சாரல் கவிதைகள் – பகுதி 9

25. தரைசாயும் வாழைமரம்

 

வாழைமரமே! வாழைமரமே!!

  கிளைகளில்லா வாழைமரமே!

 

தன்னிலம் தழைத்திட

  தடையேதும் இல்லாத

தாராளம் பெற்றிடும் வாழைமரமே!

 

திருப்தியே அளித்திட

  திருமணப் பந்தலிலே

திருவாக உயர்ந்திடும் வாழைமரமே!

 

திருவிழா சிறப்புற

  தெருத்தெரு எங்கிலும்

தேர்ந்தநற் குலையுடன் நிற்பாய்

 

இனியதாய் பலவித பழமளிப்பாய்

  இறைவனும் உண்பதாய் களித்திருப்பாய்

வறுப்பும் வத்தலும் நீயாவாய்

  வளம்சேர தண்டும் பூவுமாவாய்

 

பன்றிகள் குட்டிகள் ஈன்றதுபோல்

  பலபல கன்றுகள் ஈன்றிடுவாய்

நட்டவர் எவரும் நலியாமல்

  நலமுடன் தன்னையும் தந்திடுவாய்

 

உனக்கென்று ஒருவிழா நானெடுப்பேன்

  உறவென்று முன்நின்று வரவேற்பாய்

நிலையில்லா வாழ்க்கையை பார்த்தவுடன்

  நில்லாமல் மடிந்தே தரைசாய்வாய்…..

 

26. சேரிடம் உணராத…

 

பசுவும் பன்றியும் ஒரேவீட்டில்

பாசமாய் வளர்த்தார் கருப்பண்ணன்

இரண்டும் ஒன்றாய் வளர்ந்ததனால்

இணைந்தே மேய்ந்திடும் வெளியினிலே

 

கிழங்கின் கப்பியும் தவிடுமாக

கிளறும் பன்றிக்கு உணவுண்டு

புல்லும் வைக்கோலும் தனியுணவும்

புசித்திட பசுவுக்கு தினமுண்டு

 

கூட்டில் உறங்கிடும் பெண்பன்றி

கொட்டியில் தூங்கிடும் கோமாதா

இரவினில் மட்டுமே பிரிந்திருக்கும்

இணைபோல் பகலினில் உடனிருக்கும்

 

வெளியிலே மேய்கின்ற வேளையிலே

வேண்டும் துணையுடன் கூடியதால்

இரண்டும் கற்பமாய் ஆனதுவே

இனிதாய் சிசுயீன்று மகிழ்ந்ததுவே

 

கன்றொன்று பெற்றது பசுமாடு

பலகுட்டிப் போட்டது பெண்பன்றி

குட்டிகள் அனைத்தும் வளர்ந்துவர

குதுகலம் அடைந்தன தாயினங்கள்

 

ஒன்றாய் மேய்கின்ற வேளையிலே

பன்றிகள் உண்பதை கன்றுண்ண

பதறியே நொந்ததே பசுதானும்

சேரிடம் உணராத நிலையினிலே

 

பிறவிக் குணங்கள் போகாது

பழக்க தோசங்கள் விலகாது

நினைக்கும் எதுவும் நிலைக்காது

நிம்மதி உலகில் கிடைக்காது…..

 

27. சொறிநாயின் ஏமாற்றம்

 

ரோட்டோரம் அமைந்த ஓலைக்கடை

  போட்டாரே செவிட்டுத் தாத்தாக்கடை

சூட்டோட எடுத்தார் உழுந்துவடை

  பாட்டோடே வைத்தார் தட்டிலதை

 

பார்த்தே இருந்தது அணிலொன்று

  பக்கத்தில் படர்ந்த வேப்பனிலே

விரைந்து துள்ளியே வடையதனை

  கவர்ந்து மறைந்தது மரத்தினிலே

 

அதனைக் கண்டிட்ட சொறிநாயும்

  அண்ணாந்து பார்த்து “அணிலண்ணே!

குதித்தென்றும் மகிழ்ந்திடும் நீயின்றேன்

  குவித்திட்ட கையுடன் இருப்பதென்ன?

 

வனப்பான உந்தன் முதுகினிலே

  வண்டொன்று கடிப்பதை உணரலையா?

அடித்து விரட்டிடு” என்றதுடன்

  ஆவலாய் வடைக்காய் காத்திருக்க

 

தந்திரம் உணர்ந்த அணிலடுத்த

  கிளைக்கு வடையுடன் சென்றிடவே

ஏமாந்த சொறிநாயும் வருந்தியது

  வீணான முயற்சியால் நாணியது!…..

 

– தொடரும்

 

மின்னூலாகப் படிக்க

Spread the love