தென்றல் வீசும்: தொடர் 13

     இருந்தும் மதனுக்கு மட்டும் ஒரு சிறுபயம் உள்ளுக்குள் இருந்தது. மதன், பெற்றோரிடம் மாட்டிக்காமல் சில தில்லுமுல்லுகளைச் செய்து தப்பித்தாலும் தங்கையிடம் எப்படியாவது மாட்டிவிடுவான்.

     இது தங்கையை உடைய ஒவ்வொரு அண்ணனும் சந்திக்கும் தார்மீகப் பிரச்சனையில் ஒன்று. எந்த விசயத்திலும் பெற்றோரிடம் சாக்குபோக்குச் சொல்லி நழுவிவிடலாம். ஆனால் தங்கையிடம் இருந்து அவ்வளவு சீக்கிரத்தில் நழுவ முடியாது. தங்கையிடம் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி நிற்கும் அண்ணன்மார்கள் எத்தனை எத்தனை பேரோ!

     இந்த விசயத்தில் தங்கைகளுக்கே உரிய சில சிறப்பம்சமும் உண்டு. அண்ணன்கள் தவறுசெய்து மாட்டினாலும், அதை பெற்றோரிடம் சொல்லி அடிவாங்கிக் கொடுப்பது சிலவேளையில்தான் நடக்கும். பெரும்பாலும் தங்கைகள் தங்களுடைய அண்ணன்கள் பக்கமே நிற்பர். அதற்காக தங்கைகளை மிகவும் நல்லவர்கள், தியாகிகள் என்றெல்லாம் சொல்லமுடியாது.

     ஒவ்வொரு பிரச்சனையிலும் மாட்டிக்கொள்ளும்போதும் அதை பெற்றோரிடம் சொல்லாமல் இருக்க அண்ணன்களிடம் மாமூலாக எதையாவது கறந்துவிடுவர். இப்படித் தங்கை கேட்கும் மாமூல்களை அண்ணன்கள் கொடுக்காவிட்டால் பிரச்சனையை வெட்ட வெளிச்சமாக்கிவிடுவர். இதற்காகவே அண்ணன்மார்கள் பலர் தங்கையிடம் மாட்டிக் கொள்ளக்கூடாது என்று தெளிவாக இருப்பர்.

     இதைத் தங்கையை உடைய அண்ணன்கள் மட்டுமே அனுபவிக்கும் சுகமான வலிகளில் ஒன்று.

     மதனும் அப்படித்தான். யாரிடமும் எச்சரிக்கையாக இருக்காவிட்டாலும் தங்கையிடம் மிகவும் எச்சரிக்கையாக இருப்பான். மதன் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் கீர்த்தனா அதற்காகக் கவலைப்படுவதே கிடையாது. கடைசியில் எப்படியாவது அவளிடம் மதன் மாட்டிமுழிப்பது விதியின் விளையாட்டுகளில் ஒன்று.

     ஒருநாள் இப்படித்தான், பள்ளியில் படிக்கும்போது மதனும், அவனது நண்பர்கள் இரண்டு பேரும் சேர்ந்து பக்கத்து வகுப்பு மாணவனிடம் சண்டைபோட்டதில் அந்த மாணவனுக்கு லேசான காயம். காயம்பட்டவன்மேல்தான் தவறு என்பதால் அவனும் வாயைத்திறந்து யாரிடமும் புகார் செய்யவில்லை. இருந்தாலும் மதனுக்கும், அவனது நண்பர்களுக்கும் சிறிது பயம். அடிப்பட்டவன், வீட்டிலிருந்து யாரையாவது கூட்டிக்கிட்டு வந்துவிட்டால் அப்புறம் நிலமை என்னாகுமோ? படிப்பு என்னாகுமோ? என்ற பயத்தில் மறுநாள் பள்ளிக்குச் செல்லாமல் ஏதேனும் சாக்குபோக்குச் சொல்லி லீவு போட்டு வீட்டிலேயே இருந்துவிடலாம் என முடிவுசெய்தனர். எப்படியோ இந்த விசயம் கீர்த்திக்கு தெரிந்துவிட்டது.

     தங்கையிடம் கெஞ்சி, கூத்தாடி இந்த விசயத்தை பெற்றோரிடம் சொல்லவேண்டாமென்று வேண்டினான். அவளும் சம்மதித்தாள். அவளின் சம்மதத்திற்கு பின்னால் மாமூல் ஒன்று இருக்கத்தான் செய்தது. அந்த மாமூல் வேறொன்றுமில்லை, தனது ஹோம்-வொர்க்கை அண்ணன் எழுதித்தர வேண்டும் என்பதுதான் அது. மதன் இந்த நிபந்தனைக்கு சம்மதித்த பிறகுதான் கீர்த்தனா அவனின் திட்டத்திற்கு ஆதரவு அளித்தாள்.

     மாலையானது. மாலை இரவானது. கீர்த்தியோ ஹோம்-வொர்க் எழுதித்தரும்படி அண்ணனிடம் கேட்க, அவனோ காலையில் எழுதித் தர்றேன் என்று மழுப்பியபடி பேசிவிட்டு தூங்கச் சென்றுவிட்டான். அண்ணன்தான் காலையில் எழுதித் தருவாண்ணு சொல்லியிருக்கானே என்ற நம்பிக்கையில் அவளும் ஹோம்-வொர்க் எழுதாமல் தூங்கச் சென்றாள்.

     விடிந்தது மறுநாள். தூக்கத்திலிருந்து எழும்பிய உடனே தனது நடிப்பின் திறனை காட்டத் தொடங்கினான் மதன்.

     “அய்யோ! அம்மா! முடியலையே! தலை வலிக்குதே!” என்று கத்தத் தொடங்கினான். மதனின் தாயார் சாந்தி பதறியடித்து ஓடிவந்தாள். தனது செல்ல மகனுக்கு என்னாச்சோ என்ற பதட்டத்தில் அவனது நெற்றியில் கைவைத்துப் பார்க்கிறாள். காய்ச்சல் எதுவும் இல்லை.

     “அம்மா…… காய்ச்சல் இல்ல, தலைதான் வலிக்குது. மாத்திரை தா!” என்று அப்பாவியாக கேட்டான். அண்ணனின் நடிப்புத்திறனை ஒரு ஓரத்தில் நின்றபடி அமைதியாக கவனித்துக்கொண்டிருந்தாள் கீர்த்தி.

     மாத்திரையை எடுத்துவர வேகமாகச் செல்கிறாள் அன்னை. கீர்த்தியோ, அண்ணனின் நடிப்பை ரசித்தபடியே மெல்ல அவன் அருகில் வந்து, “அண்ணா, ஹோம்-வொர்க் எழுதித்தா.” என்று கேட்க ஆரம்பித்தாள். அவனோ எழுதித்தர மறுத்தான்.

     “நானே தலைவலியிண்ணு அம்மாகிட்ட சொல்லிட்டேன். இப்போ உனக்கு எழுதித்தந்தா அம்மாவுக்கு சந்தேகம் வரும். அதனால இந்தமுறை ஹோம்-வொர்க்கை நீயே எழுது. அடுத்தமுறை நான் எழுதித் தர்றேன்.” என்று சாக்குபோக்குச் சொல்லி திரும்பவும் நடிக்க ஆரம்பித்தான்.

     “அய்யோ……! அம்மா…….! தலைவலிக்குதே……..!”

     அழுதுகொண்டே ஹோம்-வொர்க்கை எழுதத் தொடங்கினாள் கீர்த்தி. இங்கே கட்டிலில் மதன் தலைவலியுடன் படுத்திருக்க, தாயார் உடனிருந்து கவனித்துக் கொண்டிருந்தாள். நடிப்பு நன்றாக வேலைசெய்வதை நினைத்து மனதில் சிரித்தபடியே தங்கையைப் பார்த்து கண்ணசைத்து சிரித்தான். ஏற்கனவே கோபத்தில் இருந்த கீர்த்தனாவிற்கு இவனது செயல் எரிச்சலை தந்தது. இதனைப் பொருட்படுத்தாத மதன், தாயிடம்,

     “அம்மா, நான் இண்ணைக்குப் பள்ளிக்கு வரலையிண்ணு மிஸ்ஸிக்கு போன் பண்ணி சொல்லிடும்மா.” என்றதும்,

     “சரிடா கண்ணா!” என மகனின் அப்பாவித்தனத்தை நினைத்தபடி அவனின் தலையை நெருடிக் கொடுக்கிறாள் சாந்தி.

     இதற்குமேல் எரிச்சலைத் தாங்கமுடியாத கீர்த்தி, அண்ணன் ஹோம்-வொர்க் எழுதித் தராத ஆத்திரத்துடன் தாயாரிடம் போய் பள்ளியில் நடந்த விசயத்தை மறைக்காமல் கூறி, அதற்காக மதன் போட்ட நாடகத்தையும் சொல்லி அவனது திட்டத்தை வெட்டவெளிச்சமாக்கினாள்.

     மகன் இப்படி அப்பாவியாக இருக்கிறானே என்று பூரித்த சாந்திக்கு, இல்லை இவன் அரசியல்வாதியின் மகன்தான் என்று தெளியவைத்தாள் கீர்த்தனா.

     எழுந்தாள் சாந்தி. “பள்ளிக்கு படிக்க போகிறாயா? இல்ல……, அடியாட்களை வைச்சு ரவுடீசம் பண்ணப் போகிறியா?” என்று கேட்டு அடித்து தள்ளினாள். தனது குட்டு வெளிப்பட்டுவிட்டதே என்ற அவமானத்தாலும், மறுமுனையில் தாயாரின் அடியினாலும்,

     “அய்யோ……! அம்மா…….! வலிக்குது, அடிக்காதே!” என்று அழ ஆரம்பித்தான்.

     ‘இன்னும் வேணும் – இன்னும் வேணும். நல்லா அடி!’ என்று மனதில் கூறியபடி அண்ணனின் அழுகையை ரசித்துக்கொண்டே, அவன் எழுதித்தராத ஹோம்-வொர்க்கை எழுத தொடங்கினாள் கீர்த்தனா.

     இதற்கிடையில் வெளியே சென்றிருந்த சேகரும் வீட்டிற்கு வந்தார். கட்சியல் புதிதாக நடக்கவிருக்கும் தேர்தலில் அவர் போட்டியிட்டுக்கொண்டிருந்த சமயம் அது. கட்சிக்குள் நடந்த ஏதோவொரு பிரச்சனையோடு வீட்டுக்கு வந்தவருக்கு, இங்கேயும் பிரச்சனையாக இருப்பதைக் காணவே கோபம் மென்மேலும் அதிகரித்தது.

     காரணத்தை விசாரித்தார். மதன் பள்ளிக்குச் செல்லாமல் அடம்பிடிக்கிறான் என்று மட்டுமே சொல்லி, அதற்கான காரணத்தை கணவனிடம் சொல்லாமல் மறைத்தாள் பாசமான தாய் சாந்தி.

 

-தொடரும்…

மின்னூலாகப் படிக்க

Spread the love