சாரல் கவிதைகள் – பகுதி 11

32. நிறங்கள்

 

கடலிலும் வானிலும்

  கண்டிடும் நீலம்

கனிந்திடும் சுவைதனில்

  களித்திடும் ஆரஞ்சு

பசுமையில் வளமையில்

  பளிச்சிடும் பச்சை

மங்கள நிகழ்ச்சியில்

  மலர்ந்திடும் மஞ்சள்

உள்ளத்து தூய்மையை

  உணர்த்திடும் வெள்ளை

எல்லாரின் உதிரத்திலும்

  ஏற்றுலவும் சிவப்பு

சாந்தமும் துறவும்

  சார்ந்திடும் காவி

கார்மேகக் கூந்தலில்

  களித்திடும் கருப்பு

நிறத்துடன் நிறங்கள்

  சேர்ந்திடும் வேளையிலே

புதுப்புது நிறங்கள்

  ஆயிரம் தோன்றுமே

இனத்துடன் இனங்கள்

  சேர்ந்திடும் பண்பிலே

ஒரேயொரு இனமாய்

  மாற்றிட லாகுமே

உள்ளுவ தெல்லாம்

  உயர்வே யானால்

நினைப்ப தெல்லாம்

  நிலையாகுமே……

 

33. நலிவுகள் நீங்கிட

 

சின்னக் கண்ணா விழித்திடு

  சிறப்புற நாளும் எழுந்திரு

காகம் கரைவதைக் கேட்டாயா?

  கதிரவன் ஒளிர்வதைப் பார்த்தாயா?

 

காலைக் கடன்களை முடித்துவிடு

  கடவுளைத் தொழுவதை நடத்திவிடு

பாடங்கள் யாவையும் படித்துவிடு

  பலனாக உணவுகள் உண்டுவிடு

 

பள்ளிக்கு ஒழுங்காகச் சென்றுவிடு

  பணிவுடன் அறிவினைக் கற்றுவிடு

கற்பிக்கும் நல்லோரைப் போற்றிவிடு

  காக்கின்ற பெற்றோரை வணங்கிவிடு

 

மாலையில் விளையாட மறவாதே

  மதியினை இழந்தேதும் செய்யாதே

வெளியேதும் எவரோடும் சேராதே

  வெற்றியால் மற்றோரை இகழாதே

 

பொல்லார் வளர்ந்திடும் காலமிது

  பொதுநலன் குறைந்திடும் பாருமிது

அமைதியும் நலமும் உன்னிடத்தில்

  அறிவாய் அமைத்தே வாழ்வாயே

 

வளங்களும் நலங்களும் சேர்ந்தாலும்

  வன்முறை வெறிகளால் வருத்தமேதான்

நாமொன்று நன்மைகள் செய்யாமல்

  நலிவுகள் நீக்கவே முடியாதே!…….

 

34. தென்னையும் அன்னையே!

 

நீண்டு உயரமாய் வளரும்மரம்

  நீங்கா உறவாய் உதவும்மரம்

கிளைகள் எதுவும் இல்லாமரம்

  கிடைப்பதை உண்டே வாழும்மரம்

 

கூரைகள் அமைத்திட ஓலைகளும்

  கூரையோடுகள் தாங்கிட தாங்கிகளும்

கதவுகள் சன்னல்களுக்குச் சட்டங்களும்

  கருமாதி செயல்களுக்கு தானங்களும்

 

பலவீனம் தவிர்த்திட இளநீரும்

  பலனாய் உண்டிட தேங்காயும்

தலையில் தேய்த்திட எண்ணேயும்

  தாராளம் எரித்திட விறகுகளும்

 

ஆறுகள் நீரோடைகள் கடப்பதற்கு

  அரியநல் எளிதான பாலமாகும்

கோடைக்கு குளிரூட்டும் நிழலாகும்

  குப்பைகள் கூட்டிடும் துடைப்பமாகும்

 

துஞ்சிடும் ஏழைக்கும் பாயாகும்

  துயருறும் பஞ்சைக்கு கதவாகும்

குறைந்த விலையிலே கிடைத்திடுமே

  குடிசையில் வாழ்வோரைக் காத்திடுமே

 

தன்னையே முழுமையாய் தானமாக்க

  தகுதியாய் வளர்ந்திடும் தியாகமரம்

உதவியாய் உயர்ந்திடும் தென்னைமரம்

  உயரிய வாழ்க்கைக்கு நல்லமரம்!…….

 

35. உயிரெழுத்துகள்

 

அம்மா அப்பா அன்பு என்பதில்

  ‘அ’ என்பதே முதலெழுத்து

ஆலயம் ஆசைகள் ஆதாயம் என்பதில்

  ‘ஆ’ என்பதே முதலெழுத்து

இறைவன் இளமை இன்பம் என்பதில்

  ‘இ’ என்பதே முதலெழுத்து

ஈதல் ஈசல் ஈசன் என்பதில்

  ‘ஈ’ என்பதே முதலெழுத்து

உண்மை உழைப்பு உயர்வு என்பதில்

  ‘உ’ என்பதே முதலெழுத்து

 

எண்ணம் எதிர்ப்பு எழுதல் என்பதில்

  ‘எ’ என்பதே முதலெழுத்து

ஏற்றம் ஏமாற்றம் ஏளனம் என்பதில்

  ‘ஏ’ என்பதே முதலெழுத்து

ஐயம் ஐம்புலம் ஐம்பது என்பதில்

  ‘ஐ’ என்பதே முதலெழுத்து

ஒழுக்கம் ஒற்றுமை ஒலிகள் என்பதில்

  ‘ஒ’ என்பதே முதலெழுத்து

ஓடுதல் ஓதுதல் ஓலைகள் என்பதில்

  ‘ஓ’ என்பதே முதலெழுத்து

ஔவையார் ஔசதம் ஔவியம் என்பதில்

  ‘ஔ’ என்பதே முதலெழுத்து

 

அன்னை மொழியாம் தமிழ் சிறக்க

  அமைந்ததே மேற்காணும் உயிரெழுத்து…..

– தொடரும்

 

மின்னூலாகப் படிக்க

Spread the love