சாரல் கவிதைகள் – பகுதி 4

9. அழகிய அணிலே

 

அணிலே! அணிலே! அழகிய அணிலே!

அதிவேகப் பயணத்தை தொடர்ந்திடும் அணிலே

துள்ளிக் குதித்தோடித் தூரத்தைத் தாண்டிடும்

துடிப்பான செயல்திறன் மிக்கதோர் அணிலே

 

கொய்யாப் பழத்தையும் கொவ்வைப் பழத்தையும்

கொல்லைப் புறத்துள்ள கொட்டைகள் அனைத்தையும்

கொறித்தும் கடித்தும் கோதியே தள்ளியும்

கொள்ளையாய்த் தின்கின்ற கண்கவர் அணிலே

 

முன்கால்கள் தூக்கியே முணுமுணுத் தோடுவாய்

முதுகுள்ள வரிகளால் சரித்திரம் சொல்லுவாய்

வாலின் வலிமையால் கிளைகளைத் தாவுவாய்

வாசத்தின் நிலமையால் மரங்களில் தூங்குவாய்

 

உணவுக்கு எதனையும் விளைப்பதும் இல்லை

உறவுக்கு எவரையும் அழைப்பதும் இல்லை

அழகுக்கு அலைந்தே உடுப்பதும் இல்லை

ஆண்டவர் இவரெனத் துதிப்பதும் இல்லை

 

அழிந்திடும் எதனையும் சேர்ப்பதே இல்லை

இழிந்திடும் சோம்பலைப் பார்ப்பதே இல்லை

செழித்திடும் இயற்கையை மறப்பதே இல்லை

களித்திடும் வாழ்க்கையைத் துறப்பதே இல்லை

 

பிறந்ததும் அழுதிடும் பிள்ளையாய் அழுவதில்லை

இறந்ததும் அழுதிடும் உறவுகளும் உனக்கில்லை

தன்னலமும் பொறாமையும் தரம்சேர வளர்வதில்லை

தானுயரப் பிறர்வருந்த எவ்வினையும் செய்வதில்லை

 

பசியொன்றைப் போக்கவும் பணமொன்றைச் சேர்க்கவும்

தனியாளாய் முடியாமல் தவறெல்லாம் கூட்டவும்

அறிவிருந்தும் அமைதியற்றார் அடைகின்ற துயரங்கள்

அணிலொனக்கு இல்லை! ஆசைகளும் இல்லை!…..

 

 

10. நாயின் வினா!

 

‘அப்பா’ தெருநாய் என்பதெல்லாம்

  அடுத்தார் எவர்க்கும் தெரியாது

அழகோடு வடிவாய் இருந்ததனால்

  அவரவர் எங்களை விரும்பினார்கள்

 

‘அம்மா’ நடிகையின் அரவணைப்பில்

  அளவாய் இருவரை ஈன்றார்கள்

முதலாய் பிறந்திட்ட நானும்தான்

  மும்தாஜ் வீட்டில் உறவானேன்

 

தம்பியோ சில்பாவின் பராமரிப்பில்

  தரமான வாழ்வில் வளரலானான்

உணவுகள் உடைகள் உறைவிடமும்

  உயரின நிலையிலே கிடைத்ததுவே!

 

நயமாய் குரைப்பதும் நக்கியேமகிழ்வதும்

  நாளும் குளிப்பதும் நடிகையோடிருப்பதும்

வேலைகள் இல்லாமல் வேடிக்கைகள்பார்ப்பதும்

  கவலையே தெரியாத வாழ்வாய்மைந்ததுவே!

 

உழைத்தே உண்ணாத உயிர்பிறப்பாய்

  உறவுகள் எண்ணாத கீழ்பிறப்பாய்

அறிவற்ற நிலையிலே பிறந்திருந்தும்

  ஆறறிவு மனிதராய் நாங்களில்லை

 

அம்மா அப்பா தெரிந்திருந்தும்

  அறிவின உறவுகள் நிலைத்திருந்தும்

முடியாத முதுமையில் இழிவுகளால்

  முடிவுறும் வாழ்வாய் அமைவதுமேன்?

 

தன்னலப் பேய்களின் பிடியினிலே

  தகுதிகள் பண்புகள் இழப்பதிலே

அமைதியை அழிக்கின்ற ஓரினமாய்

  அவனியின் அறிவினமும் விரைகின்றதே!……

 

 

11. பனைமரமே! (கற்பகமே!)

 

ஒற்றைத் தடியாய் நீஉயர்ந்தாய்

நெடிது உயர்ந்து நீவளர்வாய்

பற்றற் றோரையும் நீபகையாய்

பனைமரச் சிறப்பினை நீஅடைந்தாய்

 

கற்பகத் தருவெனப் பெயரெடுத்தாய்

கற்றவர் நினைத்திட உனையமைத்தாய்

வரண்ட நிலத்திலும் வளமளிப்பாய்

வற்றாத நிலங்களில் நிறைந்திருப்பாய்

 

ஓலைச் சுவடியாய் பெருமைபெற்றாய்

ஓலைக் குடிசைக்குக் கூரையானாய்

படுத்திட ஏழைக்குப் பாயுமானாய்

படித்திட்ட புலவர்க்கு பதிவுமானாய்

 

களித்திட கள்ளும் அளித்திடுவாய்

கடந்திட பாலமாய் அமைந்திடுவாய்

வீடுகள் நிலைபெற மரமுமாவாய்

வீணரின் தேவைக்கு கொலையுமாவாய்

 

நுங்குடன் பதனீரும் சேர்த்தளிப்பாய்

நுகருவோர் எவரையும் கவர்ந்திடுவாய்

பனம்பழம் கிழங்கும் கருப்புக்கட்டியும்

பயனுறு உணவுகளாய் தந்துயர்வாய்

 

உன்னுடல் முழுவதும் பயன்விளைத்தாய்

உயரியப் பொருட்களாய் உறவமைத்தாய்

உன்னரும் கொடையினை உணராமல்

உலகோர் அனைவரும் ஏன்மறந்தார்?….

 

 

– தொடரும்

 

மின்னூலாகப் படிக்க

Spread the love