தென்றல் வீசும்: தொடர் 11

     மதன் முதலாம் ஆண்டு முதுகலை பட்டதாரி. இளங்கலை படிப்பை இதே கல்லூரியில்தான் படித்தவன். எதையும் துடிப்புடன் செய்பவன். மதன் எதையும் துடிப்புடன், தானே இறங்கி நடத்தவும் ஒரு காரணம் இருந்தது. ஏனென்றால் அவனது தந்தை ஒரு அரசியல்வாதி. ஊரில் இவனது குடும்பம் ரொம்பப் பிரபலம். இவனது தந்தை இரண்டு முறை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். தொடர்ந்து மூன்றாம் முறையும் அப்பதவியை வகித்து வருகிறார். கட்சியில்வேறு அவருக்கென்று தனிச் செல்வாக்கு இருக்கிறது.

     டாக்டரின் மகன் டாக்டர். வக்கீலின் மகன் வக்கீல் என்பதுபோல் அரசியல்வாதியின் மகன் ஒரு அரசியல்வாதியாக உருவாக வாய்ப்புகள் பல இருக்கும். இக்கூற்றை மதனின் தந்தை சேகரிடம் ஊரார் பலரும் கேட்பர். அவரும் பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தபடியே சென்று விடுவார்.

     ‘யாராருக்கு என்ன விதி என்று ஒவ்வொருவன் பிறக்கும்போதே அது எழுதப்பட்டுவிடும். ஆனால் அது என்னவென்று அவனுக்குத் தெரியாதபடி அவனது முதுகில் எழுதப்பட்டிருக்கும்’ என்பது சேகரின் கூற்று.

     சேகர் அரசியலில் முழுமையாக ஈடுபட்டிருந்ததால் வீட்டின் நிர்வாகம் சேகரின் மனைவி சாந்தியின் கட்டுப்பாட்டில் இருந்தது. சாந்தி நன்கு படித்தவள்; கணவனின் செயலுக்குத் தடங்கலாக அவள் இருந்ததில்லை. ஒவ்வொரு ஆணின் வளர்ச்சிக்கும் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பதுபோல சேகரின் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் சாந்தி அமைதியாக நின்றுகொண்டிருப்பாள்.

     மதனின் குடும்பத்தில் இன்னுமொரு நபர் உண்டு. குடும்பத்தில் மிக முக்கியமானவர். இவர்கள் மூவரையும் அதிகாரம் செய்யும் உரிமை பெற்றவர். இவர்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும் இளவரசி. அவர்தான் மதனின் இளைய சகோதரி. கீர்த்தனா என்னும் கீர்த்தி. ஐஸ்கிரீம் பிரியை.

     மதன் தனக்குத் தேவைப்படுவதைத் தந்தையிடம் கேட்க தாயின் சிபாரிசைக் கேட்கப்போகிறானோ இல்லையோ தங்கையிடம் சிபாரிசு கேட்டாக வேண்டும். அப்படி இல்லாமல் தாயின் மூலம் சிபாரிசுக்குச் சென்றுவிட்டால் அவ்வளவுதான். அவன் கேட்கும் விசயம் கடைசிவரைக்கும் கிடைக்காமல் தடுத்துவிடுவாள் இந்தப் பாசமான தங்கை – என மதனைப்பற்றிய அனைத்துத் தகவல்களையும் கமுக்கமாய் இருந்து பெற்றாள் சோபா.

     மதனின் நண்பர்களும் சளைத்தவர்கள் இல்லை. தங்களால் முயன்ற அளவில் தகவல்களை சேகரித்தனர். ஒரு ஆணைப்பற்றிய தகவல்களை அவனைச் சுற்றியிருப்பவர்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு பெண்ணைப் பற்றிய தகவல்களை அறியவேண்டுமானால் அது அவளுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் உதவியின்றிப் பெறுவது சற்றுச் சிரமம்தான். எப்படியோ எந்தச் சிக்கலுமின்றித் தோழன் மதனிடம் கூறச் சோபா பற்றிய தகவல்களைச் சேகரித்து வந்தனர் நண்பர்கள்.

     சோபா இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துவருகிறாள். படிப்பில் முதல் பெஞ்ச் மாணவி. கொஞ்சம் ஜாலியான டைப். வீட்டிற்கு ஒரே பெண். செல்லப்பெண் வேறு. அர்ச்சனாதான் நெருங்கிய தோழி. மதனின் தந்தையைப்போல் சோபாவின் தந்தை பிரபு ஊரில் பிரபலம் என்று சொல்ல முடியாது. அவர் சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலைபார்த்தவர். அங்குச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு உள்ளூரில் நிலபுலன்களை வாங்கி அதிலே முக்கனி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். பிரபுவின் மனைவி மைதிலி, கணவனோடு சேர்ந்து விவசாயத்திற்கு உதவி செய்துவருகிறாள். அமைதியாக வாழும் அன்பான குடும்பம். இதுவரை யாரையும் சோபா காதலிக்கவில்லை என்ற முக்கிய தகவலையும் சேகரித்துக் கொடுத்தனர்.

     இவ்வாறாக இருவரும் ஒருவரைப்பற்றி மற்றொருவர் தெரிந்துகொள்ள, நண்பர்கள் தங்களால் முயன்ற முயற்சியில் ஈடுபட்டு வெற்றிபெற்றனர்.

-தொடரும்…

மின்னூலாகப் படிக்க

Spread the love