12. வண்ண மலர்களே!!
வண்ண மலர்களே! வண்ண மலர்களே!
வண்டும்மை நாடிடும் தேனூற்றுகளே!
வண்ணத்துப் பூச்சிகளும் சுற்றிவந்து
வலியாது அமர்ந்து தேனுண்ணுமே!
இலையடி இடையினிலே
இணைந்துவரும் பூக்காம்பும்
புல்லிகளும் அல்லிகளும்
புகழ்பரப்பும் மணத்துடனே
இதழ்விரித்து மகிழ்வளிக்க
இணைந்துள்ள சூலகமும்
மகரந்தப் பொடியுடனே
மலர்கின்ற நிலையதனில்
தன்னினம் பெருகவும்
தன்வளம் செழிக்கவும்
தகவமைப் பனைத்தையும்
தகுதியாய் பெற்றிட்ட
நிறங்களின் விந்தையே!
நீபெற்ற இனங்களே!
நிகரில்லா மணங்களே!
நிலைபெறும் குணங்களே!
ஒன்றாகவே பெற்றிட்ட
ஓரறிவின் உயிர்களே!
பாரடைந்த சிறப்பில்
பலன்தந்த வனப்பே!
வளர்கின்ற யாவிலும்
வாழ்கின்ற வண்ணமாய்
யாருன்னைப் படைத்தார்!
யாவரும் மகிழவே!…….
13. நாமொரு கொக்காய்
நெடிதான கால்களை உடையவனே!
நீண்ட கழுத்தையும் பெற்றவனே!
வெள்ளை நிறத்தாலே பிறந்துயர்ந்து
கொள்ளை அழகினால் கொக்கானாய்
வரப்பிலும் வயலிலும் பார்த்துநிற்பாய்
வலுவாக ஒற்றைக் காலில்நிற்பாய்
நண்டையோ மீனையோ உணவாக்க
நயமாக அசையாமல் காத்திருப்பாய்
தண்ணீர் பாய்கின்ற மடைமுகத்தில்
தளர்ந்து உடலை சுருக்கிடுவாய்
சிறிதான மீன்கள் ஓடினாலும்
சிலைபோல் நிலையாய் பாத்திருப்பாய்
உறுமீன் உலவிட வரும்வரை
உண்ணா நோன்பில் தானிருப்பாய்
பெரிதான மீனொன்று அருகில்வர
விரைவாய் கொத்தியே பிடித்துடுவாய்
உந்தன் தலையில் வெண்ணெய்வைத்து
உன்னையே பிடித்திட வழிசொன்னார்
குருடர்கள் வழிகாட்ட முனைந்திட்ட
மடமையும் வளர்கின்ற உலகமதில்
எவரெவர் எவைகளைச் சொன்னாலும்
அவரவர் மதியினால் தெளிவுபெற்று
நன்மைகள் பலனாய் வரும்வரை
நாமொரு கொக்காய் விழித்திருப்போம்……
14. அழைக்கும் சேவல்
கொக்கரக்கோ
சேவலொன்று
கூரைமீது
இருந்துகொண்டு
கூக்குரலாய்
கூவுது
குரட்டையொலி
மாற்றுது
நித்தம்நித்தம்
படிப்பதற்கு
நேரம்பார்த்து
அழைக்குது
நேர்மையாக
உழைக்குது
நேரமறிய
உதவுது
மெத்தனமாய்த்
தூங்குவோரை
மேன்மையாக
எழுப்புது
சுத்தமனம்
உள்ளவரே
சோம்பலின்றி
உயருவீர்
இன்னுமென்றும்
தூங்கினால்
இழிந்தழிவீர்
வாழ்வினில்…..
15. களித்துறங்கு!
கண்ணே! கண்மணியே!!
கருவிழியின் உள்ளொளியே!
தேனே! தேன்மொழியே!
தேடிவந்த எம்முறவே!
கண்ணுறங்கிக் களைப்பகற்று
கவலையின்றி நீயுறங்கு!
பொன்னேயென் பொக்கிசமே!
பொலிவோடே நிறைந்துறங்கு!
பாலூட்டத் தாயுமுண்டு!
பாலூட்டிட நானுமுண்டு!
தாலாட்டும் பாடலுண்டு!
தாளம்கேட்டு நீயுறங்கு!
எவருன்னை அடித்தாரோ!
ஏளனமாய் நினைத்தாரோ!
சந்ததியாய் வந்தவனே!
சமத்தாகப் படுத்துறங்கு!
அப்பாவோ அயல்நாட்டில்
அரவணைப்பில் நீவீட்டில்
சுற்றமேதும் இல்லாமலே
சுகமளிப்பேன் நினைத்துறங்கு!
தனம்சுமக்க வந்தவனே!
தரமளித்தாய் எங்களுக்கே!
அறிவுயரப் பிறந்தவனே!
அமைதியாய் சரிந்துறங்கு!
உயரினத்து உயிரானாய்!
உறவெனக்குத் தலையாவாய்!
உலகத்தினோ ரெண்ணமானாய்!
உயர்வுடனே களித்துறங்கு!…..
– தொடரும்
மின்னூலாகப் படிக்க
Leave a Reply