சாரல் கவிதைகள் – பகுதி 15

46. வேப்ப மரம்

 

வீட்டுக்கு முன்னால் அமையுமரம்

விரும்பும் நிழலாய் ஆகுமரம்

வெறுக்கும் கசப்பாய் அறியுமரம்

வேண்டும் மருந்தாய் ஆனமரம்

 

            கோடையின் வெயிலிலும் தளிர்க்குமரம்

            கொடையில் தன்னையும் இணைக்குமரம்

            கேடுள்ள நோய்களைத் தவிர்க்குமரம்

            கேளாத பேய்களைத் தாக்குமரம்

 

சிட்டுக் குருவிகள் பழத்தையுண்டு

சிறந்த வீரயம் அடையவதுண்டு

காகமும் விருப்பமாய் கனிகளுண்டு

காலங்கள் அதிகமாய் வாழ்வதுண்டு

 

            இலைகளுடன் பூக்களும் காய்பழமும்

            இணைந்த கொட்டைகள் பட்டையுமாய்

            எதுவுமே வீணாகிப் போவதில்லை

            எல்லாமே பலனாய் ஆவதுண்மை

 

வாதவலி வீக்கமும் அகற்றிடுமே

வயல்பூச்சிக் கேட்டினை நீக்கிடுமே

சோர்வினை சுகமாய் ஆக்கிடுமே

சோலையும் எளிதாய் ஆகிடுமே

 

            வீட்டுக்கொரு மரம் நாம்வளர்ப்போம்

            நாட்டுக்கு மழைவளம் நலம்சேர்ப்போம்

            கூட்டும் வருவாயைப் பெருக்கிடுவோம்

            குவலயத் தேவையை நிறைவாக்குவோம்……

 

47. ஊறிவரும் சக்தி

 

ஓய்வெடுக்கா கதிரவனாய்

  காண்பதற்கு

ஒளிர்ந்திடுவாய்!

 

மாலையில் மறைபவனாய்

  மற்றவரைத்

தூங்கவைப்பாய்!

 

ஒழுங்காக இயங்குகின்றாய்

  உனையெரித்தே

ஒளியுமிழ்வாய்!

 

அண்டவெளிப் பரப்பினிலே

  அமைந்தபல குடும்பமதில்

பூமியினை ஈன்றவனாய்!

 

உயிரனைத்தையும் வாழ்வதற்கு

  உறுதுணையாய் இருப்பதற்காய்

உயர்நிலையாய் நீயமைந்தாய்!

 

உன்கதிர்கள் எரியூற்றில்

  ஊறிவரும் சக்தியினால்

உலகுயிர்கள் வாழ்கின்றதே!

 

வாழ்கின்ற நீயிறந்தால்

  வையகங்கள் ஓர்நொடியில்

வான்வெளியில் மாய்ந்திடுமோ!

 

புதிரான உன்னுயர்வை

  புதைத்துள்ள நிலையதனை

காத்திடவே வேண்டுகிறேன்!……

 

48. தூங்காது எரிவான்

 

காலையில் கிழக்கே பார்த்திடுவாய்

  கதிரவன் ஒளியாய் எழுந்திடுவான்

மாலையில் மேற்கே நீபார்த்தால்

  மறையும் ஒளியாய் துயின்றிடுவான்

 

குறையற்ற உறவுக்கு நிதம்வருவான்

  குவலய வாழ்விற்கு இதமளிப்பான்

குடும்பத்து தலைவனாய் நிலைக்கின்றான்

  குதுகலம் நிலைபெற சிரிக்கின்றான்

 

தாங்காத வெப்பம் தனைச்சேர்த்து

  தூங்காது எரிவான் பலன்சேர்க்க

வாங்காத கடனாய் வழங்கிடல்போல்

  வையகம் வாழ்ந்திட வகைசெய்தான்

 

விதவிதமான கதிர்கள் உள்ளோன்

  விண்ணில் செலுத்தும் திறனுள்ளோன்

விந்தையில் பிறந்திட்ட மைந்தனவன்

  தந்தையாய் அமைந்திட்ட இயற்கையவன்

 

பூமியின் உயிர்களும் அவனாலே

  பூப்பதும் காய்ப்பதும் அவனாலே

இரவும் பகலும் அவனாலே

  இரக்கம் எல்லாம் அவனாலே

 

ஆற்றலின் ஊற்றாய் அமைகின்றான்

  அனைத்தும் இயங்கிட ஒளிர்கின்றான்

அணுகும் எதனையும் எரித்திடுவான்

  அறிவோர் களித்திட வியப்பளிப்பான்…….

 

– தொடரும்

மின்னூலாகப் படிக்க

Spread the love