சாரல் கவிதைகள் – பகுதி 12

36. எலுமிச்சம் பழம்

 

மஞ்சள் நிறமே உன்னழகு

மங்கள உயர்வே உன்பெருமை

மணக்கும் குணமே உன்னிருப்பு

மற்றவர் விருப்பே உன்சிறப்பே

 

வயிற்றுக் கோளாறைத் தீர்த்திடுவாய்

வாயுப் பெருக்கத்தை அகற்றிடுவாய்

நாளும் அருந்திட நலமளிப்பாய்

நல்லதோர் பழமெனப் பேரெடுத்தாய்

 

ஊறுகாய் அனைத்திற்கும் அரசன்நீ

உணவுகள் செரிப்பதில் ஆசான்நீ

சித்தம் கலங்கியோர் தலையில்நீ

சீராய் அமைந்தால் பலனும்நீ

 

பித்தம் மிகுந்தோர் தலைச்சுற்றை

பிழிந்த உன்சாற்றால் நீக்கிடுவாய்

சுத்தம் இல்லாரின் சொறியுடம்பில்

நித்தம் தடவிடில் நலமளிப்பாய்

 

பணமும் பலனும் தந்திடுவாய்

பயிர்களில் எளிதாய் வளர்ந்திடுவாய்

பலவீனச் சோர்வால் தளர்ந்தவர்க்கு

பருகிடும் பானமாய் நீயுயர்ந்தாய்

 

வாழ்த்துவோர் சபைதனில் வழங்கிடவும்

வரவேற்பு அவைதனில் மகிழ்ந்திடவும்

உறவினில் பரிமாறும் பழம்நீயே!

உயர்வினில் நலம்சேர வளர்வாயே!…..

 

 

37. நிறங்கள்

 

கடலிலும் வானிலும்

  கண்டிடும் நீலம்

கனிந்திடும் சுவைதனில்

  களித்திடும் ஆரஞ்சு

பசுமையில் வளமையில்

  பளிச்சிடும் பச்சை

மங்கள நிகழ்ச்சியில்

  மலர்ந்திடும் மஞ்சள்

உள்ளத்து தூய்மையை

  உணர்த்திடும் வெள்ளை

எல்லாரின் உதிரத்திலும்

  ஏற்றுலவும் சிவப்பு

சாந்தமும் துறவும்

  சார்ந்திடும் காவி

கார்மேகக் கூந்தலில்

  களித்திடும் கருப்பு

நிறத்துடன் நிறங்கள்

  சேர்ந்திடும் வேளையிலே

புதுப்புது நிறங்கள்

  ஆயிரம் தோன்றுமே

இனத்துடன் இனங்கள்

  சேர்ந்திடும் பண்பிலே

ஒரேயொரு இனமாய்

  மாற்றிட லாகுமே

உள்ளுவ தெல்லாம்

  உயர்வே யானால்

நினைப்ப தெல்லாம்

  நிலையாகுமே……

 

38. பாட்டியின் படிப்பினை

 

பாம்படம் அணிந்த பாட்டியவள்

  பற்களை எல்லாம் இழந்திருந்தாள்

பொக்கை வாயால் சிரிக்குமவள்

  பொதுவில் எவரையும் கவர்ந்திடுவாள்

 

ஆட்டுடன் கோழியும் அவள்வளர்ப்பாள்

  ஆணாய் எதையுமே வளர்க்கமாட்டாள்

அடுத்தவர் சேவலால் கருத்தரித்த

  அவள் கோழியிட்டது பத்துமுட்டை

 

ஒருமுட்டை பொரித்து சாப்பிட்டாள்

  ஒன்பதை அடைகாக்க வைத்துவிட்டாள்

இருபத் தொருநாள் இரவினிலே

  இனிதான குஞ்சுகள் வந்தனவே

 

வந்திட்ட குஞ்சனைத்தும் பெடையாக

  வருத்தம் அடைந்தாள் பாட்டியுந்தான்

அடுத்தவர் சேவலும் விற்றதனால்

  அனைத்துக் கோழியும் கன்னிகைதான்

 

விதவை ஆனதால் கோபமுற்று

  வீணாக ஆணின வெறுப்படைந்தாள்

தானாகப் படிப்பினை வந்தவுடன்

  ஆணின உயர்வினை மதிக்கலானாள்

 

ஆண்களைப் பெற்றவர் பெண்ணாயினும்

  அவளது பேறுகள் பெருமைகளும்

ஆண்டவன் இயற்கையால் அருளியதும்

  ஆணுயிர் என்பதை மறவோமே!……..

 

 

39. அதிரசம்

 

அதிரசமாம்! அதிரசம்!

  அக்காள் சுட்ட அதிரசம்!

 

அரிசிமாவும் வெல்லப் பாகும்

பிசைந்து சுட்ட அதிரசம்!

இசைந்து சுட்ட அதிரசம்!

 

மணமளிக்க ஏலக்காயும்

  மனங்கவர கசகசாவும்

இணைந்து சுட்ட அதிரசம்

  இனிப்பு மிகுந்த அதிரசம்

 

வட்டமாக்கி துளையிட்டு

  வடிவமைத்த அதிரசம்

வெல்லநிறத்தில் அமைந்தது

  மெல்வதற்கு எளியது

 

அத்தானுக்கு கொடுத்திட்டேன்

அப்பா அம்மாவுக்கு கொடுத்திட்டேன்

அத்தை மாமாவுக்கும் கொடுத்திட்டேன்

அண்ணன்தம்பிக்கு கொடுத்திட்டேன்

அக்காளுக்கும் கொடுத்திட்டேன்

தங்கைக்கும் கொடுத்திட்டேன்

தாத்தா பாட்டிக்கும் கொடுத்திட்டேன்

 

இருபத்தைந்து அதிரசம் சுட்டதில்

இரண்டு இரண்டாய் கொடுத்திட்டேன்

மீதியாக மூன்று இருந்ததனால்

கூலியாக தின்றிட்டேன்……..

 

 

– தொடரும்

மின்னூலாகப் படிக்க

Spread the love