தென்றல் வீசும்: தொடர் 17

     ஏற்கனவே தங்கை கேட்ட மூன்று காரணங்களுக்கும் எப்படி பதில் சொல்வது என்ற கலக்கம் அவன் மனதை விட்டு இன்னும் நீங்கவில்லை. கீர்த்தியோ வரிசையிட்டு ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே இப்போது கடைசி காரணத்தை கேட்டுவிட்டு பிறகு முடிவெடுப்போம், காதலிக்கும் விசயத்தை தங்கையிடம் சொல்லவா இல்ல வேண்டாமா என்ற முடிவுடன் அடுத்த காரணத்தைக் கேட்டான்.

     “சரிம்மா…… கடைசி காரணம் என்ன?”

     “இப்போ கொஞ்ச நாளா நீ பண்ணிக்கிட்டே இருக்கிற விசயம் தான்.”

     “அப்படி என்ன புதுசா பண்ணிட்டேன்.” என்று மதன் திருப்பிக் கேட்க,

     “கொஞ்ச நாளா நானும் பார்க்கிறேன். உனக்குப் பாசம் அதிகமாயிடுச்சி போல இருக்கு. என்னை ரொம்ப பிரியமா ‘கண்ணு, செல்லம், வாம்மா, சரிம்மாண்ணு’ பாசமா கூப்பிடுற. அம்மாவையும் செல்லமா கூப்பிட ஆரம்பிச்சிட்ட.” எனக் கடைசி காரணத்தையும் கூறிமுடித்துவிட்டு அண்ணனைப் பார்த்தாள்.

     மதனுக்கு முந்தைய மூணு காரணங்களுக்கும் பதில் கிடைக்கல. ஆனா இந்த கடைசி காரணத்திலிருந்து எப்படியாவது தப்பிக்க நினைத்து தன்னுடைய வாதத்தை முன்மொழிந்தான்.

     “ஏய் பிசாசு, உன்மேல எனக்கு எப்பவுமே பாசம் உண்டு. அம்மாவுக்கும் அப்படித்தான். இதையெல்லாம் ஒரு காரணமுண்ணு பேசுறேயே…… என்னால இத ஒத்துக்கவே முடியாது.”

     “டேய்…… அடங்குடா…… அது எப்படிடா காதலிக்க ஆரம்பிச்சதும் அம்மாவுக்கும், அக்கா-தங்கச்சிக்கும் பாசத்தை அள்ளி பொழியுறீங்க.” என்றதும் மதன் அடுத்த வார்த்தை பேச வர அவனை பேசவிடாமல் பேசினாள் தங்கை.

     “என்ன…… இல்லையிண்ணு பேச வர்றியா? ஒண்ணுமட்டும் நல்லா தெரிஞ்சிக்கோ…… நீ சொல்லுறதை ஊரு வேணுமுண்ணா நம்பலாம்; நான் உன்ன நம்பமாட்டேன்.” என்று மதனுக்கு வாய்ப்பூட்டு போட, இனிமேல் தான் பேசும் பேச்சுக்கு மரியாதை கிடைக்காது எனத் தெளிவாக அவனுக்குப் புரியவே அமைதியாக நின்றான்.

     அண்ணன் அமைதியாக நிற்பதைக் கண்ட தங்கைக்கு சிரிப்புதான் வந்தது. சிரித்தபடியே அண்ணனிடம், “அண்ணா மறைக்காம சொல்லு. நீ யாரை லவ் பண்ணுற? இப்போ நீ சொல்லலையிண்ணா அப்புறம் நான் உங்கிட்ட பேசவேமாட்டேன்.” என்று பாசமுடிச்சைப் போட்டாள்.

     தங்கை கடைசியாகப் போட்ட பாசமுடிச்சை அவிழ்க்க முடியாமல் நின்ற மதன் உண்மையை ஒத்துக்கொண்டான். கீர்த்தியோ மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தாள். அண்ணன் காதலிக்கும் சங்கதியை கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சி இவளை இப்படி துள்ளிக்குதிக்க வைத்தது.

     உண்மையை ஒத்துக்கொண்டாதால் சோபாவைப் பற்றி அவனுக்குத் தெரிந்த விசயங்களில் சிலவற்றைத் தங்கையிடம் கூறினான். சோபாவைப் பற்றித் தங்கையிடம் கூறிக்கொண்டே, கடைசியில் அவளிடம் ஒரு வேண்டுகோளையும் விடுத்தான்.

     ‘தான் காதலிப்பதை பற்றி அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ இப்ப சொல்லவேண்டாம். நேரம்பார்த்து நானே அப்புறமா சொல்லிக்கிறேன்.” என்பதுதான் அந்த வேண்டுகோள்.

     “பார்ப்போம்……. பார்ப்போம்” என்று சூசகமான பதிலைச் சொல்லிவிட்டு, சிரித்தபடியே அங்கிருந்து சென்றாள் கீர்த்தனா.

     இவ்விசயம் இத்தோடு நிற்கவில்லை. சோபாவிடம் நடந்தவற்றைக் கூறினான். ‘தான் தங்கையிடம் மாட்டி முழித்த கதையைச் சொல்லி’ இருவரும் சிரிக்க, கல்லூரி வாழ்க்கை தொடர ஆரம்பித்தது.

     மதனும், சோபாவும் தங்களுடைய காதலைப் பெற்றோரிடம் இன்னும் சொல்லவில்லை. தனக்கொரு வேலை, சோபாவின் படிப்பு முடியும் காலம் இவையனைத்தும் நன்றாக முடியும்வரை பெற்றோரிடம் இதைப்பற்றிப் பேசக்கூடாது என முடிவுசெய்து, அந்த முடிவின்படியே தங்களின் எதிர்காலத்தை நடத்தத் தொடங்கினர். காலம் அதன் வேகத்தில் யாதொரு பிசகும் இன்றி செவ்வனே சென்றுகொண்டிருந்தது.

     இதற்கிடையில் சோபாவின் படிப்பு முடிவுக்கு வர, அதேநேரத்தில் மதனுக்கும் அவனது படிப்பிற்குத் தகுந்தாற்போல் ஒரு வேலையும் கிடைத்தது. இனி வீட்டில் உள்ளவர்களிடம் தங்கள் காதலைத் தக்க சமயம் பார்த்துச் சொல்ல முடிவெடுத்தனர். ஆனால் பெற்றோர்கள் தங்களின் காதலை அவ்வளவு சீக்கிரத்தில் ஒத்துக்கொள்வார்களா?, மாட்டார்களா? என்பதையும் அவர்கள் மறக்கமாமல் இல்லை.

     ஆதலால் தாயார்களிடம் காதலைப்பற்றி முதலில் சொல்லி வைப்போம். பின்னர் நடப்பதை, பின்னர்ப் பார்ப்போம் என தீர்மானித்து பழம் கனியும் நேரத்திற்காய்க் காத்திருந்தனர்.

 

-தொடரும்…

மின்னூலாகப் படிக்க

Spread the love