தென்றல் வீசும்: தொடர் 15

     அண்ணனின் பழக்கவழங்கங்களில் சில மாறுதல் நடப்பதை கவனிக்கிறாள் கீர்த்தனா. அண்ணன் ஏதோ ஒரு முக்கியமான சங்கதியை தன்னிடம் மறைக்கிறான் என்றுமட்டும் அவளுக்குத் தெளிவாய் புரிந்தது. அதனால் அவனது நடவடிக்கைகளைத் தெளிவாய் கண்காணிக்கிறாள். மதன் மிகத் தெளிவாகவும், அதேநேரத்தில் எச்சரிக்கையாகவும் நடந்துகொண்டதால் கீர்த்தனாவிற்கு இவ்விசயத்தை கண்டுபிடிக்கச் சற்று சிரமமாயிருந்தது. ஆனாலும் இவர்களின் போட்டியில் கடைசியாக ஜெயித்தது கீர்த்தனாதான்.

     அண்ணன் யாரையோ காதலிக்கிறான் என்றுமட்டும் அவளுக்குத் தெளிவாக புரிந்தது. தன்னிடம் எத்தனைநாள்தான் தப்பிப்பான் என்று மனதில் எண்ணியபடி அமைதியாகக் காத்திருக்கிறாள். கீர்த்தனா எதிர்பார்த்த நாளும் ஒருநாள் அமைந்தது.

     தங்கையிடம் தனியாக மாட்டினான்.

     “என்ன கீர்த்தனா…… என்னப் பண்ணுற?” எனக் கேட்டபடி மதனும் சமையல் அறையில் நுழைய,

     “வெள்ளரிக்கா சாப்பிடுறேன். உனக்கும் வேணுமா?” என்று இவளும் சமையல் அறையில் இருந்த இன்னொரு வெள்ளரிக்காயை எடுத்துவந்து அண்ணனிடம் கொடுக்க, தங்கை பாசத்தோடு எடுத்துவந்த வெள்ளரிக்காயை வாங்கிப் பார்த்தான்.

     “எல்லாம் சுத்தமாகத்தான் இருக்கு. நம்பி சாப்பிடு.” என்றபடி கடித்துகொண்டிருந்த வெள்ளரிக்காயைத் துடைத்தாள். இதற்குமேல் வெள்ளரிக்காயை கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டே இருந்தால் இதனையும் சேர்த்து சாப்பிட்டுவிடுவாள் என்றெண்ணி அவனும் வெள்ளரிக்காயை கடிக்க,

     “ஆமா…… நீ யாரை காதலிக்கிற? என, வெள்ளரிக்காய் துண்டு ஒன்றை வாயில்போட்டு சுவைத்தபடியே அண்ணனைப் பார்த்துக் கேட்டாள்.

     கடித்த வெள்ளரிக்காயை விழுங்கவும் முடியாமல், வெளியே துப்பவும் முடியாமல், என்ன செய்வதென்று தெரியாமல் ஒருநொடி அப்படியே நின்றான் மதன்.

     கீர்த்தனா விடவில்லை.

     “டேய் அண்ணா! பதில் சொல்டா. யாரை நீ காதலிக்கிற.”

     ‘ஆகா! தங்கச்சி எப்படிக் கண்டுபிடிச்சா…… எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்திருக்கேன். இவகிட்ட மாட்டிக்க வாய்ப்பே இல்லையே. சும்மாதான் கேட்கிறாளா!’ என்று யோசித்தபடி சிலையாய் நின்றான். பின் சமாளித்துவிட்டு அப்பாவி போல் பேச ஆரம்பித்தான்.

     “ஏய், என்னப் பேச்சு பேசுற? ஒரு தங்கச்சி மாதிரி பேசு. நானாவது ஒரு பொண்ணை காதலிக்கிறதாவது. கவனத்த படிப்பில காட்டு. அதிகமா கற்பனை செஞ்சா, முடி ரொம்ப கொட்டும்.” என்றுகூறிச் சிரித்தான்.

     “உன் நடிப்பு எனக்குத் தெரியாதா……..! மரியாதையா உண்மையை ஒத்துக்கோ. இண்ணைக்கு எங்கிட்ட நீ வசமா மாட்டிக்கிட்ட.” என்று சொல்லிய கீர்த்தியும் அண்ணனை ஏளனமாய்ப் பார்த்தாள்.

     “ஓகோ…… நான் நடிக்கிறேண்ணா சொல்ற. அப்படியிண்ணா ஒரே ஒரு…… ஒரேயொரு காரணத்தை கரெக்டா சொல்லு பார்ப்போம். அப்புறமா சொல்லுறேன் உன் கணிப்புக் கரெக்டா இல்லையாண்ணு.” என்றான் மதன், சற்றே இறுமாப்புடன்.

     “அப்போ நீ காதலிக்கிறது உண்மைதான் அப்படித்தான்…….” என்று தங்கை மாற்றிப் பேசியதும் ‘தவளைத் தன் வாயால் கெடும்.’ என்ற பழமொழி மதனின் மனதில் ஓடியது. ‘ஒரு துண்டு வெள்ளரிக்கு ஆசைப்பட்டது தப்பா போச்சே!’ என்று உள்ளுக்குள் நொந்துகொண்டு,

     “இப்படியெல்லாம் பேசி சமாளிக்காதே. மொதல்ல காரணத்தை சொல்லு.” என்றபடி கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் சமாளித்து நின்றான்.

     “ஒரு காரணம் இல்ல, மொத்தம் நாலு காரணம் இருக்கு.” என கீர்த்தி கூறியதும், அவனோ ஆச்சரியத்தின் விழிம்பிற்கே சென்றுவிட்டான். அவளும் நம்பர் போட்டு ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தாள்.

 

-தொடரும்…

மின்னூலாகப் படிக்க

Spread the love