தென்றல் வீசும்: தொடர் 14

     ஏற்கனவே கோபத்தோடு வந்த சேகருக்கு மகன் அடம்பிடிக்கிறான் என்று கேட்டதும் மொத்த கோபமும் அவன்மேல் திரும்பியது. சாத்து-சாத்துண்ணு சாத்தினார். தாய் என்னதான் கோபத்தில் அடித்தாலும் அந்த ஒவ்வொரு அடிக்குப்பின்னும் பாசம் மறைந்து இருப்பதால் அவ்வளவாக வலி தெரியாது. ஆனால் தந்தை கோபத்தால் அடிக்கும்போது அது கண்டிப்பானதாக இருக்கும். தடுக்க யாருமே இல்லை. அடியின் வலியால் கதறிக் கதறி அழுதான் மதன்.

     இவ்வளவு நேரம் அண்ணன் அடிவாங்குவதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்த கீர்த்திக்கு, பாசம் மெல்ல மெல்ல எழ ஆரம்பித்தது.

     “அப்பா……. அண்ணனை அடிக்காதீங்கப்பா…….. அப்பா அண்ணனை அடிக்காதீங்கப்பா…..” என்று ஓடிப்போய் தந்தைக்கும், அண்ணனுக்கும் நடுவில் போய் நின்றாள். ஏற்கனவே அவர் கோபத்தின் உச்சத்தில் இருந்ததால் கீர்த்திக்கும் நான்கு, ஐந்து அடிகள் விழுந்தது. இருந்தும் அழுதபடியே அண்ணனுக்கு ஆதரவாக அந்த அடிகளை அவளும் சேர்ந்து வாங்கிக்கொண்டிருந்தாள்.

     சிறிது நேரத்தில் சேகரின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக தணிய ஆரம்பித்தது. அங்கே மதன் அழுதபடியே சாந்தியின் மடியில் இருக்க, ஒரு கையால் அண்ணனின் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, மறுகையால் தனது கண்ணீரைத் துடைத்துக்கொண்டு இருவருக்கும் அருகில் அமர்ந்திருந்தாள் கீர்த்தி.

     கோபம் தணிந்த சேகருக்கு, தனது குழந்தைகளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. கண்ணீருடன் தாயின் மடியில் உட்கார்ந்திருந்த இருவரையும் கையைக்காட்டி அழைக்கிறார் தந்தை. அழுதபடியே இரு குழந்தைகளும் தந்தையிடம் வந்தனர்.

     அவர்கள் இருவரையும் மடியில் ஏற்றிவைத்து கண்ணீரைத் துடைத்துவிட்டார். இன்றைக்கு ஒருநாள் மட்டும் இருவரையும் விடுமுறை எடுத்துக்கொள்ள சம்மதம் தெருவித்து இரு குழந்தைகளையும் மார்போடு தழுவினார் தந்தை.

     ஐந்தாம் வகுப்பில் நடந்த விசயமாக இருந்தாலும், இதற்குபின் தங்கை கேட்கும் அனைத்து மாமூல்களையும் முதலில் முடித்துவைத்த பின்தான் அடுத்த வேலைகளை தொடர்வான். கீர்த்தனாவும் இந்த நிகழ்ச்சிக்குப்பின் அண்ணன்மேல் ரொம்பவும் பாசம் வைக்க ஆரம்பித்தாள்.

     இதனால்தான் தங்கையிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க நினைப்பான் மதன். ஆனாலும் ரொம்பநாள் தாக்குபிடிக்க முடியாது. காதல் விசயத்திலும் அப்படித்தான். இங்கே இவனது எச்சரிக்கை எப்படி சுக்குநூறாக போகிறது? அதனையும் பார்ப்போம்.

-தொடரும்…

மின்னூலாகப் படிக்க

Spread the love