தென்றல் வீசும்: தொடர் 6

     கடைசியில் விரைவாகப் பேருந்து நிழல்கூடம் கட்டித்தருவதாகப் போக்குவரத்து ஆணையரும், பஞ்சாயத்துத் தலைவரும் உறுதிகூற மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தைக் கைவிடுவதாக் கூறினர். இவ்வாறு அர்ச்சனாவிற்கு ஏற்பட்ட தலைக்காயம் ‘நிழற்கூடம்’ கட்டித்தரும் உறுதிமொழிக்கு வித்திட்டது.

     மாணவர்கள் மதனையும், மற்ற நண்பர்களையும் தோளில் தூக்கி வைத்து வெற்றியைக் கொண்டாடினர். அர்ச்சனாவிற்கு ஏற்பட்ட தலைக்காயம்தான் அந்தப் போராட்டத்திற்கு முக்கியமான காரணம் என்று கூறினாலும், மதன் முதலில் களத்தில் குதித்து ஆரம்பித்து வைத்தபின்தானே போராட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. எனவே இந்த நேரத்தில் மதனை ‘ஒரு கதாநாயகனாகவே’ அனைவரும் கருதினர். சிறிதுநேரத்தில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

     இன்று இனிமேல் கல்லூரிக்குப் போகணுமா என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் அக்குழப்பம் சிலநொடிகளிலே காணாமல் போனது.

     ஆமாம். கல்லூரி முதல்வர் மாணவர்களைக், “கல்லூரிக்குப் புறப்படுங்கள்.” என்றுகூறிப், போலீஸ் வாகனங்களை நோக்கிச் சிரித்தபடியே கைநீட்டினார். இவர்களைக் கைது செய்ய வந்திருந்த வாகனம் இப்போது மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரியை நோக்கி புறப்படத் தயாராக நின்றது. ஏனென்றால் காவல் நிலையத்திற்கு இவ்வண்டிகள் இவர்களது கல்லூரிக்குச் செல்லும் வழியாகத்தான் திரும்பிச் செல்ல வேண்டும். ஏற்கனவே பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் கல்லூரிக்குப் போய்சேர நேரமாகும். அதுலவேற நேரமும் ரொம்பவே போயிடிச்சி. எனவே கல்லூரி முதல்வர் காவல்துறை அதிகாரிகளிடம் இதனைச் சொல்லி மாணவர்களைக் காவல்துறை வண்டியிலே கல்லூரிக்குச் செல்ல அனுமதியும் வாங்கிக் கொண்டார்.

     மாணவர்கள் ஒரு வண்டியிலும், மாணவிகள் ஒரு வண்டியிலுமாக அமர்ந்து கல்லூரிக்குப் புதுவொரு அனுபவத்துடன் போய்ச் சேர்ந்தனர்.

.

.

.

.

‘காவல்துறை உங்கள் நண்பன்.’

 *  *  *

 

     கல்லூரியில் மதியநேரம். மதிய உணவை முடித்துவிட்டு சோபாவும், அர்ச்சனாவும் கல்லூரி வளாகத்தைச் சுற்றி மெதுநடை போட்டபடி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வரும்போது மதன் வழக்கமாக உட்கார்ந்திருக்கும் பைக்-செட்டில் நண்பர்களோடு உட்கார்ந்திருந்தான்.

     அர்ச்சனா மதனைக் கண்டுவிட்டாள். தன்னை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கும், மருத்துவச் செலவிற்கும் துணையாய் இருந்த மதனுக்கும், அவனது நண்பர்களுக்கும் நன்றி சொல்லவில்லையே என்ற மனஸ்தாபம் அவளின் மனதில் இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அங்கிருப்பவர்களிடம் நன்றிசொல்லலாம் என முடிவெடுத்துத் தோழியை துணைக்கு வரும்படி அழைத்தாள்.

     சோபாவோ, “நேரமாச்சி. அப்புறம் பேசலாம்.” என்று மறுக்க,

     “ஏய், நான் எப்படிடீ தனியா போறது. அஞ்சு நிமிசம்கூட ஆகாது. உடனே போய் ஒரு தேங்க்ஸ் மட்டும் சொல்லிவிட்டு வந்திடலாம். வா……” என்று வற்புறுத்தி அழைத்தபடியே சோபாவின் கையைப் பலமாக இழுத்துக்கொண்டு அவர்களை நோக்கி நடந்தாள்.

 

-தொடரும்…

 

மின்னூலாகப் படிக்க

Spread the love