தென்றல் வீசும்: தொடர் 3

     இப்படியாகச் சிலநாட்கள் சென்றுகொண்டிருக்க ஒருநாள் வழக்கம்போல் பேருந்து நிறுத்தத்தில் சோபாவும், அவளது தோழி அர்ச்சனாவும் பேருந்திற்காய் நின்றுகொண்டிருந்தனர். மதனும் அவனது நண்பர்களோடு சேர்ந்து அன்றாட கடமையைத் தொடர்ந்து கொண்டிருந்தான். எல்லாம் சரியாக நடந்துகொண்டிருக்க அர்ச்சனா மனதில் மட்டும் ஏதோவென்று சரியாக நடைபெறாதது போல் தோன்றியது.

     அவளுக்கு அப்படி தோன்றியது தவறு இல்லை. கல்லூரியில் நடைபெறப்போகிற பேச்சுப்போட்டியில் இவளது சம்மதம் இன்றி அர்ச்சனாவின் பெயரை எழுதிவிட்டு, “நீ கண்டிப்பா பேசுற.” என்று கட்டளையும் இட்டார் தமிழாசிரியர். எதிர்த்துப் பேசவும் முடியவில்லை.

     ஆசிரியர் அர்ச்சனாவின் பெயரை எழுத, அவளும் ஒருவகை காரணம் தான். வகுப்பறையில் சில நாட்களாகவே ‘பேச்சுப்போட்டியில் யாராவது சேர்கிறீர்களா?’ என்று ஆசிரியர் கேட்டால் வகுப்பறையே மவுனமாகிவிடும். ‘மவுனம் சம்மதத்திற்கு அடையாளமா?’ என்று கேட்டால் அதற்கும் மவுனம்தான் அவருக்குப் பதிலாக கிடைத்தது. இதனால் பேச்சுப்போட்டியில் அவர் யாருடைய பெயரையும் எழுதவில்லை.

     இப்படியே சில நாட்கள் சென்ற நிலையில் மதியநேரம் முடிந்ததும் வகுப்பறைக்கு வந்துகொண்டிருந்தார் ஆசிரியர். அவரைக் கண்டதும் மற்ற மாணவர்கள் அமைதியாயினர். அர்ச்சனா ஆசிரியரைக் கவனிக்கவில்லை. அவள் வாயடிப்பதை நிறுத்தாமல் சத்தமாக பேசிக் கொண்டிருந்தாள். இதனால்தான் வகுப்பாசிரியர் இவளது பெயரை பேச்சுப்போட்டியாளர் பட்டியலில் சேர்ப்பதாகக் கூறினார். அர்ச்சனாவிற்குத் தப்பிக்க வாய்ப்பில்லை. சரியென தலையாட்டிவிட்டு அதற்கான முயற்சியில் முழுவேகத்தில் மனதை செலுத்தினாள். நாட்கள் அதிகம் இல்லாததால் இரவு முழுவதும் தூங்காமல் பேச்சுப்போட்டிக்கான தகவல்களை சேகரித்தாள். இதனால் அவளால் இயல்பாக நிற்க முடியவில்லை.

     சிறிது தடுமாறியவள் தோழி சோபாவின் கையைப் பற்றிப்பிடித்துக் கொண்டு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தாள். நிழற்கூடம் இல்லாத பேருந்து நிறுத்தமாக அது இருந்ததால் வெயிலில்தான் நிற்கவேண்டிய கட்டாயம். தூக்கமின்மையும், வெயிலும் அவளை சற்றே ஆட்டிப்படைக்க அதனோடு மல்லுகட்ட முடியாமல் திணறிய அர்ச்சனா மயங்கி தரையில் குப்புற விழுகிறாள். தலைச்சுற்றி விழும் அர்ச்சனாவிற்கு அங்கே வேறொரு விபரீதமும் நடக்கிறது.

     ஆம், கீழே குப்புற விழுந்த அர்ச்சனாவின் நெற்றியை பதம்பார்த்தது கீழே கிடந்த கல் ஒன்று. தங்கள் கல்லூரியைச் சேர்ந்த பெண் கீழே விழுந்ததை பார்த்த மதனும், அவனது தோழர்கள் மற்றும் பக்கத்தில் நின்றவர்கள் ஓடிவரத் திகைப்புடன் நின்றாள் சோபா. அர்ச்சனாவைத் தூக்கியிருத்த முயற்சிக்கிறாள். அருகில் நின்ற பெண்களும் சோபாவிற்கு உதவக் கீழே விழுந்தவளை தூக்குகிறார்கள்.

     அர்ச்சனாவைத் தூக்கும்போது அவளின் நெற்றியில் இரத்தம் பாய்வதைக் கவனிக்கிறாள் சோபா. இரத்தத்தை கண்டாலே நான்கு அடி பின்னால்போய் பயந்தபடி நிற்கும் சோபா, இன்றைக்கு தனதருகே நிற்கும் உயிர்த்தோழியின் நெற்றியில் இரத்தம் வழிவதைக் கண்டு பயப்படவில்லை.

     ‘நட்புக்கு ஒரு பிரச்சனை என்றால் எதை வேண்டுமானாலும் செய்ய முன்வரும் மக்களை கொண்ட நாடல்லவா இது.

     சிறிதும் பயப்படாமல் கையில் இருந்த கைக்குட்டையை தோழியின் நெற்றியில் இரத்தம் பாயும் இடத்தில் வைத்து லேசாக அமிழ்த்தி விடுகிறாள். என்ன நடக்கிறது என்ற குழப்பத்தோடு இருந்தாள் அர்ச்சனா. சோபாவோ ஒரு கையால் தோழியை தனது தோளோடு சாய்த்து பிடித்தவாறு, மறுகையால் இரத்தம் வழியும் இடத்தை கைக்குட்டையால் அழுத்திப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தாள்.

     அதற்குள் கல்லூரி மாணவர்கள், அருகே வந்த ஆட்டோவை நிறுத்தி அதிலே அர்ச்சனாவையும், கூடவே துணைக்கு இரு பெண்களையும் அவ்வண்டியில் ஏற்றிவிட்டபடி அவர்களை பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

     ஆட்டோ புறப்பட பின்னாலாக மதன், அவனது தோழர்கள், கல்லூரி மாணவர்களில் சிலர் மற்றும் அவ்வூரைச் சேர்ந்தவர்கள் என சிறுகூட்டமே தங்களது பைக்கில் பின்தொடர்ந்தனர்.

-தொடரும்…

மின்னூலாகப் படிக்க

Spread the love