நிற்கும் பேருந்துநிறுத்தம்தான்.  அங்குதான் மதனின் நண்பர்களில் சிலர் இதே பேருந்து நிறுத்தத்தில் பஸ்ஸிற்காகக் காத்திருப்பர். வீட்டிலிருந்து பைக்கில் வரும் மதன் அப்பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் நண்பர்களோடு சேர்ந்துநின்று அவர்களைக் கிண்டலடிப்பதும், அழகான பெண்களைக் கண்டால் சைட் அடிப்பதும், கடைசி பஸ்ஸில் நண்பர்கள் புறப்பட்டவுடன் கல்லூரிக்கு வருவதும்தான் இவனது வழக்கமான வாடிக்கை.

     சோபா இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள். நடுத்தர குடும்பம். இவளும் வீட்டில் முதல் பெண். தங்கை ஒருத்தி இருந்தாள். ஆனால் சிறுவயதிலேயே இறந்துவிட்டாள். இரு பெண் குழந்தைகளை உடைய வீட்டில் உள்ள மூத்தப்பெண் மட்டுமே அனுபவிக்கும் ஒரு சிக்கல் உள்ளது. அது தந்தையின் பாசம்.

     தந்தைக்கு மூத்தமகள் மீது மிகுந்த பாசமிருக்கும். ஆனால் அப்பாசத்தை தட்டிப்பறித்து அனுபவிப்பவள் இளையவள் மட்டுமே. ஆனால் இங்கே இவர்கள் வீட்டில் அப்படி நடக்கவில்லை. அதனால்தானோ சோபா, தங்கையைச் சிறுவயதிலேயே இழந்துவிட்டாள். இப்போது ஒரே மகளாகச் சோபா மட்டுமே இருப்பதால் செல்லப்பிள்ளையும் இவளேயாவாள்.

     காலையில் பேருந்தில் கல்லூரிக்கு செல்வது, மாலையில் படிப்பு முடிந்து வீட்டிற்கு வருவது என இவளது கல்லூரி வாழ்க்கை அமைதியாகச் சென்று கொண்டிருந்தது.

     ஒரு வருடத்திற்கு மேலாக இவள் பேருந்திற்காக இந்தப் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தாலும் சோபாவிற்கும், மதனுக்கும் இடையே ஒரு சின்ன அறிமுகம்கூட இல்லாமல் இருந்தது.

 

– தொடரும்

 

மின்னூலாகப் படிக்க

Spread the love