சாரல் கவிதைகள் – பகுதி 8

22. பெருமைசேர்க்கும் காகம்

 

காலையில் காகங்கள் கரையுது

  காரியம் செய்யவே விரையுது

கதிரவன் வரவுக்காய்க் களிக்குது

  கதவுகள் திறப்பதைப் பார்க்குது

 

பறந்து பறந்துமே அலையுது

  பார்க்கும் உணவினை எடுக்குது

பகிரும் பண்பிலே அழைக்குது

  பசியையும் உண்டு குறைக்குது

 

சாய்ந்து சரிந்து பார்த்தாலும்

  சாதியும் மதமும் அதற்கில்லை

சாத்திரம் நம்போல் பார்ப்பதில்லை

  சமத்துவம் நிலைத்திட மறப்பதில்லை

 

விரும்பியே வேம்பின் பழமுண்டு

  வீரியம் மிகுந்தே வாழ்ந்திடுதே

தோட்டியின் வேலையில் தொடர்ந்திருந்து

  தோய்வற்று உழைத்தே மகிழ்கின்றதே

 

அடைகாத்து குஞ்சுகள் பேணுவதில்

  அக்கரை காட்டியே வளர்க்கின்றதே

பறக்கின்ற வரையில் பாதுகாத்து

  பார்ப்பவர் எவரையும் கவர்கின்றதே

 

கருமை நிறத்திலே இருந்தாலும்

  அருமை கருத்தின் வழிநின்று

பெருமை சேர்க்கும் காகத்தின்

  திறமை உயர்வை மதிப்போமே…….

 

 

23. தவளையும் குரலால்

 

தாத்தா! தாத்தா! வாருங்கள்!

  தவளைக் கூட்டத்தைப் பாருங்கள்

தரையிலும் தண்ணீரிலும் வாழ்ந்திடுமாம்

  தழைத்திடும் மழைவர அழுதிடுமாம்

 

கட்டைக் கால்களால் தன்னுடலை

  கருத்தாய் தாங்கியே பிழைத்திடுமாம்

நெட்டைக் கால்களின் உதவியினால்

  நீளமாய் தாவியே குதித்திடுமாம்

 

நீண்ட நாக்கினில் பசையுண்டாம்

  நீட்டியே பூச்சிகள் பிடித்திடுமாம்

தாங்காத ஒலியினை எழுப்புவதால்

  தனையுண்ணும் பாம்புக்கு இரையாகுமாம்

 

சீனத்து மக்களின் உணவினிலே

  சிறந்து இணைந்து ருசித்திடுமாம்

அறிவியல் ஆய்வுக்கும் பயன்படுமாம்

  அற்பரால் நொந்தே உயிர்விடுமாம்!…….

 

***

 

24. மீனம்மா…..!

 

மீனே! மீனே! மீனம்மா!!

  மீனாய்ப் பிறந்தாய் ஏனம்மா?

மீனவ மக்கள் வளர்ந்திடவும்

  மீன்பிடித் தொழிலும் உயர்ந்திடவா?

 

கடலிலே வாழ்வதைத் தேர்வுசெய்தாய்

  கூடையிலே விற்பதை நேர்வுஎன்பாய்

உப்புச் சுவைதனில் உலவுகின்றாய்

  உண்பவர் அவையில் உறவமைத்தாய்

 

எத்தனை வகையாய் நீபிறந்தாய்

  எத்தனை வழிகளில் நீசிறந்தாய்

ஊனையும் உணவாய் அளிக்கின்றாய்

  உலகோர் உயர்வாய் சமைக்கின்றார்

 

பிணமாய் கரையில் வந்தாலும்

  பணமாய் சிலரில் வாழ்கின்றாய்

உலர்ந்து கருவாடு ஆனாலும்

  உணர்ந்து உயர்வோடு நிலைக்கின்றாய்

 

இலவச வரவாய் வருகின்றாய்

  இயற்கையின் கொடையாய் சிறக்கின்றாய்

தன்னினம் தன்னையும் உண்ணுகின்றாய்

  தண்ணீரில் செல்வமாய் கொழிக்கின்றாய்

 

விரிந்து பரந்திட்ட கடலினிலே

  வியாபார உயிராய் விளைகின்றாய்

சுரந்து அளித்திடும் உயர்வுகளை

  சுத்தமாய் பேணிடேல் நீயழிவாய்……

 

 

– தொடரும்

 

மின்னூலாகப் படிக்க

Spread the love