தென்றல் வீசும்: தொடர் 16

     “முதல் விசயம். நீ முன்னமாதிரி என் பிரெண்ட்ஸ்-கிட்ட வழிய மாட்டேங்கிற. மொதல்ல என் பிரெண்ட்ஸ் யாராவது வீட்டுக்கு வந்தா, நீ ஏதோ I.A.S பரீட்சைக்கு படிக்கிறவன்மாதிரி காட்டிப்ப. வந்தவங்களுக்கு ஏதாவது குடிக்கக்கொடுண்ணு அம்மாகிட்ட சத்தமா சொல்லுவ. மேலேயும், கீழேயும் படிக்கட்டுல குட்டிப்போட்ட பூனை மாதிரி சுத்திக்கிட்டே இருப்ப. ஆனா இப்போ என்னோட பிரெண்ட்ஸைக் கண்டுக்கவே மாட்டேங்கிற. யாராவது உங்கிட்ட பேசினாலும் பதில் சொல்லாம சிரிச்சிக்கிட்டே நழுவுற. எங்கிட்டகூட யாரைப்பற்றியும் விசாரிக்கவே மாட்டேங்கிற.” என்றபடி அவள் மதனைப் பார்த்தாள்.

     அவனும் தங்கை சொல்வதைக் கேட்டபடி யோசனையில் ஆழ்ந்தான். இப்படியெல்லாம் தான் செய்வதை தங்கை இன்னுமா நியாபகத்தில் வச்சிருக்கா என்ற எண்ணம் அவன் சிந்தையில் ஓடிக்கொண்டே இருக்க, தங்கை சொல்லப்போகும் அடுத்த காரணத்தை அறிய அதிக ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தான்.

     “நெக்ஸ்ட்”

     “என்ன……..?” என்று கீர்த்தி அழுத்தத்துடன் கேட்க,

     “அடுத்த விசயம் என்ன…….” என பவ்வியத்துடன் கேட்டான் மதன்.

     “இரண்டாவது காரணம். பார்த்துப் பார்த்து போரடிச்சிப்போன பாட்டை திரும்பவும் எத்தனை முறைதான் பார்க்கிறது. சரி, பாட்டை ரசிச்சி பார்த்தாலும் பரவாயில்லை மன்னிச்சிடலாம். ஆனா நீ என்னப் பண்ணுற தெரியுமா?”

     “என்னப் பண்ணுறேன்?”

     “உனக்குத் தெரியாதா?”

     “உடனே எதுவும் ஞாபகம் வரல. நீயே சொல்லு.”

     “சொல்லுறேன். பார்த்துப் பார்த்து போரடிச்சப்போன பாட்டை, நீ என்னமோ புதுசா பார்க்கிறது போல ரசிச்சு பார்க்கிற. நீ தனியா பாரு. ரசிச்சுக்கிட்டே இரு. அதில என்னடா….. எங்களையும் ரசிக்கச் சொல்லி கடுப்பேத்துற.”

     “செல்லம்…… கீர்த்தி, பாட்டை ரசிக்க வயசு, வித்தியாசம் தேவையில்லை. ரசனை இருந்தாலே போதும்.”

     “அப்படிவேற இருக்கா…… ஆனா யாராருக்கு இந்தமாதிரி ரசனை திடீர்ணு வருதோ, அவங்க காதல்ல இருக்காங்கண்ணு நாசாவுல இருந்து வர்ற ஒரு ரிப்போர்ட் சொல்லுதே.” என்றதும், குறிப்பாக ‘நாசா ரிப்போர்ட்’ என்றதும் சிரிக்க ஆரம்பித்தான்.

     “அடடே! நாசா அதோட ஆராய்ச்சி முறையை எப்போ மாத்தினாங்க.” என்று சிரித்துக்கொண்டே கேட்க,

     “இப்போ ஏன் இவ்வளவு சிரிப்பு வருது?” என்று கேட்டபடி அண்ணனைப் பார்த்தாள் கீர்த்தி.

     “நீ வரவர ரொம்ப காமெடியாய் பேசுற.” என்று பேசியபடி இன்னும் பலமாகச் சிரித்தான்.

     அவள் அவனை ஒரு பார்வை பார்த்தாள். அதில் அவளின் கோபம் தெரிந்தது. சிரித்த வாயை அப்படியே மூடி அமைதியாக நின்றான்; தங்கை கூறப்போகும் மூன்றாவது காரணத்திற்காக.

     தலைமுடியை லேசாக கோதிவிட்டபடியே அதனைக் கண்ணாடியில் பார்த்து சிரித்தவாறு அடுத்த காரணத்தைக் கேட்டான்.

     “அது இருக்கட்டும். மூணாவது காரணம் என்ன?”

     “இப்போ நீ என்ன பண்ணுன?

     “கண்ணாடி பார்த்துத் தலையை வாருனேன்.”

     “அப்புறம்…..?

     “அப்புறம்…… அப்புறமா…… சிரிச்சேன்.”

     “அதான், அதுதான் உனக்கான மூணாவது காரணம்.”

     “என்னது? தலையை வாரி விடுவதெல்லாம் ஒரு காரணமா? சின்ன புள்ளத்தனமாவுல்ல இருக்கு.”

     “தலைமுடியை வாரிவிடுவதெல்லாம் பிரச்சனை இல்ல. ஆனா எத்தனை முறை வாருவது? அதுலதான் பிரச்சனை. இப்போ ஒரு அஞ்சு நிமிசம் நாம பேசியிருப்போம். அதுக்குள்ள நீ மொத்தம் எத்தனை முறை கண்ணாடி பார்த்துத் தலைமுடியை வாரியிருப்ப?”

     “என்ன….. ஒரு மூணு முறை இருக்குமுண்ணு நினைக்கிறேன்.”

     “மூணு முறையா? மொத்தம் எட்டு முறை. அதில வேற அடிக்கடி கண்ணாடி பார்த்துச் சிரிக்கிறது எத்தனை முறையிண்ணு கணக்கே வச்சிக்க முடியல. அப்படி இந்த மூஞ்சியில என்ன ரசம் வடியுதோ.” என்று கீர்த்தி கூற, மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் முகத்தைப் பார்த்துச் சிரித்தான் மதன்.

     இனி தன்னிடம் இருந்த கடைசி காரணத்தையும் சொல்லத் தயாரானாள் கீர்த்தி.

     “நாலாவது காரணம். கடைசி காரணம்.”

 

-தொடரும்…

மின்னூலாகப் படிக்க

Spread the love