தென்றல் வீசும்: தொடர் 5

     “பாக்கி 300 இருக்கு. பெட்ரோல் வேற போடணும்……” என்று கஷ்டப்பட்டுக் கூறி வழிந்தான் மதன்.

     அவளும் ‘பரவாயில்லை’ என்பதுபோல் தலையை ஆட்டினாள். சோபா, ‘பரவாயில்லை’ என்று சொல்ல ஒரு காரணமும் இருந்தது. மருத்துவமனையில் அர்ச்சனாவின் மெடிக்கல் பில்கட்ட மதன், தனது கையில் இருந்த பணத்தைக் கொடுத்துவிட்டு காலி பர்ஸை மட்டும் பையில் வைத்ததை இவள் கவனித்ததை இன்னமும் ஞாபகத்தில் வைத்திருக்கிறாள்.

     யாரோ இவளை கூப்பிட, “அப்போ நான் கிளம்புறேன்.” என்று மென்மையாக சொல்லிவிட்டுத் திரும்பினாள் சோபா. மதனுக்கோ மனம் கேட்கவில்லை. உதவி செய்வதற்குப் பிரதிபலனாகக் கொடுத்தப் பணத்தை திரும்பப்பெற அவனது மனம் இடங்கொடுக்கவில்லை. இதனால் சோபாவை மீண்டும் கூப்பிட்டான்.

     “ஒரு நிமிசம்……” என்று மதன் கூப்பிடவும், சோபா திரும்பினாள்.

     “என்ன…… பணமே வாங்கிக்காம போற!”

     “நீங்கதான் பெட்ரோலுக்கு வேணும்னு சொன்னீங்களே!”

     “பெட்ரோலுக்குப் பணம் வேணும்தான். ஆனா 300 ரூபாயும் வேண்டாம். 50 ரூபாய் போதும். நாங்க சமாளிச்சிக்கிறோம்.” என்றபடி 50 ரூபாய் தாளை மட்டும் எடுத்துவிட்டு மீத பணத்தை சோபாவிடம் கொடுத்தான். அவளும் கிடைத்த பணத்தை வாங்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

     வாங்கிய 50 ரூபாய் தாளை நண்பனிடம் நீட்டிவிட்டு, தனது பர்ஸில் 50 ரூபாய் இருக்கிறதா என்று ஒருமுறை பார்த்து உறுதிசெய்துகொண்டான்.

     நால்வரும் பைக்கில் புறப்படத் தயாரானார்கள். அப்போது மதன் தோழர்களிடம்,

     “மச்சி, பொண்ணோட பெயரைக் கேட்காமலே விட்டுட்டோமேடா.” என்று சொல்ல,

     “ஏண்டா…..” என்று ஒருவன் கேட்டான்.

     “பெட்ரோலுக்குப் பணம் தந்திருக்கா. அதான்……” என்று மதன் வார்த்தையை இழுத்தடித்துப் பேசியதும், மற்ற மூன்றுபேரும் ஒரே நேரத்தில் அவனைப் பார்த்து கண்ணசைத்துச் சிரிக்க அவனும் சிரித்தான்.

     “விடுடா மாமா. அடுத்தமுறை கேட்டுட்டா போச்சி. இப்போ நேரமாகுதுடா, கிளம்புவோம்.” என்று இன்னொருவன் கூற, நான்குபேரும் புறப்பட்டுச் சென்றனர்.

     இதுதான் மதனுக்கும், சோபாவிற்கும் பழக்கம் ஏற்படக் காரணமாயிருந்த முக்கியமான நிகழ்வு. இதனைத் தொடர்ந்து நடந்து சில நிகழ்வுகள் இவர்கள் மீண்டும் பழக வாய்ப்புகளை ஏற்படுத்தியது.

     மறுநாள் காலையில் வழக்கம்போலச் சோபாவும், காயம் பெரிதாக இல்லாததால் அர்ச்சனாவும் கல்லூரிக்குச் செல்லப் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தனர். ஆனால் அங்கே மாணவர்கள், மாணவிகள், சிறுவர்கள் மற்றும் ஊர்மக்கள் என சுமார் 200 பேர் சேர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் இருவருக்கும் ஒரே ஆச்சரியம். இவர்களைக் கண்டதும், குறிப்பாக அர்ச்சாவைக் கண்டதும் கூட்டத்தில் இருந்த அத்தனைபேரின் பார்வையும் அவள்மேல் விழுந்தது.

     அர்ச்சனா மெதுவாக அவர்களைப் பார்க்க, அங்கே கூடியிருந்த அனைவரும் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த அரசு அதிகாரிகளிடம் இவளைக் கைகாட்டி ஏதேதோ பேச ஆரம்பித்தனர். மாணவர்களின் போராட்ட கோஷத்தின் குரல் அதிகரிக்க ஆரம்பித்தது. இருவருக்கும் என்னவென்று தெரியவில்லை, இருந்தும் அக்கூட்டத்தோடு இவர்களும் சேர்ந்துகொண்டனர்.

     தோழிகளிடம் விசாரித்தாள் சோபா. அவர்களும் நடந்ததைக் கூறத்தொடங்கினர்.

     “இந்தப் பேருந்து நிறுத்தத்தில பல நாளாவே நிழற்கூடம் கட்டக் கோரிக்கைக் கொடுத்தும் எந்தப் பலனும் கிடைக்கல. நேத்துவேற, அர்ச்சனாவுக்கும் கீழே விழுந்ததில அடிபட்டுடிச்சி. அதனால நம்ம காலேஜ் பசங்க எல்லாரும் ஸ்டிரைக் பண்ணணுமுண்ணு ரகுபதி அண்ணா, தினகர் அண்ணா, மதன் அண்ணா இவங்க எல்லாரும் சொன்னாங்க. மதன் அண்ணன்தான் மொத ஆளாய்ப் போய் ரோட்டுல உட்கார்ந்தாங்க.” என்றதும் சோபாவும், அர்ச்சனாவும் மதனைப் பார்த்தனர்.

     “விசயம் இன்னும் முடியல. மதன் அண்ணன் போய் உட்கார்ந்ததும் மற்ற பசங்க, நாங்க எல்லாரும் போய் மறியல் பண்ண ஆரம்பிச்சோம். அப்போ ஊர்க்காரங்களுல ஒருத்தர் சொன்னாரு. ‘எங்கிருந்தோ வந்த காலேஜ் பசங்க (மதன் இந்த ஊரைச் சார்ந்;தவன் கிடையாது. நண்பர்கள் இங்கே பஸ்ஸிற்காக நிற்பதால் அவர்களோடு சேர்ந்து இவனும் வந்து நிற்பான். அதற்குமேல் மதனுக்கும், இந்த ஊருக்கும் வேறு எந்தவித சம்மந்தமும் கிடையாது.) மொத ஆளாய்ப் போய் நிக்கிறாங்க. ஊர்க்காரங்க நீங்க வேடிக்கையா பார்க்கிறீங்க! அந்தப் பசங்களுக்கு இருக்கிற அக்கறை ஊர்காரங்க உங்களுக்கு இனி எப்பத்தான் வருமோ? உங்களால போராட்டந்தான் நடத்த முடியல. நமக்காக போராடுற இந்தப் பசங்களுக்கு ஆதரவாவது கொடுக்க நினைங்க. இங்க நிண்ணு வேடிக்கை பார்க்கிறதைவிட அவங்ககூட நிண்ணு போராட்டத்தில சேரலாமே’-ண்ணு சொல்லி ஊர்மக்களை உசுப்பேத்திவிட்டு அவரும் போராட்டத்தில குதிச்சிட்டாரு. உடனே ஊர்மக்களும் இந்தப் போராட்டத்தில சேர்ந்திட்டாங்க.” என்று நடந்த விசயத்தை அப்படியேக் கூறி முடித்தனர்.

     இவர்கள் பேசி முடித்த சில நிமிடங்களில் காவல்துறை அதிகாரியின் வாகனமும், அதனோடு சேர்ந்து இரு ரோந்து வாகனமும் ஒன்றன்பின்னால் ஒன்றாக வந்தன. காவல்துறை அதிகாரி வந்துசேர்ந்த அடுத்தசில நொடிகளிலே கல்லூரி முதல்வரும் வந்து சேர்ந்தார். கல்லூரி முதல்வரைக் கண்டதும் மாணவர்களின் போராட்டக் குரலின் வலிமை இன்னும் அதிகரித்தது. மாணவர்களை அமைதியாக இருக்கும்படிக் கூறிவிட்டு காவல்துறை அதிகாரி மற்றும் அங்கிருந்த வேறுசில அரசு அதிகாரிகளிடம் பேசச் சென்றார், கல்லூரி முதல்வர்.

     பேச்சுவார்த்தை தொடங்கியது.

-தொடரும்…

 

மின்னூலாகப் படிக்க

Spread the love