சாரல் கவிதைகள் – பகுதி 7

19. தோசைமாவின் வளர்ச்சி

 

அரிசியும் உழுந்தும் ஊறவைத்து

  அரைத்தே சேர்த்திட்ட மாவொன்று

கைகளின் வினையால் பலவிதமாய்

  அரியதாய்ப் பண்டங்கள் தந்திடுதே

 

தோசையை சுடுகின்ற மாவாலேயே

  இட்டலியும் அவிப்பார் சிலநாளே!

ஊத்தப்பம் ஆக்குவார் அந்நாளே

  உயரிய தோசைகளும் தொடர்வாரே

 

நெய்கல்லில் தடவினால் நெய்தோசை

  பரப்பாய் தடவினால் பேப்பர்தோசை

உள்ளியைச் சேர்த்தால் ஆனியன்தோசை

  ரவையினைச் சேர்த்தால் ரவைதோசை

 

மசாலா சேர்த்தால் மசால்தோசை

  மல்லிப்புதினா கீரையுடன் மணப்பொருளும்

மசக்கியே சேர்த்தால் சைவத்தோசை

  முட்டையைச் சேர்த்தால் முட்டைதோசை

 

முறுகலாக விரித்தால் முறுகல்தோசை

  எத்தனை வகையாய் வடிவெடுக்கும்

எளிமையாய் தயாரித்த மாவொன்று

  எல்லாருக்கும் தேவையாய் அமைவதனால்

 

அய்யர் செட்டியார் உணவங்களில்

  அறுசுவை சட்னிசாம்பார் உதவியுடன்

அனைத்தையும் உருவாக்கும் மாவொன்றால்

  அள்ளியே கொட்டுறார் பணம்தன்னை……

 

 

 

20. கஞ்சன் வீட்டுக் கல்யாணம்

 

கஞ்சனின் வீட்டுக் கல்யாணமாம்

கண்டவ ரெல்லாம் வரலாமாம்

கனக சுந்தரம் மணமகனாம்

கனக சுந்தரி மணமகளாம்

 

ஓய்வு நாளிலே திருமணமாம்

ஒருவரும் தவறவே கூடாதாம்

பத்தரை மணிக்கு தாலிகட்ட

பந்தியும் உடனேயே வைப்பாராம்

 

மணமகள் வீட்டார் நாமாகவே

மறுவீடு மாலையில் கண்டிடலாம்

சீதனப் பொருட்கள் வாங்கியாச்சி

சீர்வரி சைகளும் செய்திடுவோம்

 

உறவினர் ஊரார் வாருங்கள்

உதவிகள் யாவையும் அளியுங்கள்

பயணம் செய்திட பஸ்சுண்டு

கட்டணம் செலுத்தி வந்திடுங்கள்

 

மொய்பணம் அதிகமாய் தாருங்கள்

முன்பண மாகவே உதவுங்கள்

குறையென எதனையும் எண்ணாதீர்

குடும்பமாய் வருவதையும் எண்ணாதீர்

 

செல்வது போலவே வந்திடணும்

செலவும் அவரவர் செய்திடணும்

எந்தன் குணத்தினை அறிந்துவிட்டீர்

எந்நாளும் என்வழியினை மறக்கமாட்டீர்……

 

***

21. ஆலமரம்

 

ஆயிரம் ஆயிரமாம் மரங்களில்

ஆகாயம் மறைக்கும் அழகுமரம்

ஆறுதல் அளித்திடும் அரியமரம்

ஆதவன் அடிதொடா ஆலமரம்

 

உழைத்தே களைக்கும் ஏழைகளும்

உயரிய போர்படை வீரர்களும்

ஏருழும் மாடுடன் உழவர்களும்

எங்கோ சென்றிடும் பயணிகளும்

 

குப்பென வியர்த்திடும் வேளையிலே

குளிரினை நாடிடும் தேவையிலே

நிழலின் அருமையை உணர்வோர்க்கு

நிம்மதி வழங்கியே இதமளிக்கும்

 

காகங்கள் விரும்பிடும் பழமளிக்கும்

காண்பவர் மகிழ்ந்திடும்saral-kavithaigal-6 அழகொளிரும்

கடுகாய் விதைகளும் நிறைந்திருக்கும்

கால்பல பதித்ததாய் நிலைத்துநிற்கும்

 

ஆலம்பால் தைலம் அருமருந்தாய்

ஆறிடாப் புண்ணையும் ஆற்றிடுமே

வேருடன் விழுதுஞ்சில் பற்களுக்கு

விரும்பும் பலத்துடன் நிறைவளிக்கும்

 

அசோகர் வளர்த்திட்ட ஆலமரங்கள்

அரசருள் சிறப்பிக்க நிற்கின்றதே

அறிவியல் முதிருமிக் காலத்திலே

அவசியம் மரங்களாய் உயர்கின்றதே……

 

***

– தொடரும்

 

மின்னூலாகப் படிக்க

Spread the love