தென்றல் வீசும்: தொடர் 8

     சில நாட்கள் இப்படியேச் சென்றது. எப்பொழுதாவது இவர்கள் இருவரும் நேருக்கு நேராகச் சந்தித்தால் பெயருக்காக மட்டுமே ஒரு சிரிப்பு அதுவும் இரண்டு நொடி சிரிப்பினை மட்டுமே தங்களுக்குள் பரிமாறிக்கொள்வர். ஆனால் இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அண்ணலையும், அவளையும் சிக்க வைத்த நிகழ்ச்சி விரைவில் வரவிருந்தது. சொல்லிவைத்தாற்போல் அந்நிகழ்ச்சியும் நடந்தது.

     இவர்களது கல்லூரியில் பேச்சுப்போட்டி பெரிய அளவில் நடைபெறத் தொடங்கியது.

     கல்லூரி நிர்வாகம் கடந்த சில வருடங்களாக மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியைச் சிறப்பாக நடத்திவருகிறது. இந்த வருடமும் அதனைத் தொடரக் கல்லூரி நிர்வாகம் முடிவெடுத்தது. அதற்காகத்தான் அர்ச்சனாவின் பெயரைத் தமிழாசிரியர் எழுத, அதன்பின் நடந்த கலகம் நல்லமுறையில் முடிந்தது என்பது ஏற்கனவே தெரிந்த கதைதான்.

     பேச்சுப்போட்டியில் பல கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இதனால் கல்லூரி சற்றுக் களைகட்டியது என்றுதான் சொல்லவேண்டும்.

     ஆசிரியர்களில் பலர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் ஈடுபட்டிருந்ததால் மாணவர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட வகுப்புறைக்கு செல்வதும், வகுப்பறைக்குள் இருந்து அரட்டையடிப்பதுமாக இந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

     மதனும், அவனது நண்பர்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள். கல்லூரியில் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடைபெற்றால் அன்றைய தினம் முழுவதும் வகுப்புக்குள் செல்லக்கூடாது என்ற உயர்ந்த சிந்தனையுடையவர்கள்.

     எனவே இவர்கள் வகுப்பறைக்குச் செல்லாமல் வழக்கமாக நிற்கும் பை-செட்டில் நின்றுகொண்டிருந்தனர்.

     வேறுசில மாணவர்கள் பேச்சுப்போட்டியை பயன்படுத்திச் சுதந்திர பறவைகளாகக் கல்லூரி வளாகத்தில் சுற்றித் திரிந்துகொண்டிருந்தனர்.

     அதேபோலத்தான் அர்ச்சனாவும், சோபவும் கல்லூரி வளாகத்தில் நடந்துபோயிக்கொண்டிருந்தனர். தலையில் காயம் சிறிது குணமாயிருந்தும் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி தலையில் கட்டப்பட்ட கட்டை இன்னும் கழற்றாமல் இருந்தாள் அர்ச்சனா. இவளின் காயத்திற்குப் பலர் பரிதாபப்பட்டாலும், சிலரின் கிண்டலுக்கு ஆளாகும் நிலையும் இருக்கத்தான் செய்தது. சிலர் அர்ச்சனாவின் தலைக்கட்டைப் பார்த்து, “தோளில் ஒரு துப்பட்டா…… தலையில் ஒரு துப்பட்டா!” என்று கிண்டலடித்தனர். அர்ச்சனாவும் அவர்களை சும்மா விடுவதில்லை; பதிலுக்கு ஏதாவது கூறித் தன்னை கிண்டலடிப்பவர்களை வாயடைக்கச் செய்துவிடுவாள்.

     இது ஒருபுறம் இருக்க, இவர்கள் இருவரையும் வழியில் வைத்துக் காண்கிறார், தமிழாசிரியர். மாணவிகள் இருவரும் அவருக்கு வணக்கம் செலுத்தினர். பதிலுக்கு அவரும் வணக்கம் செலுத்திவிட்டு அர்ச்சனாவைப் பார்த்து சிரித்தபடி கேட்டார்,

     “என்ன அர்ச்சனா….., பேச்சுப்போட்டிக்குத் தலைப்பு கொண்டு வருவேண்ணு பார்த்தேன், ஆனா இப்படித் தலையில காயத்தோட வந்திருக்கீயே! இன்னுமா குணமாகல? இல்ல….., போட்டியில இருந்து நைசா நழுவப் பார்க்கிறியா?”

     தமிழாசிரியர் தன்னை மேடையில் பேச வைப்பதிலேயே குறியாய் இருப்பதை நினைத்து மனதில் சிரித்தாலும் வெளிக்காட்டாமல்,

     “ஏன் சார் இப்படி கேட்கிறீங்க. நான் ஒண்ணும் வேணும்னு செய்யல, காயம் இல்லாம இருந்திருந்தா நானும் இப்போ போட்டியில பேசியிருப்பேன். இந்த வருசம் போகட்டும் சார். அடுத்த வருசம், கடைசி வருசம்……, கண்டிப்பா நான் போட்டியில கலக்குவேன்.” என்று உறுதியோடு கூறினாள்.

     “பரவாயில்லமா, சும்மாதான் கேட்டேன். உடம்பை நல்லா கவனிச்சிக்கோ. முதல்ல காயம் சரியாகட்டும். அப்புறமா உன் விருப்பப்படியே என்ன வேணுமுண்ணாலும் செய்யலாம். என்னால முடியுற அனைத்து உதவியையும் கண்டிப்பா பண்ணுவேன்.” என்றபடி ஆசிரியர் வானத்தை பார்க்க, கருமேகக்கூட்டம் மழையைப் பொழியத் தயாராக வந்துகொண்டிருந்தது.

     “உள்ளே பேச்சுமழை பொழிய பதிலுக்கு தமிழன்னையும் அவள் பங்கிற்கு தூறல்மழையை நேரம்பார்த்து அனுப்பியுள்ளாள்.” என்று கூறிவிட்டுப் போட்டி நடக்கும் அரங்கினை நோக்கி வேகமாகச் சென்றார் தமிழாசிரியர்.

     மழைமேகம் சில நொடிகளிலே லேசான தூறலோடு கூடிய மழைக்காற்றை மாணவர்களுக்குத் தூதுவிட்டது, பத்திரமாக ஒதுங்கி நிற்கும்படி கூற. அர்ச்சனாவும், சோபாவும் வேகமாகச் சென்று அருகில் இருந்த பெண்களுக்கான பைக்-செட்டை அடைந்தனர். மாணவர்களுக்குப் பைக்கை நிறுத்த பைக்-செட் இருப்பதுபோல, மாணவிகளுக்கும் தங்கள் வாகனங்களை நிறுத்த மாணவர்களின் பைக்-செட்டிற்கு எதிர்த்தாற்போல் ஒரு பைக்-செட்டினைத் தனியாக அமைத்துக் கொடுத்திருந்தது கல்லூரி நிர்வாகம்.

     மற்றசில பெண்களும் நனைக்கும் மழையிலிருந்து தப்பிக்க அந்தப் பைக்-செட்டிற்கு வந்து சேர்ந்தனர். மழையில் நனையாமல் அதேநேரம் மழையோடு போட்டிபோட்டவாறே வேகமாக பைக்கில் வந்தான் மதன்.

-தொடரும்…

 

மின்னூலாகப் படிக்க

Spread the love