சாரல் கவிதைகள் – பகுதி 14

43. பெண்கொசுவே

 

கொசுவே! கொசுவே! பெண்கொசுவே!

  கொடிதான வினையின் பேய்வடிவே!

கொஞ்சிடும் ஒலியாய் ரீங்கரிப்பாய்!

  கொஞ்சம் அயர்ந்தாலே நீகடிப்பாய்!

 

பச்சை செடிகொடி உறைவிடமோ?

  பனியும் குளிரும் உனக்கிதமோ?

இருட்டும் முன்னமே இல்லங்களில்

  இனிதாய் நுழைவது உன்திறனோ?

 

இளையோர் முதியோர் பாராமல்

  இரத்தம் உறிஞ்சியே சுவைத்திடுவாய்

இன்னலால் வருந்துவோர் உனைத்துரத்த

  இயங்கும் கருவியிலும் மறைந்திருப்பாய்

 

பலவகை உருவங்கள் உனக்குண்டு

  பலருடன் தொடர்புகள் தினமுண்டு

சாக்கடைக் கழிவுடன் உறவுண்டு

  சங்கடம் அளிப்பதே உன்தொண்டு

 

புதுப்புது நோய்களைப் பரப்பிடுவாய்

  புயலாய் உலகெங்கும் பரவிடுவாய்

உயிர்களுக் கெதிரான உயிரானாய்

  உயர்வான மனிதர்க்கும் துயரானாய்

 

அழிகிடும் உலகால் நீவளர்வாய்

  அறிவின் முதிர்வால் நீயழிவாய்

சுத்தங்கள் பேணுவோர் ஒன்றிணைந்தால்

  சுலபமாய் முழுமையாய் நீயொழிவாய்……

 

 

44. உயிர் மழையே!

 

விளையும் உயிருக்கு

  வேண்டும் நீயே!

விளைந்த பயிருக்கு

  வேண்டாம் நீயே!

 

ஐந்தில் ஒன்றாய்

  அமைந்தாய் நீயே!

அன்னைக்கு மேலாய்

  ஆனதும் நீயே!

 

புண்ணிய பூமிக்கு

  பூரிப்பும் நீயே!

வியத்தகு விண்ணில்

  விளைவதும் நீயே!

 

கருந்திரை விரித்து

  கனிவதும் நீயே!

கருமையை விதைத்து

  அழிப்பதும் நீயே!

 

சமநிலை தவறிடில்

  சாவாகும் நீயே!

சந்தர்ப்ப கோளாறால்

  பேயாவாய் நீயே!

 

வறுமையும் வளமையும்

  உன்னால் நிகழ்வதே!

வசதிகள் பெற்றதால்

  வல்லானும் ஆவாயே!

 

நீயின்றி வாழ்ந்திட

  வழியேதும் இல்லையே!

காலத்தில் வந்தே

  ஞாலத்தையும் காப்பாய்…..

 

45. உதவிடும் நதியே!

 

நதியே! நதியே! நலத்தின் விதியே!

நாட்டின் வளத்தினை பெருக்கிடும் நதியே!

நம்மவர் என்றென நவின்றிடும் நதியே!

நாளுமே தாழ்மையில் தவிழ்ந்திடும் நதியே!

 

இயற்கை அன்னை ஈன்றிடும் நீரினை

இடமிட மாகவே கடத்திடும் நதியே!

தடுத்திடும் அணைக்குத் தண்ணீரைத் தேக்கியே

தயவுடன் பயணத்தைத் தொடந்திடும் நதியே!

 

பனிமலை உருகியே பள்ளத்தை தேடிடப்

பரிவுடன் சேர்ந்தே பாய்ந்திடும் நதியே!

மழைநீர் பெருக்கத்தை மட்டுப் படுத்திட

மார்போ டணைத்து களித்திடும் நதியே!

 

மீன்கள் வளர்ந்திட மின்சாரம் விளைந்திட

மீளாத உயிர்களின் பிணமுண்ணும் நதியே!

பயிர்கள் வளர்க்கவும் பயன்கள் சேர்க்கவும்

உணவாக உயர்ந்தே உதவிடும் நதியே!

 

கலங்கள் போகவும் கவலைகள் விளைந்திட

கடமையில் தவறிடாக் கருமத்து நதியே

ஊற்றைப் பெருக்கவும் உயிர்களைக் காக்கவும்

சோற்றை விளைவிக்கவும் சோகத்தை நீக்கவும்

 

வளைந்தும் நெளிந்தும் வரலாறு படைக்கவும்

வையகம் முழுவதும் தவழ்ந்தோடும் நதியே!

அலைகடல் ஆவியோடு குறைந்து குளிர்ந்திட

அடைமழையாகியே விரைந்திடும் நதியே!

 

அகிலத்தில் ஆண்டவர் அனேகரே ஆயினும்

அனைத்துயிர் வாழ்விலும் அங்கமாய் ஆகியே

விருந்து படைப்பவரும் விரதம் இருப்பவரும்

விளையாடி மகிழ்பவரும் விரும்பிடும் நதியே!

 

கழிவுகள் கொட்டியே இழிவுகள் சேர்த்தாலும்

காசேதும் வாங்காமல் கடத்திடும் நதியே!

நீரற்ற நிலையில் நிலமாகிப் போனாலும்

நின்னையும் நினைத்து நிலைப்போரும் இல்லையே!….

 

– தொடரும்

மின்னூலாகப் படிக்க

Spread the love