சாரல் கவிதைகள் – பகுதி 10

28. அத்தையின் அறிவுரை

 

அண்ணன் மகளே

  அனிதாவே!

அத்தையின் அறிவுரை

  கேட்பாயே!

 

பிடிவாதம் பிடித்தால்

  அடிப்பார்கள்

பிரியமாய் நடந்தால்

  அணைப்பார்கள்

 

சிரித்தேப் பேசிடப்

  பழகிடுவாய்!

சினத்தால் அழுவதை

  தவிர்த்திடுவாய்!

 

இனிப்புகள் அதிகம்

  உண்ணாதே!

இனத்தால் எவரையும்

  இகழாதே!

 

நட்போடு விளையாட

  தவறாதே!

நாட்தோறும் மகிழ்ந்திட

  மறவாதே!

 

உள்ளத்தால் சோம்பலை

  வளர்க்காதே!

உழைத்திடும் நினைப்பை

  வளர்ப்பாயே!

 

உலகத்தில் நடப்பதை

  உணர்வாயே!

உறவுகள் தன்மையை

  மதிப்பாயே!

 

புத்தம் புதிதான

  ஆடையிலே

புழுதியும் அழுக்கும்

  சேர்க்காதே

 

நித்தம் குளிக்கும்

  வேளையிலே

நீரையும் வீணே

  கொட்டாதே

 

பாடங்கள் படித்திடும்

  பொழுதினிலே

படிக்காமல் நேரத்தை

  கழிக்காதே!

 

உண்ணும் உணவினை

  சிந்தாமல்

ஒழுங்காய் நிறைவாய்

  உண்பாயே!

 

இறைவனைத் துதிக்கும்

  நேரங்களில்

இரக்கம் வேண்டிட

  மறக்காதே!

 

பெற்றவர்கள் மனங்களை

  மகிழ்விக்க

கற்றவர் வழிதனில்

  நடப்பாயே!

 

பொய்தனை என்றும்

  சொல்லாதே!

பொல்லார் உறவிலும்

  செல்லாதே!……

 

29. ஆமையின் அக்கரை

 

கடலினில் வாழுகின்ற

  ஆமையொன்று

கர்ப்பம் ஆனதால்

  மகிழ்ந்ததம்மா

 

கரையினை நோக்கியே

  வந்ததம்மா

கவனமாய் மணலையும்

  தோண்டியதில்

 

கருத்தாய் முட்டைகள்

  போட்டதம்மா

முட்டையை மணலால்

  மூடிவிட்டு

 

மீண்டும் கடலுக்கே

  சென்றதம்மா

முட்டைகள் பொரித்து

  குஞ்சுகளாய்

வளர்கின்ற நிலையினை

  உணராமல்

 

வாழ்கின்ற ஆமையுமே

  தன்மக்களை

தரையினில் பிறப்பிக்கும்

  நிலையதனை

தானாய்ச் செய்வதும்

  இயற்கையன்றோ!…..

 

30. கூடாநட்பு

 

தாமரை குளத்தின் நண்டெல்லாம்

  தாராளம் செழிப்பில் வளர்ந்ததுவே

கனமழை பலமுறை பெய்ததனால்

  கரைகளில் ஏறியே களித்ததுவே!

 

வயல்களை உழவர்கள் உழுவதனால்

  வரப்போரம் வளைகளை அமைத்ததுவே

நரியும் கொக்கும் நண்பராகி

  நடையாய் வயலோரம் வந்திடவே!

 

கொழுப்பான நண்டுகளை உண்டிடவே

  கொடிதான எண்ணம் கொண்டதுவே

கொக்கு கொன்றிடும் நண்டெல்லாம்

  கொள்ளையாய் தின்றதே நரிதானே!

 

வளைகளுள் இருந்த நண்டுகளையும்

  வலுவாய் கொக்கே இழுக்கையிலே

வலிமையே அமைந்த நரியுடனே

  வரவாய் மகிழ்வுடன் தின்றதுவே!

 

எல்லா நண்டுகளைக் கொன்றாலும்

  எதையும் தின்னாது வருத்தவே

‘நண்பா’ என்கொன்றும் தரவில்லையே

  நானும் தின்கிறேன்’ என்றுரைக்க

 

கோபமே கொண்டிருந்த நரியுடனே

  கொக்கையே கடித்து தின்றதுவே

‘பாவம்’ என்றே வருந்துவோரே

  பண்புகள் அழுயுதே மனிதரிலே……!

 

31. உழவனின் நண்பன்

 

மண்ணினுள் வாழுகின்றாய்

  மண்தனையே உண்ணுகின்றாய்

மண்வளத்தைப் பெருக்கிடவே

  மண்துளைத்தே பயணமாவாய்

 

உழவருக்கு நண்பனானாய்

  உயர்ந்தவர்க்கே உறவுமானாய்

உழைக்கின்ற முறைமையிலே

  உன்னுயர்வை நிலைக்கலானாய்

 

தூண்டில்கள் போடுவோர்கள்

  துளைத்துன்னை எடுத்துவந்து

மீன்களையே பிடிப்பதற்கு

  இரையாக்கிக் கொல்லுகின்றார்

 

பிணங்களையே உண்ணுவோரும்

  பிணமாகிய உணவாகிடும்

பிறப்பென்பதை உணர்ந்திடாமல்

  பிணைந்ததே உலகவாழ்க்கை

 

உணவாகும் உறவொன்றே

  உயிர்களுக்குள் நிலைத்திருக்க

உயர்வாகும் அறிவொன்றால்

  உதவுவதே சிறப்பல்லவா!

 

சிறப்பேதும் பெற்றிடாமல்

  சீராகவே நெளிந்தூர்ந்து

மண்கிளறி காயப்போடும்

  மகத்தான செயலுற்றாயே!

 

இயல்பாகவே உறவமைத்து

  இலவசமாய் சேவைசெய்து

உழவனின் நண்பனாகி

  உயர்ந்திட்டாய் மண்புழுவே!…..

 

– தொடரும்

 

மின்னூலாகப் படிக்க

Spread the love