சாரல் கவிதைகள் – பகுதி 13

40. முக்கனியின் முதற்கனி

 

முக்கனி என்றால் முதலாவேன்

  முக்கிய நிகழ்ச்சியில் பலனாவேன்

முருகன் தோல்விக்கே நானானேன்

  முழுமைச் சுவைக்கு தாயாவேன்

 

வீட்டின் அருகிலும் வளர்ந்திடுவேன்

  விளையிலும் தோப்பிலும் உயர்ந்திடுவேன்

பூத்திடும் நிலமைக்கு வந்துவிட்டால்

  பூரிப்பை எவர்க்குமே அளித்திடுவேன்

 

குலையாகப் பிஞ்சில் வடுவாவேன்

  குலுங்கியே விழுந்தாலும் வரவாவேன்

காய்களாய் மாறிடும் வேளையிலே

  களவாட பலரையும் தூண்டிடுவேன்

 

காளையர் கன்னியர் சுவைப்பதற்கும்

  காதலர் கள்வராய் நடப்பதற்கும்

கருவான அன்னையர் மகிழ்வதற்கும்

  கருவாக என்னையே தந்திடுவேன்

 

எந்தன் பயன்களோ ஏராளம்

  எண்ணியே சுவைப்பீர் தாராளம்

எல்லையைத் தாண்டியும் படர்வேன்நான்

  எல்லா நாட்டிற்கும் செல்வேன்நான்

 

பலவண்ண நெத்திலி மீனுடனே

  பச்சை மிளகாய் மாங்காயுடன்

பக்குவமாக சமைத்து உண்டால்

  பகையாகா உறவினில் மகிழ்ந்திடலாம்

 

வடுவாய் காயாய் இருந்தாலும்

  வகைவகை உணவாய் நானாவேன்

கனியும் சுவையாய் மாறிவிட்டால்

  கண்டவர் எவர்க்கும் காதலாவேன்

 

மாவுடன் முருங்கையும் கொய்யாவும்

  மதியுள்ள மாந்தரே வளர்த்திடுவீர்

உலகமும் உயிரும் நிலைப்பதற்கு

  உதவிடும் மரங்களை மறவாதீர்!…….

 

 

41. முறுக்குமீசைப் பூனையே!

 

மியாவ்! மியாவ்! பூனையொன்று

  மீசை வளர்த்து முறுக்குது

அடுப்பங் கரையையே சுற்றிசுற்றி

  அடுப்பில் தூக்கமும் போடுது

 

வீட்டில் வளரக்க விரும்பியதால்

  வீணாய் வம்பும் சேர்ந்தது

பொருட்கள் எல்லாம் திருடுது

  பொந்தும் எளிதில் தோண்டுது

 

கவனம் சிதற ஓடியோடி

  கண்ட தெல்லாமே கடிக்குது

சமைத்தமீனைத் தேடித் திருடி

  சமயம் பார்த்து உண்ணுது

காய்ந்தபாலை உறியில் வைக்க

  கள்ளத் தனமாய் குடிக்குது

 

எதிரிகளே இல்லை என்றால்

  எந்த செயலும் செய்யலாம்

என்பதையே எனக்கு உணர்த்தி

  எல்லாத் தவறும் செய்யுது

 

இயற்கை நிலைகளும் மாறுது

  இயல்பு குணங்களும் மாறுது

பொறுப்பான தலைமை நிலைத்திருந்தால்

  பொதுவாய் நலன்களே சேருது

 

துள்ளியோடும் எலியைப பிடிக்குது

  துடிக்க துடிக்க உண்ணுது

துயரங்களும் தனையே சேர்ந்தால்

  துணையே இன்றியே ஏங்குது

 

எந்த நிலையும் தொடர்வதில்லை

  எண்ணிப் பார்ப்பாய் பூனையே

எப்படியும் வாழ்வ மைத்தால்

  இன்ப மேதும் இல்லையே!…..

 

42. வியப்பூட்டும் மயிலே

 

வண்ணமயிலே! வண்ணமயிலே!

  வனமுறைந்து வாழும்மயிலே!

வானவில்லின் வனப்பினையும்

  வாலைவிரித்தே சொல்லும்மயிலே!

 

கானகத்துக் சோலையிலே

  காதல்வலை வீசிநிற்பாய்

கார்மேகம் வந்தவுடன்

  களிப்புடனே ஆடுகின்றாய்

 

தேசத்தின் பறவையானாய்

  தேசத்தால் சிறக்கலானாய்

தேடிக்கொல்லும் தீயவரால்

  தேவையற்று இறக்கலானாய்

 

கொண்டைப்பூ அழகுண்டு

  கோலமயில் பெயருண்டு

தோகையால் உயர்வுனக்கு

  தோற்றத்தால் பகையுனக்கு

 

பாரதத்தின் பெருமைதனை

  பார்முழுவதும் கொண்டுச்செல்ல

பறவையாய் அருமையானாய்

  பார்ப்போர்க்கு மகிழ்வுமானாய்

 

பாம்பையும் கொன்றிடுவாய்

  பல்லியையும் தின்றிடுவாய்

உதிர்ந்திடும் தோகையாலும்

  உயர்வினையும் பெற்றிடுவாய்

 

முருகனையே சுமந்துகொண்டு

  முழுவுலகும் பயணமானாய்

முதன்மையாய் வருவதற்குள்

  மூத்தவருப் பலனுமானார்

 

அழகினையே வர்ணிக்கவும்

  ஆண்மயிலே தகுதிபெற்றாய்

அகிலம்வாழ் இந்தியருக்கு

  அடையாளப் பறவையானாய்……

– தொடரும்

மின்னூலாகப் படிக்க

Spread the love