தென்றல் வீசும்: தொடர் 9

     அரங்கத்திற்கு உள்ளே பேச்சுமழை அடைமழையாக, அதே நேரத்தில் அரங்கத்திற்கு வெளியே தூறல்மழையானது தன்னை அடைமழையாக்க தயாராகிக்கொண்டிருந்தது.

     பைக்கினை பைக்-செட்டினுள் மழை நனையாமல் பத்திரமாய் வைத்துவிட்டு மழைப்பொழிவின் ஈரப்பதத்தை ரசித்துக் கொண்டிருந்தான் மதன். இவன் பைக்-செட்டினுள் நின்றுகொண்டிருப்பதை எதிர்புறத்தில் நின்ற அர்ச்சனாவும் காண்கிறாள். உடனே தனது கையைத்தூக்கித் தான் இங்கே நிற்பதாக சைகை காட்டினாள்.

     எதிரே பைக்-செட்டிலிருந்து தன்னை நோக்கி யாரோ கைகாட்டுவதை கவனித்த மதன், அந்த நபர் யாரென்று கூர்ந்து கவனித்தான். அங்கே அர்ச்சனா நின்று கொண்டிருந்தாள். உடனே அர்ச்சனா,

     “ஹாய் அண்ணா!” என்றுகூற இவனும்,

     “ஹாய்!” என்றபடி ஒரு கையைத் தூக்கிப் பதிலுக்கு சைகை காட்டிக்கொண்டே அவளின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பெண்ணை நோக்கினான். அங்கே அர்ச்சனாவிற்கு அருகில் சோபா நின்றுகொண்டிருந்தாள்.

     அவளைக் கண்டதும் மதனின் மனதில் ஒரு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியுடனே அவளைப் பார்த்துச் சிரித்தான். அவளும் லேசான புன்முறுவலுடன் அவனைப் பார்த்துச் சிரித்தாள். சிலநொடிகளிலே மழையின் தாக்கம் அதிகரித்தது. எதிரே நிற்பவர் யாரென்று தெரியாத அளவிற்கு மழை பொழிந்து தள்ளியது.

     சிறிதுநேர இடைவெளிக்குப்பின் மழையின் வேகம் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. கனமழை இப்போது பழையபடி தூறல்மழையாக விழுந்துகொண்டே இருந்தது.

     அப்போது மதன் ஏதேச்சையாகத் திரும்ப, அதேநேரத்தில் சோபாவும் மதனைப்பார்க்க, ஒருநொடியில் இருவரின் பார்வையும் ஒன்றாய்ச் சங்கமித்தது. அவனுக்கு அப்பார்வையை மாற்ற மனமில்லாமலும், அவளுக்கு அப்பார்வையில் இன்னும் நனைய விரும்பியவள் போலும் சில நொடிகள் இருவரும் அப்படியே பிரம்மித்து நின்றனர்.

     இங்கே இவர்கள் இருவரையும் மழை நனைக்காது விட்டாலும், இவர்களின் பார்வை இருவரையும் முழுமையாய் நனைத்துவிட்டது.

     பெருமூச்சுடன் தங்களது காதல் பிறந்த கதையை நினைத்தபடி இயல்புநிலைக்குத் திரும்பினாள் சோபா. கையிலிருந்த அவர்களது திருமணபோட்டோவில் ஏற்கனவே தடவியிருந்த பசை காய, உடனடியாக அதனை ஆல்பத்தின் பழைய இடத்தில் கவனமாய் ஒட்டினாள். நேரம் இன்னும் இருட்டவே ஆல்பத்தைப் பத்திரமாக அலமாரியில் வைத்துவிட்டு சமையலைக் கவனிக்கச் சென்றாள்.

     சோபா அவளது சமையல் வேலையைத் தொடர்கிறாள். நாமோ கதையில், காதல் பிறந்த இடத்திலிருந்து அடுத்து என்ன நடந்தது என்பதை அறிய அவ்விடத்திலிருந்து தொடங்குவோம்.

 

-தொடரும்…

 

மின்னூலாகப் படிக்க

Spread the love