தென்றல் வீசும்: தொடர் 4

     வண்டியில் இருந்த சோபா தன்நிலையைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தாள். எங்குமே அமைதியாக இருப்பவள், வேறு யாருக்காவது இதேப்போல் நடந்திருந்தால் கூட்டத்தோடு கூட்டமாக நின்று வேடிக்கை பார்ப்பவள்; இன்று அதுவே தனது தோழி என்றதும் தைரியத்துடன் நிற்பதை அவளால் முழுமையாக உணரமுடிகிறது. அர்ச்சனா இன்னும் பீதியுடன்தான் இருக்கிறாள்.

     சிறிது நேரத்திற்குள் ஆட்டோவானது அருகே இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்தது. பின்னால் மதனும், மற்றவர்களும் அங்கே வந்தனர். எல்லாம் வேகமாக நடந்தது. கல்லூரி மாணவர்கள் என்பதால் மருத்துவரும் உடனடியாக எழுந்துவந்து காயப்பட்ட அர்ச்சனாவிற்கு சிகிட்சை அளித்தார். சிறிது நேரத்திற்குள் சிகிட்சை முடிந்தது.

     ‘பெரிதான காயம் ஒன்றும் இல்லை. லேசான காயம்தான். இரண்டு தையல் போட்டிருப்பதாகவும், காயம்பட்ட பெண் மிகவும் சோர்வாக இருப்பதால் ஒரு பாட்டில் குளுக்கோஸ் போட்டிருப்பதாகவும், முடிந்தபின் தாரளமாக வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம்’ என மருத்துவர் கூறினார். உடனே சுற்றியிருந்த மாணவர்கள் மருத்துவருக்கு நன்றிகூற பதிலுக்கு மருத்துவரும் மாணவர்களின் பொறுப்பானச் செயலை பாராட்டிவிட்டு தனது அறைக்குச் சென்றார்.

     மருத்துவர் சென்றதும் அங்கே கூடியிருந்த கூட்டமும் கலைந்துபோகத் தொடங்கியது. கல்லூரி மாணவர்கள் (மதனும், அவனது நண்பர்களில் சிலரும்) தங்களிடம் இருந்த பணத்தை எல்லாம் சேகரித்தனர். அவை அனைத்தும் சீனியரான மதனிடம் கொடுக்கப்பட்டது. மதனும் அப்பணத்தை வாங்கிக்கொண்டு கேஷியர் கவுண்டரை நோக்கி நடந்தான். கல்லூரி மாணவர்களில் ஒருவன் பணம் கட்டிக்கொண்டிருப்பதை கவனித்துக்கொண்டே அர்ச்சனாவிற்கு அருகில் அமைதியாக இருந்தாள் சோபா.

     அவளுக்கும் ஒரு வருத்தம் இருந்தது. தன்னிடமிருக்கும் பணத்தை கொடுத்து உதவ முடியலையே என்று நினைத்து வருந்தினாள். ஆனாலும் அவள் நினைத்தபடி காசு இப்போது செலவாகாமல் இருக்கலாம். அதற்கான வாய்ப்பு இன்னும் சில மணிநேரத்தில் நடக்கவிருப்பதை அவள் எப்படி அறிவாள்?

     சற்றுநேரத்தில் தலையில் கட்டுடன் அர்ச்சனா வெளியே வந்தாள். மதனும், அவனது தோழர்களும் அவளிடம் வந்து நலம் விசாரித்தனர். அர்ச்சனாவும் தனக்கு இப்போது பரவாயில்லை என்று கூற அவளை வெளியே அழைத்து வந்தனர்.

     அங்கே ஆட்டோவும் தயாராக நின்று கொண்டிருந்தது. அர்ச்சனாவும், சோபாவும் ஆட்டோவில் ஏற மதனும் அவனது இன்னொரு தோழனும் தங்களின் இரு பைக்குகளில் துணைக்கு இருவரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர்; அர்ச்சனாவின் வீட்டிற்கு. மற்றவர்கள் அனைவரும் தங்கள் வேலையை கவனிக்கச் சென்றனர்.

     சோபா வழிகூற சற்றுநேரத்தில் ஆட்டோ அர்ச்சனாவின் வீட்டிற்கு சென்றது. ஏற்கனவே அர்ச்சனாவின் வீட்டாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதால் அவளது வீட்டின்முன் ஒரு கூட்டமே கூடியிருந்தது. ஆட்டோ அர்ச்சனாவின் வீட்டின்முன் வந்துசேர்ந்ததும் கூடியிருந்தவர்கள் பதட்டத்தோடு வண்டியினுள் நோக்கினர். அவ்வாறு இருக்க ஆட்டோவின் பின்னால் இவர்கள் நால்வரும் வந்துசேர்ந்தனர். வண்டியில் இருந்த இரு பெண்களும் மெல்ல வெளியே வந்தனர். கூடியிருந்தவர்கள் வழிவிட இருவரும் அர்ச்சனாவின் வீட்டிற்குள் சென்றனர்.

     ஆட்டோ டிரைவர் அவ்விரு பெண்களையும் பார்த்தான். அவர்கள் மெதுவாக சென்றுகொண்டிருந்தனர். அவனுக்கு தனக்கான பணத்தை யாரிடம் வாங்குவது என்ற குழப்பமும் ஏற்பட்டது. அந்த குழப்பத்தோடு மதனைப் பார்த்தான். டிரைவரின் பார்வை தன்மேல் திரும்பியதை உணர்ந்த மதன் ஆட்டோ டிரைவரின் அருகே வந்து,

     “மொத்தம் எவ்வளவு ஆச்சு அண்ணே…..” என்று கேட்க, ஆட்டோ டிரைவரும்,

     “200 ரூபாய் ஆச்சுங்க.” என்றார். இதைக்கேட்டு ஒருமுறை மீண்டும் டிரைவரை பார்த்தான் மதன்.

     “ஒரு மணிநேரம் வெயிட்டிங் சார்ஜ் எல்லாம் சேர்த்துத்தான் சொல்லுறேன். அதிகமா ஒண்ணும் கேட்கல.” என்றுகூறி நின்றான் ஆட்டோ டிரைவர்.

     மறுபடி எதுவும் கேட்காமல் தனது பர்ஸை பாக்கெட்டிலிருந்து எடுத்தான் மதன். அதில் 50 ரூபாயும், மருத்துவமனை பில்லும்தான் இருந்தது. நண்பர்களிடம் கேட்டான். அவர்களும், “கையில் இருந்த காசெல்லாம் மெடிக்கல் பில்லுக்கே தந்துட்டோம் மச்சான்.” என்றுகூறி வெற்று பர்ஸைக் காட்டினர்.

     என்னச் செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, அந்நேரம் பார்த்து வெளியே வந்தாள் சோபா. மதனுக்கு இவளது பெயர் தெரியாததால் நண்பர்களிடம் கேட்டான். அவர்களுக்கும் இவளது பெயர் தெரியவில்லை. பெயர் தெரியாமல் எப்படி கூப்பிடுவது? வேறுவழியில்லை, மதன் வலது கையை தூக்கி சைகைக்காட்ட சோபா அவனைப் பார்த்தாள். ‘இங்கே வரும்படி’ சைகையால் கூறினான். அவளும் வந்தாள். எப்படி கேட்பது என்று யோசித்தாலும், தான் ‘சீனியர்’ என்ற அதிகாரத்துடன் கேட்க ஆரம்பித்தான்.

     “ஆட்டோ டிரைவருக்கு பணம் கொடுக்கணும்….., உங்கிட்ட எவ்வளவு இருக்கு?”

     ஆட்டோவிற்கு பணம் கொடுக்காமல் வந்துவிட்டோமே என்ற நியாபகம் சோபாவிற்கு அப்போதுதான் எழுந்தது.

     “500 ரூபாய் இருக்கு. வேணுமா?”

     “சரி, எடுத்துட்டு வா. டிரைவர் வெயிட் பண்ணுறாறு.” என்று கூறியதும் அவள் வேகமாகச் சென்று தனது பர்ஸில் இருந்த 500 ரூபாய் ஒரே தாளை எடுத்து மதனிடம் கொடுத்தாள். மதன் அதனை வாங்கி டிரைவரிடம் கொடுக்க, மீதிபணம் 300-யை அவனிடம் கொடுத்துவிட்டு ஆட்டோ டிரைவர் புறப்பட்டுச் சென்றான்.

     மீதம் 300 ரூபாயைச் சோபாவிடம் நீட்டினான் மதன். அவள் பணத்தைத் திரும்பி வாங்கணுமா, வேண்டாமா என்று யோசித்தபடி மெதுவாகக் கையை நீட்டினாள். அப்போது பின்னால் நின்றுகொண்டிருந்த நண்பன் (இன்னொரு பைக்கை ஓட்டிவந்தவன்),

     “மாமா….., பெட்ரோல் காசு…..” என்று மெதுவாகக் கேட்க, மதனோ காசு கேட்டவனின் முகத்தைப் பார்த்தனான். ‘காசு சுத்தமா இல்ல. பெட்ரோலும் கொஞ்சம்தான் இருக்கு.” என்று சைகையால் கூறி அவனும் மதனைப் பார்த்தான்.

     ‘பணத்தைக் கொடுத்துவிட்டோமோ!’ என்று நினைத்து கையைப் பார்க்கிறான் மதன். கையில் பணம் இன்னமும் இருக்கிறது. மறுபுறம் அவளும் கையை நீட்டியபடி நிற்கிறாள். பணத்தை முழுவதுமாகக் கொடுத்துவிட்டால் பெட்ரோல் இல்லாத வண்டியைத் தள்ளிக்கொண்டுதான் போகவேணும். ஏற்கனவே தன் வண்டிக்காக மட்டுமே 50 ரூபாயை வைத்திருக்கிறான். 50 ரூபாயை மட்டும் கொண்டுபோய் இரண்டு வண்டிக்கும் பெட்ரோல் கேட்டால் பங்கில் வேலைபார்ப்பவன் கேவலமாகப் பேசுவான்.

     ‘என்ன செய்வது…… சமாளிப்போம்.” என்று எண்ணியபடி அவளைப் பார்த்து சிரித்தான். மதனது சிரிப்பின் பொருளை உணர்ந்த சோபா, நீட்டிய கையை அப்படியே வாபஸ் செய்தாள்.

 

-தொடரும்…

 

மின்னூலாகப் படிக்க

Spread the love