தென்றல் வீசும்: தொடர் 10

     வெளியே மரங்களும், செடிகளும், புற்களும் மழையில் நனைய, இவர்கள் இருவரும் பார்வையால் நனைந்து கொண்டிருந்தனர். இவர்கள் காதல்மழையில் அதிகநேரம் நனைவதை தடுக்க வந்துவிட்டது மதனின் நண்பர்கள் கூட்டம். அவனுக்குப் பின்னால் நின்றபடி இங்கே நடப்பதை அமைதியாக வேடிக்கைப் பார்த்தவர்களால் இதற்குமேலும் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒருவர் மற்றவரைப் பார்த்து,

     “அடங்கப்பா, மழை முடிஞ்சு போச்சுடா! சீனை மாத்துங்கடா…..” என்று குரலெழுப்பி இந்தக் காதலர்களை (இல்லை-இல்லை காதலிக்கப் போகிறவர்களை) தன்னிலைக்குத் திருப்பினர்.

     அங்கே மழை முடிந்து ஐந்து நிமிடங்கள் ஆகிவிட்டது. வெட்கத்தால் நாணிச்சிவக்கிறாள் சோபா. மதனும் தன்நிலையை நண்பர்கள் அறிந்துவிட்டதை உணர்ந்து தலையைக் கவிழ்க்கிறான்.

     இங்கே இவர்களிடையே ஒரு பிரளயம் நடந்திருப்பதைப் பற்றி துளிகூட தெரியாத அர்ச்சனா, சோபாவிடம்,

     “மழை முடிஞ்சிருச்சி! வா போகலாம்.” என்றுகூறி அவளின் கையைப்பிடித்து இழுக்க, வேறுவழியில்லாமல் கண்களால் விடைபெற்றுக்கொண்டு தோழியோடு வகுப்பறையை நோக்கி நடக்கத் தொடங்குகிறாள் சோபா.

     மதனின் நண்பர்கள் அவனைச் சூழ்ந்தபடி நின்றனர். தப்பிப்பதற்கும் வழியில்லை. அவர்களின் நடுவே அப்படியே சரணடைந்தான். நண்பர்களின் விசாரணை தொடங்கியது.

     ஒவ்வொருவரும் கேள்விகளை கேட்கத் தொடங்கினர்.

நண்பர்கள் :     “என்ன காதலா?”

மதன்            :     ‘மவுனம்’

நண்பர்கள் :     “பொண்ணோட பெயர் என்ன?”

மதன்            :     ‘மவுனம்’

நண்பர்கள் :     “என்ன படிக்கிறா?”

மதன்            :     ‘மவுனம்’

நண்பர்கள் :     “ஏதாவது பேசியிருக்கீங்களா?”

மதன்            :     ‘மவுனம்’

     மதனுடன் அப்பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் நண்பர்கள் இக்கூட்டத்தில் இல்லாமல் போயினர். நண்பர்களின் கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில்சொல்லாமல் மவுனமாகவே நின்றுகொண்டிருந்தான் மதன். இதனால் பொறுமையை இழந்த நண்பர்களில் ஒருவன்,

     “மச்சி, இவன் எதுவுமே பேசமாட்டான். இந்தப் பொண்ணை இவன் தினமும் ஒரு பஸ்-ஸ்டாப்புல வெயிட் பண்ணுறானுல்ல, அங்க ஏதோ பார்த்ததுமாதிரி நியாபகம் இருக்கு. அந்த ஏரியா பசங்ககிட்ட கேட்டா எல்லாமே தெரிஞ்சிடும்.” என்று சொல்ல, மதனைச் சுற்றி நின்ற மற்ற நண்பர்கள் உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

     இவர்கள் யாரிடம் விசாரிக்க நினைத்தார்களோ, அவர்களே சொல்லிவைத்தாற்போல் அந்நேரம் பார்த்துப் பைக்-செட்டை நோக்கி வந்துகொண்டிருந்தனர். மதனின் முகத்தில் 1000 வாட்ஸ் பல்பின் வெளிச்சம் வீசத் தொடங்கியது.

     “நான் பண்ணுறனோ இல்லையோ, நீங்க நல்லா பண்ணுறீங்கடா.” என்றுகூற அருகில் நின்றவர்களோ சிரிக்கத் தொடங்கினர். அதேநேரத்தில் மற்ற நண்பர்களும் இவர்களோடு ஐக்கியமானார்கள்.

     மதன் காதலில் விழுந்துவிட்டான் எங்கிற தகவல் மொத்த நண்பர்களுக்கும் பரிமாறப்பட்டது. மழை இவர்களின் காதலுக்கு அடிக்கல் நாட்டியது. நண்பர்கள் அதனை கட்டம்கட்டி மாளிகையாக்கிவிடத் தயாராயினர்.

     இறுதியில் அப்பெண் பெயரோ, முகவரியோ தெரியாது என்பதை நண்பர்கள் முன்னிலையில் ஒத்துக்கொண்டான் மதன். இதனைத் தொடர்ந்து நண்பர்கள் அப்பெண்ணைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கினர்.

     இங்கே மதனின் நண்பர்கள் மதனுக்காய் களத்தில் இறங்க, அதற்குமுன் சோபா களத்தில் குதித்துவிட்டாள் அவனைப்பற்றிய தகவல்களை அறிய.

 

-தொடரும்…

 

மின்னூலாகப் படிக்க

Spread the love