தென்றல் வீசும்: தொடர் 7

     இங்கே இவர்களில் ஒருவன், சென்றவாரம் அவன் சென்ற கேரளா சுற்றுலாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். அங்கிருந்த படகு வீடுகள், படகு சவாரி, வீடுகள் ஒவ்வொன்றின் தோற்றம், ஒவ்வொரு வீட்டை சுற்றியிருக்கும் இடைவெளி என ஒவ்வொன்றாய் அடுக்கிக் கொண்டே சொல்ல, இதனைக் கேட்டுக்கொண்டிருந்த அவர்களில் ஒருவன்,

     “அப்போ……, நீ கேரளா போய் வீட்டை மட்டும்தான் நோக்கியோ…… வேற எதையும் நோக்கலையோ?” என்று கிண்டலடித்துப் பேச, குறும்புப் பேச்சை இவர்கள் தொடங்கினர். அதேநேரத்தில் அர்ச்சனாவும், சோபாவும் அங்குவந்து சேர்ந்தனர். இவர்கள் இருவரையும் பார்த்தவுடன் கூட்டம் அமைதியானது.

     “அண்ணா!” என்று அவர்களைப் பார்த்து அழைத்தாள் அர்ச்சனா. மதனும், மற்றவர்களும் திரும்பிப் பார்த்தனர்.

     “ரொம்ப தேங்க்ஸ் அண்ணா, காலையிலே சொல்லலாமுண்ணு நெனைச்சேன். ஆனா எந்த வாய்ப்பும் சரியா அமையல. தப்பா நினைக்காதீங்க.” என்றதும்,

     “பரவாயில்லை. நாங்களும் அவ்வளவு பெருசாவெண்ணும் செய்யல. நம்ம காலேஜ் பொண்ணுண்ணு தெரிஞ்சதும் சும்மா இருந்தா நல்லாவாயிருக்கும்.” என்று மதனும்,

     “சரிதாண்ணா…… இருந்தாலும் தேங்க்ஸ் சொன்னாதானே எனக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.” என்று அர்ச்சனாவும் கூற சோபாவும், மற்றவர்களும் அமைதியாக நின்றனர். அப்போது மதனின் பார்வை சோபாவின்மீது திரும்பியது.

     “உன்னோட பிரெண்டுதான் ரொம்ப பயந்து போயிட்டாங்க.” என்று மதன் சோபாவைப் பார்த்து கூற, பதில்பேச வந்தும் பேசாமல் நின்றாள் அவள். அப்போது மற்ற தோழியரும் இரு பெண்களைக் கூப்பிடவே இருவரும் கிளம்பத் தயாராகி,

     “சரிண்ணா! அப்போ நாங்க கிளம்புறோம். பிரெண்ட்ஸ் எல்லாம் கூப்பிடுறாங்க. தப்பா நினைக்காதீங்க. நேரமாச்சி.” என்றபடி அர்ச்சனா திரும்ப, சோபாவும் சிறுபுன்னகையை மதன்மீது வீசியபடி திரும்பினாள். மதனும் பதிலுக்கு சிறுபுன்னகையுடன் ‘போய் வாருங்கள்’ என்பதுபோல தலையை லேசாக ஆட்டியபடி சைகையால் கூறினான்.

     அப்போது அவர்களில் ஒருவன், “என்னடா……, ஏதோ தப்பா தெரியுதே!” என்று கேட்க,

     “டேய்….., அந்தப் பொண்ணு தங்கச்சி மாதிரிடா.” என்றுகூறிக், கேட்டவன் முதுகில் செல்லமாக ஒரு குத்துவிட்டான் மதன். உடனே மற்றொருவன்,

     “அப்போ….. பக்கத்தில துணைக்கு வந்த பொண்ணு யாருடா?” என்று சற்றுக் கேலியுடன் கேட்க,

     “தப்பா பேசாதீங்கடா…… அந்தப் பொண்ணு நல்ல பொண்ணுடா.” என்று சமாளித்தான்.

     “மச்சி, இரண்டாவதா வந்த பொண்ணு தங்கச்சி கிடையாதாம். நல்ல பொண்ணாம்டா.” என்று ஒருவன் சத்தமாய்க் கூவினான்.

     “ஆமாண்டா மச்சான். பெட்ரோல் செலவுக்கு பணம் கொடுத்தா, அந்தப் பொண்ணு நல்ல பொண்ணுதாண்டா.” என்று மதனிடம் குத்துபட்டவன் கிண்டலடிக்க, தன்னை இனி விடமாட்டர்கள் என்றுபுரிந்த மதன்; இருந்த இடத்திலிருந்து மெதுவாக நழுவினான்.

     இவர்கள் இங்கே கிண்டலடித்துச் சிரிப்பதை சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்த சோபா, அமைதியாக கவனித்துக் கொண்டே இருந்தாள்.

-தொடரும்…

 

மின்னூலாகப் படிக்க

Spread the love