சாரல் கவிதைகள் – பகுதி 16

49. முருங்கை மரம்

 

கொடிமுருங்கை இரண்டு வாங்கிவந்தேன்

கொல்லையில் நடுவதற்கு வசதியில்லை

மாடிமேல் அமைத்திட்ட தொட்டியிலே

மண்ணினை நிரப்பியே நட்டுவிட்டேன்

 

செடியும் வளர்ந்து படர்ந்திடவே

செழித்திட நீருற்றி உரமுமிட்டேன்

நான்கே மாதத்தில் பூத்ததுவே

நலமாக காய்களும் காய்த்ததுவே

 

முருங்கைக் காய்கள் ஒவ்வொன்றுமே

மூன்றடி நீளமாய் வளர்ந்தவுடன்

முழுவதும் காய்களாய் அமைந்ததனால்

முட்டாக தாங்கலும் நானமைத்தேன்

 

நாளும் இருபது காய்களாக

நானும் விற்றேன் மகிழ்வாக

கிடைத்த பணமும் பலனுமென்னை

கிழவனாய் எண்ணிட விடவில்லை

 

பிள்ளையைப் பேணிடும் காலத்திலும்

பின்னால் வருவதை எண்ணிடுவீர்

தன்னோடு இருக்கும் உயிர்நிலைக்க

தயவாகும் உழைப்பின் பலன்தானே

 

நிலையாய் நிற்கும் மரமொன்றை

நிலத்தில் வளர்த்தால் பலனுண்டு

உறவாய் உன்னோடு வாழ்ந்துவிடும்

உதவும் நிலையில் தாங்கிநிற்கும்……

 

 

50. எதற்கென்னைப் பிரிகின்றாய் காற்றேநீ?

 

எங்கும் அலைகின்றாய் காற்றேநீ!

  எதிலும் இணைகின்றாய் காற்றேநீ!

எப்போதும் வாழ்கின்றாய் காற்றேநீ!

  எதற்கென்னைப் பிரிக்கின்றாய் காற்றிநீ!

 

நிரந்தர உறவில்லை உனக்கென்று

  நிலைத்திட உடலில்லை உனக்கொன்று

நிர்ப்பந் தமாயுன்னை அடைத்தாலும்

  நிவாரணம் வரும்வரை அலட்டவில்லை

 

எப்போதும் உயிராய் அமைந்திடுவாய்

  எவரேனும் எதிர்த்தாலும் கடந்திடுவாய்

எல்லைகள் வகுத்தாலும் மதிக்கமாட்டாய்

  எந்நாளும் சாவின்றி உலாவருவாய்

 

அண்டத்தின் விரிவுக்கும் நீயுமானாய்

  அளவற்ற விண்மீனும் உயிருமானாய்

அலைகடல் அழிவுக்கும் உறவுமானாய்

  அன்னையாய் அனைத்துக்கும் உயர்வுமானாய்

 

உன்னோடு உடன்பிறப்பு பலருண்டு

  உடலெரிந்து சாவார்களும் சிலருண்டு

உருவமில்லா செயல்களிலே நீயுமுண்டு

  உண்மையில் நீயில்லையேல் எதுவுமில்லை

 

மாயையே என்பதுவும் நீதானோ?

  மனதிலுறும் தெய்வபயம் நீதானோ?

மாற்றமிகு அதிசயங்கள் நீதானோ?

  மறையுரையைப் பொய்ப்பதும் நீதானோ?

 

ஐம்பெரும் பூதங்களில் நீயொன்று

  ஐக்கியமாய் இருப்பதில் நீநன்று

பூச்சியமாய் கணக்கிற்கும் உயர்வளிப்பாய்

  பூக்கரம் அனைத்திலுமே இணைந்திருப்பாய்…..

 

 

51. வெறுக்கும் பல்லி

 

‘பல்லி’யென பெயரும் வைத்தார்

பரபரப்போ டென்னை வைத்தார்

பயத்தாலே அருவருப்பாய் அலறுகின்றார்

பண்ணென ஒலித்தால் தடையென்பார்

 

மண்குடிலிலும் சுற்றியே வருவேன்

மாடிவீட்டிலும் சுலபமாய் நுழைவேன்

மானிடரெவரும் விரும்பாத உருவம்நான்

மாறாதுறுதியாய் சுவர்களில் உலவுவேன்

 

சமையல் அறைகளிலும் கழிப்பேன்நான்

சாமிகள் அறையிலும் களிப்பேன்நான்

சல்லாபத்து அறைகளிலும் நானிருப்பேன்

சாதாரண அறைகளிலும் வாழ்ந்திடுவேன்

 

விரைந்தே ஓடியோடி மறைந்திடுவேன்

வீணான உயிராக பிறந்திட்டேன்

மல்லாந்தே உறுதியோடே நடந்திடுவேன்

மறுபடியோர் உயிரினமாய் வரவேமாட்டேன்

 

மாணவர் உணவுகளில் பிணமானேன்

மரணத்து நிலைகளில் துயரானேன்

மருந்தொன்று எனையொழிக்க கண்டுவிட்்டால்

பண்ணியவரே செல்வந்தராய் உயர்ந்திடுவார்

 

புத்தியற்ற இயற்கையால் உயிருமானேன்

புத்தியுள்ள மனிதரோடு உறவுமானேன்

புதிதாகவே வாலறுந்து உயர்வுமானேன்

புரியாமலே பேரழிவில் உலகிலானேன்!……

 

 

52. சிந்திப்போமே ‘யாரிருப்பார்!’

 

காரிருள் சூனியத்தில்

கருவொன்று தோன்றி

சுற்றிய வேகத்தில்

சுயமாய் அடர்ந்ததே

சூடேறி எரியவே

வெடித்தே விரிந்திட

 

            காற்றலைத் தோன்றியே

            கடிதாய் பரந்தேகி

            அண்டமாய் ஊருப்பெற்று

            அளவற்றுப் பெருகவே

            வாயுக்கள் உரசியே

            வான்மீன்கள் வளர்ந்தன

 

தோன்றிய தெல்லாமே

வெப்பமும் ஒளியுமாய்

விரைந்தே சுடர்விட

விலகியே சுழன்றன

பால்வீதி மண்டலமாய்

பாதையும் அமைந்ததே

 

            சூரியன்கள் குடும்பமாய்

            உலவிடும் உறவில்

            பூமியும் மலர்ந்து

            உயிரின வாழிடமாய்

            தனைத்தான் சுற்றுவதில்

            தகுதியும் இணைந்ததே!

 

காலங்கள் மாற்றமும்

கனிமங்கள் ஊற்றுமாய்

நிலமொன்றும் நீரென்றும்

காற்றுமாய்க் கலந்ததே!

 

            தந்தையொன்று இல்லாமல்

            விந்தையொன்று நிகழுதே!

 

அந்தரத்தில் தொங்குவது

வாழும் நாள் தெரியாது

வீழும் நாளும் தெரியாது

 

            அங்கலாய்க்கும் பண்பிணைவில்

            பாரமேற்றும் பணங்களால்

            பகீரென எரியுமோ?

            பார்த்திட ‘யாரிருப்பார்!’…..

 

– தொடரும்

மின்னூலாகப் படிக்க

Spread the love