தென்றல் வீசும்: தொடர் 12

     காலம் அதன்போக்கில் சென்றது, கூடவே இவர்களின் காதலையும் வளர்த்துவிட்டது. மதன் தனது வழக்கமான பயணமுறையை மாற்றினான். தினமும் பைக்கில் கல்லூரிக்கு வருபவன் இப்போது பேருந்தில் வர ஆரம்பித்தான். இவன் பேருந்தில் வருவதால் இவனது பைக்கை அவனது நண்பன் கல்லூரிக்குக் கொண்டுவருவான்.

     அதுபோல மாலையில் கல்லூரி முடிந்தபின்னும் இதே பயணம்தான் அவனுக்கு. இறுதியில் சோபா தனது பேருந்து நிறுத்தத்திலிருந்து இறங்கி வீட்டிற்கு செல்லும்முன் பார்வையால் அவனிடம் விடைபெற்றுக்கொண்டு செல்ல, அங்கிருந்து பைக்கில் ஏறி வீட்டிற்கு செல்வது என தனது பயணத்தை மாற்றினான்.

     சிறுக-சிறுக பழக ஆரம்பித்தனர். ஒருவரை ஒருவர் முழுமையாக உணரத் தொடங்கினர். இப்படியாக இவர்களின் கல்லூரி வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்தது.

     பிப்ரவரி 14. காதலர் தினத்தில் இருவரும் தங்கள் காதலை ஒருவர் மற்றவரிடம் பரிமாறிக்கொண்டனர். காதல் சாதி, மதம் பார்ப்பதில்லை. காதல் திருமணம் சாதி, மத வேறுபாடுகளை கண்டுகொள்வதும் இல்லை. ஆனால் காதலர்களின் பெற்றோர்களில் பெரும்பாலானோர் எப்போது காதலுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்றால், ஒரே சாதி, மதம் மற்றும் பொருளாதார நிலையில் இரு குடும்பத்திற்கும் பிரச்சனை ஏதும் வராதது வரைத்தான். மற்ற நேரங்களில் அது ஏதாவது ஒரு பிரச்சனையில்தான் வந்து முடியும்.

     சினிமாவில் பார்க்கும் காதல், பார்க்க வேண்டுமனால் நன்றாக இருக்கும். ஆனால் நிஜ வாழ்க்கையில் அது எப்படி என்பது வாழ்பவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

     என்னதான் கல்வியறிவு, சமயபண்பாடு இருந்தும் திருமணம் என்பது தங்களின் சாதி, சமயத்தை ஒத்துதான் இருக்கவேண்டும் என்று நினைக்கும் பழக்கம் மக்கள் மனதைவிட்டு இன்னும் முழுதாகப் போய்விடவில்லை.

     மதன்-சோபா காதலில் இப்பிரச்சனை எழவில்லை. இவர்கள் மதத்திலோ, சாதியிலோ ஒரே வகுப்பை சேர்ந்தவர்கள்தான் என்பதால் மகிழ்ச்சியாய் இருந்தனர். இருவரும் தங்கள் காதலை அவர்களின் பெற்றோரிடம் தெரியப்படுத்தச் சற்று யோசித்தனர். எப்படியிருந்தாலும் தங்களுடைய காதல் ஒருநாளில் தெரியத்தான் போகிறது, அதுவரைக்கும் பொறுத்திருந்து சமாளிப்போம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். இந்தஜோடி தங்களுக்குள் ஒரு கணக்கைப் போட்டுவைக்க, இருவரின் தந்தையர்களும் தங்களுக்குள் ஒரு கணக்கை பலநாட்களாகப் போட்டுவைத்திருந்தனர்.

     மதனின் தந்தை போட்டிருந்த கணக்கை சிலமுறை மனைவியிடம் கூறியிருக்கிறார். அரசல்புரசலாக அது மதனின் காதிற்கும் வந்தது. தனது அரசியல் குருநாதரின் பேத்தியை மகனுக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்பதே அவரின் கணக்கு. இத்திருமணத்தின் மூலம் தனது அரசியல் வாழ்வும், மகனின் ஒளிமயமான வாழ்வும் சிறப்பாகச் சென்றடையும் என்பது அவரின் நம்பிக்கை. அதுபோல சோபாவின் தந்தையும் ‘மகள், தான் முடிவுசெய்யும் வரனைத்தான் திருமணம் செய்யவேண்டும். அத்திருமணத்தைப் பார்த்து ஊரே பொறாமைப்பட வேண்டும்’ என்ற மனக்கோட்டையோடு வாழ்ந்துவருகிறார்.

     காதலுக்கு இவ்விசயம் ஒரு பிரச்சனையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இவர்களின் பெற்றோரது மனநிலை எப்படியிருக்கும்? அது மாறுமா? என்ற குழப்பம் இருவரின் மனதிலும் எங்கோ ஒரு ஓரத்தில் எழுந்தாலும், இளங்கன்று பயமறியாது என்பதுபோல் துணிந்தனர்.

     இப்படித் துணிந்தவர்கள் இரு முடிவுகளை எடுத்தனர். ஒன்றாவது என்னவென்றால் இருவரின் பெற்றோரது சம்மதத்தைப் பெறுவது, இல்லையேல் தங்களது தனிப்பட்ட முடிவை நடத்துவது. அதைப்போலப் படித்துமுடித்து ஒரு நிலைமைக்கு வரும்வரை இக்காதலைப் பெற்றோரிடம் கசியவிடாமல் அமைதியாக இருப்பது. இருவரும் சேர்ந்தே இம்முடிவை எடுத்தனர். அதில் தெளிவாகவும் இருந்தனர்.

-தொடரும்…

மின்னூலாகப் படிக்க

Spread the love