சாரல் கவிதைகள் – பகுதி 6

16. கழுதையே கல்யாணி!

 

எந்தன் கழுதையே கல்யாணி!

  எங்கே போனாய் சொல்வாய்நீ

உழைக்கும் இனத்தில் பிறந்தாய்நீ

  உரக்க கத்துவாய் இனிதாய்நீ

 

பொதிகள் சுமப்பதில் சுமைதாங்கி

  பொறுமை காப்பதில் இடிதாங்கி

அடித்தாலும் உதைத்தாலும் உன்பணியை

  ஆமையாய் மெதுவாய்ச் செய்திடுவாய்

 

சுவர்களில் ஒட்டிய போஸ்டரெல்லாம்

  சுவையாய் நாளுமே உண்டிடுவாய்

அழுக்கான துணிகளின் மூட்டையெல்லாம்

  அயராமல் அன்றாடம் சுமந்திடுவாய்

 

முதுகிலே சுமக்கின்ற உன்நிலையை

  முறையாக உணராத கொடியோர்கள்

முன்னால் வந்தால் கடித்திடுவாய்

  பின்னால் வந்தால் உதைத்திடுவாய்

 

சிக்கன் குனியாவெனும் காய்ச்சலுக்கு

  சிலருக்கு உன்பாலையும் அளித்திடுவாய்

சிக்கல்கள் நிறைந்திட்ட பயணத்திற்கு

  சிறந்த துணையாய் உதவிடுவாய்

 

குதிரை இனத்தில் பிறந்தவுன்னை

  குறுகிய மனத்தார் கழுதையென்பார்

வாழிய கழுதைகள் வளர்கவென்று

  வரவேற்க சுமையுடன் காத்திருக்கிறேன்……

 

 

17. தாத்தாவுடன் பேத்தி

 

தந்தையின் தந்தையே! தாத்தாவே!

தரணியின் உயரினத் துயருவே!

வாழ்வித்த உமையாம் வதைக்கின்றோமே – முதிய

வாழ்வினை முதியோரில்லம் திணிக்கின்றோமே!

 

            ஓடியோடி விளையாடு தாத்தா – நீயும்

            ஓய்வெடுக்கக் கூடாது தாத்தா!

            கூடிக்கூடி குழப்பிவிடும் தாத்தா – எவர்

            குறையையும் நிறைவிலாக்கும் தாத்தா!

 

முதன்மைகள் இழந்துவிட்ட தாத்தா -உனக்கு

முடியாமையும் தொடர்ந்திட்டதே தாத்தா!

எதுவுமே நிலைத்திடாதே தாத்தா – உலகில்

எல்லாம் மாயைதானே தாத்தா!

 

            சகித்துதவும் பண்புனக்கே உறவு -எவரோடும்

            சார்ந்திருக்கும் குணமுனக்கே உயர்வு

            வாழ்ந்ததெல்லாம் நினைவில் வரும்தானே -ஒன்றி

            வாழ்ந்ததெல்லாம் நிறைவில் லாததுதானே!

 

உலகத்தின் சுழற்சியிலே தாத்தா -நிகழும்

உயிருறவும் பயிற்சியாகும் தாத்தா

இயற்கையின் நியதிதானே தாத்தா -நாமும்

இயங்கிமாயும் குப்பைதானே தாத்தா!

 

            வளர்வதெல்லாம் சாவுக்குத்தான் தாத்தா -வரும்

            வரவெல்லாம் செலவுக்குத்தான் தாத்தா!

            அறிவெதுவும் முழுமையாகா தாத்தா – நாமே

            அற்பகால உயிர்கள்தாமே தாத்தா!…..

 

 

18. நல்லுறவுகளே நீவளர்க!

 

அம்மா தருவார் தாய்ப்பால்

  அப்பா தருவார் தமிழ்ப்பால்

அறிஞர் தருவார் முப்பால்

  அறிவார் தருவார் நட்பால்

 

உணவுகள் சுவைக்கு உப்பு

  உதவிடுமே உறவுக்கு அன்பு

உயர்வுகள் நிலைக்கு படிப்பு

  உடம்பின் தெம்புக்கு உழைப்பு

 

சொல்வதை விளக்குவதே வாழ்க்கை

  சோம்பலைத் தடுப்பதே யாக்கை

சொந்தங்கள் அழைக்குமே காக்கை

  சோகத்தில் ஆழ்த்திடுமே மூர்ச்சை

 

காண்பவை கண்ணாலே தெளியும்

  காரியங்கள் செய்தாலே விளையும்

காதல்கள் தவறாலே அழியும்

  காசுகள் பொய்யாலே குவியும்

 

அன்பையுயும் தெம்பையும் நம்பிடாதே

  அகந்தையும் அகன்றதும் ஒன்றாதே

அற்பமாய் எதையுமே எண்ணாதே

  அகிலத்தில் எதுவுமே நிலைக்காதே

 

அமுதூட்டிய அன்னையே நீவாழ்க

  அறிவூட்டிய அருந்தமிழே நீவளர்க

நாமாகிடும் நல்லுறவுகளே நீவளர்க

  நாமேவிடும் நல்லுறவகளே நீவளர்க……

 

– தொடரும்

 

மின்னூலாகப் படிக்க

Spread the love