சாரல் கவிதைகள் – பகுதி 17

53. வெண்மதியே!

 

வெட்டாந் தரையாக நீயிருந்தும்

  வெண்ணிலா என்றோர் பேரெடுத்தாய்

கட்டாந் தரையாக நீயமைந்தும்

  காரிருள் நீக்கும் நிலவானாய்

 

ஒளிரும் தன்மையே இல்லாமல்

  ஒளியை எமக்கு அளிக்கின்றாய்

குளிரும் ஒளியாய் பிரதிபலித்து

  குதுகலம் அடைந்திடச் செய்கின்றாய்

 

சூரியன் உனக்கு தாத்தாவா?

  சுழலும் பூமியும் அம்மாவா?

காற்றும் நீருமே இல்லாமல்

  கவலையே இன்றியே களிக்கின்றாய்

 

உயிர்கள் வாழ்ந்திடா நிலையினிலும்

  உதவும் உறவாய் நிலைத்திருந்து

குடும்பத்தின் மதியாய் உருவெடுத்தாய்

  கும்பிடும் சிவனார் தலையமைந்தாய்

 

உன்னை ஆய்ந்திட வருவோர்க்கு

  உருப்படும் நிலமாய் நீயமைந்தாய்

விண்ணையே பாலமாய் யாமமைத்து

  விரைவாய் வாழ்ந்திட வந்திடுவோம்

 

வாழ்கின்ற பூமியைக் கெடுத்திட்டோம்

  வருங்கால அழிவை பெருக்கிட்டோம்

வாழிட அமைதியை நீயளித்தால்

  வணங்கியே உன்னையும் அணைத்திடுவோம்

 

முழுமையும் முடிவும் காட்டிநின்று

  மூடருக் கறிவும் ஊட்டிடுவாய்

இருளிலும் பூமிக்கு ஒளியளித்து

  இயற்கையாய் பூரிக்கும் அருளானாய்……

 

 

54. சக்தியொன்றே…..

 

உயிர்களோடு

  பொருட்களையும்

உறவுகளூட்டி

  வினைமுடிக்கும்

இயக்கத்தால்

  இருநிலையையும்

ஒன்றிணைத்து

  பயனளித்தும்

பயமூட்டியும்

  வருவதனால்

போற்றிடலாம்

  புகழ்ந்திடலாம்

பொதுநிலையில்

  வணங்கிடலாம்

காணாது

  கேளாது

உரையாது

  உணராது

பதிலின்றி பயனொன்றி

  இயக்குகின்ற

‘சக்தியொன்றே’

  தெளியுறா

தெரிந்திடா

  இறையாகுதே!……

 

55. ஏமாறவே மாட்டார்!

 

அண்டமாய் விரிகின்ற காற்றூற்று – தொடர்ந்து

  அணிகலனாய் எரிந்தொளித்து விண்மீனாகின்றதே!

அறிவியலின் முதிர்வினிலே விந்தைவியப்பு – சிந்திப்போர்

  அனைவருக்கும் தெரிவுகளோடு தெளிவுமாகுதே!

 

ஆண்டுகள் கணக்கிடவே எண்கள்இணைகிறதே – இயற்கை

  ஆதாயங்கள் பெருக்கிடவே எதிலுமுறைகின்றதே!

ஆறறிவிணைந்த உயிர்கள் நலன்சேர விழைகின்றதே – எல்லாம்

  ஆண்டவனால் கிடைத்ததென்று பொய்மைநிறைகின்றதே!

 

அறிவினத்தின் அறிவீனங்கள் களைகளால்செழிக்கின்றதே – அவைகள்

  அனுதினமும் பொருளீட்்டலில் நினைக்கின்றதே!

அற்பவாழ்வை உணர்ந்திடாமல் அகந்தைகொள்ளுகிறதே – பேராசை

  அதிகரிப்பால் உறவுகளழிந்து வருந்திமடிகிறதே!

 

நம்மவர்க்கு இலவசங்கள் இயற்கைக்கொடையாகுதே – உணராது

  நன்றிகொன்று அழிப்பவர்கள் இயங்கும்பிணமாகுதே!

நமதுநாடு நமதுமக்கள் என்னும்ஒலிகள் – நாமாய்

  நடைமுறையில் வளர்ந்துவாழ எதுவும்பண்ணுமே!

 

அவசியமென படைப்பதெல்லாம் பொருள்குவிக்குதே – இதனை

  அரசியல் இனமதவியாபாரமும் ஆமோதிக்குதே!

அதிகாரபதவி முதன்மையென்றும் நிலைப்பதில்லை – மனிதநேய

  அரவணைப்பு முதிர்ச்சிதானே நிறைவளிக்குமே!

 

இரப்பாரிடம் இரப்பவராய் உருவங்களானார் – கடவுள்

  இருப்பவராய் இயங்கிடாமல் முடங்கலிலானார்

எதுவரையில் பொய்மைகளால் உயர்வுபடுத்துவார் – சிந்திப்பார்

  எந்நாளுமே பொல்லாங்கரால் ஏமாறவேமாட்டார்….

 

– தொடரும்

மின்னூலாகப் படிக்க

Spread the love