சாரல் கவிதைகள் – பகுதி 3

6. பலாமரம்

 

பலாமரம் ஒன்றை வளர்க்கணும் -அதன்

பயனுள்ள தரத்தையே உயர்த்தணும்

முக்கனிகள் நடுவிலே அமைந்ததுவே -பழம்

முகர்தலில் சுவையே மிகுந்திடுமே

 

            பெரிதான காயாய் காய்த்திடுமே -அதிலும்

            கொத்தாக பலவும் அமைந்திடுமே

            முட்கள் நிறைந்தே தோலாயும் -உள்ளே

            முத்தான சுளைகளாய்ச் சுவைதருமே

 

பலபல வகையான இனமிருந்தும் -உயர்

வருக்கைக் கூழமென இருபிரிவாகும்

வலுவும் இன்சுவையும் வருக்ககையிலே -அதிகம்

வளமாய் அமைந்ததே தனிநிலையாம்

 

            பழத்திலும் தண்டிலும் பாலிருக்கும் -அது

            பலரும் வெறுத்திட ஒட்டிவிடும்

            சுளைகளில் உள்ளேயே விதையுண்டு -விதை

            சுத்தமாய் அமைந்திடும் நிலையுண்டு

 

விதையைச் சுட்டவித்தும் சாப்பிடலாம் -சுவை

குழம்பாய் வைத்தால் மகிழ்ந்திடலாம்

இலைகளை ஆட்டுக்கு உணவளிக்கலாம் -அதில்

கொழுக்கட்டை அவித்தும் சுவைசேர்க்கலாம்

 

            விளைந்த தடியினை அறுத்தெடுத்து -பலவித

            வீட்டுப் பொருட்களைச் செய்திடலாம்

            வீணாகும் கிளைகளை விறகிற்கும் -பிறர்க்கு

            விற்கவும் சமைக்கவும் பயனாக்கலாம்

 

பலாமரம் ஒன்றேனும் வளர்த்திடுவீர்

பயனொன்றை நமக்காய் செய்திடுவீர்

மறவாதீர்! மறக்காதீர்!! மரம்நடுவதை -என்றும்

மழைவளம் பெருகிவிடும் அவையினாலே…..

 

***

 

7. பால்கார அண்ணாச்சி

 

பால்கார அண்ணாச்சி

  பைக்கினிலே வருகிறார்

பாதித்தண்ணீர் பாலில்சேர்த்து

  பரிவுடனே சிரிக்கிறார்

 

எத்தனைபேர் வந்தாலும்

  எல்லோருக்கும் கொடுக்கிறார்

எத்தருக்கும் பாலையூற்றி

  ஏமாற்றத்தால் வருந்துவார்

 

பொறுமையோடு வாங்குவோருக்கு

  பொதுநலனாய் வார்க்கிறார்

வெறுங்கையோடு நிற்பவர்க்கும்

  பெருங்கடனாய் ஊற்றுவார்

 

காலையிலும் மாலையிலும்

  கடமையாக உழைக்கிறார்

உதவுகின்ற உறவினராய்

  உயர்வுக்காய் நிலைக்கிறார்

 

தரமிகுந்த தண்ணீராயின்

  தாராளமாய் வாங்கலாம்…..

 

***

 

8. சிறுவரின் எண்ணம்

 

துள்ளித் துள்ளியே பாடுங்கள்

துயரம் இன்றியே ஆடுங்கள்

பள்ளியில் பயின்றிட ஓடுங்கள்

பலருமாய் ஒன்றியே மகிழுங்கள்

 

எண்ணி எண்ணியே பாருங்கள்

எல்லார் துயரமும் தீருங்கள்

நல்லார் உரையே கேளுங்கள்

நட்பால் உயர்ந்தே வாழுங்கள்

 

உண்மையே பேசுதல் உயர்வாகும்

நன்மையே செய்தல் நலமாகும்

பொறுமையே காத்தல் உறவாகும்

பொல்லார் உரைகள் தீதாகும்

 

வறுமை நிலைகளை மறவாதீர்

வளமை சேர்க்கையில் தவறாதீர்

சோகங்கள் வந்திடில் முடங்காதீர்

சோம்பலை உங்களில் சேர்க்காதீர்

 

பெற்றோர் களித்திட வளர்ந்திடுவீர்!

பெரியோர் புகழ்ந்திட வணங்கிடுவீர்!

ஒழுக்கமே உயிரென மதித்திடுவீர்!

உழைக்கும் பண்பினை துதித்திடுவீர்!

 

சுத்தம் பேணுதல் தனமாகும்

சுயநலம் தவிர்த்தல் தானமாகும்

கற்றவர் கண்கள் ஒளியாகும்

கருத்துள்ள மொழிகளே அறிவாகும்

 

அடுத்தவன் அவனிவன் சொல்லாதீர்

அற்பராய் எவரையும் எண்ணாதீர்

அகிலத்து உறவினில் ஒன்றாவீர்

அறிவின் மனத்தால் நாமென்பீர்

 

சிறுவர்கள் என்றேதான் ஒதுக்கிடுவார்

சிந்தனைகள் தூண்டாமல் சினப்படுவார்

வருங்கால வளர்ச்சிகள் அறியாமலே

வாழுங்கள் என்றேதான் அறிவுரைப்பார்…..

 

– தொடரும்

 

மின்னூலாகப் படிக்க

Spread the love