தென்றல் வீசும்: தொடர் 18

     அதற்கான வாய்ப்பு முதலில் அமைந்தது சோபாவிற்குதான். ஒரு பெண் படிப்பை முடித்துவிட்டால் அவளின் பெற்றோர் அவளுக்கு மணமகன் தேடுவது இயல்புதானே. அதுபோலத்தான் அவளின் வீட்டிலும் நடந்தது. சோபாவின் வீட்டினர் அவளுக்கு வரன்தேடத் தொடங்கினர். இந்த விசயம் சோபாவின் காதிற்கும் எட்டியது.

     வேறுவழியில்லை. தாயாரிடம் தன் காதல் விசயத்தை சொல்லவேண்டிய கட்டாயம் அவளிற்கு ஏற்பட்டது. அதற்காக வீட்டினுள் தாயைத்தேட, மைதிலியோ சமையற்கட்டில் சமைத்துக் கொண்டிருந்தாள்.

     தாயிடம் எப்படிச் சொல்லி தொடங்குவது என்ற படபடப்போடு, அங்கே மைதிலி அரிந்து வைத்திருந்த கேரட்டை ஒவ்வொன்றாக எடுத்து வாயில்போட்டபடி இருந்தாள். மகள் வந்ததை கவனித்தாலும், தனது வேலையிலேயே மும்முரமாயிருந்தாள் மைதிலி.

     “அம்மா……”

     “ம்ம்ம்…..”

     “நான் எதாவது செய்யணுமா?”

     “வேண்டாம்மா, எல்லா வேலையும் இன்னும் கொஞ்ச நேரத்தில முடிஞ்சிடும்.”

     “அம்…..மா!”

     “என்னாடி?”

     “அப்பாவை காணல. எங்க போயிருக்காங்க.”

     “அப்பா வெளியே போயிருக்கு.”

     “எங்கம்மா……”

     “சொல்றேன்.” என்றபடி வெட்டிய காய்களை கழுவுவதற்கு எடுத்துச்செல்ல, மைதிலியின் பின்னே தொடர்ந்து போகிறாள் சோபா.

     “அம்மா……., அப்பா எங்க போயிருக்காங்க.” என்று மீண்டும் கேட்க,

     “பொறுடி, இந்த வேலையை முடிச்சிக்கிட்டு நிதானமா சொல்றேன்.” என்றபடி வெட்டிய காய்களைக் கழுவியபடியே மகளைப் பார்த்தாள். சோபா கத்தியை கையில் சுற்றியபடி மீதமிருந்த காய்களை வெட்ட ஆரம்பித்தாள்.

     “சோபா…..” என்று மைதிலி கூப்பிட,

     “சொல்லும்மா.” என்றுகூறி இன்னும் இரண்டு கேரட் துண்டுகளை வாயில் போட்டபடி நிற்க, மைதிலியோ மகளின் கையிலிருந்த கத்தியை வாங்கியபடி பேச ஆரம்பித்தாள்.

     “உனக்கு ஏதோ ஒரு நல்ல வரன் வந்திருப்பதா புரோக்கர் சொன்னாரு. அதுவிசயமா அவரைத்தான் பார்க்கப்போயிருக்காரு உன்னோட அப்பா.” என்றபடி மீண்டும் காய்களை வெட்ட ஆரம்பித்தாள் அன்னை.

     தாயார் இப்படி சொன்னதும் சோபாவின் மனது லேசாக ஆட்டம் கண்டது. சிறிது பயத்துடன் தாயை நோக்கி,

     “அம்மா…… ஒரு விசயம் சொல்றேன். பொறுமையா கேட்கிறியா.”

     “சொல்லுறதைச் சீக்கிரமா சொல்லு. சமையலை இன்னும் கொஞ்ச நேரத்தில முடிக்கணும்.”

     “அம்மா!” என்று சிறு ஆத்திரத்துடன் கூறிய சோபா, கத்தியிருந்த தாயின் கையைப் பிடித்து நிறுத்த, மைதிலி மகளைப் பார்த்தாள். மகள் தன்னிடம் ஏதோவொரு முக்கியமான விசயம் பேச வந்திருக்கிறாள் என்று புரிந்தது மைதிலிக்கு.

     “சரி, கவனிக்கிறேன். என்ன விசயமுண்ணு சொல்லு.”

     “அம்மா……”

     “சொல்லு சோபா, அப்படி என்ன விசயம்?”

     “வேற எதுவுமில்ல, அப்பா வரன் பார்க்கிறதா சொல்லுற இல்ல. அதில் எந்த வரன் வந்தாலும் நான்தானே புடிச்சிருக்கா இல்லையாண்ணு சொல்லணும்.”

     “என்ன பேசற? உன் சம்மதம் இல்லாம எதாவது நடந்திடுமா? எங்களைப்பத்தி நீ அவ்வளவுதானா புரிஞ்சி வச்சிருக்க. உன் விருப்பம்தான் எல்லாமே. உன் வாழ்க்கை சந்தோசமா இருக்கணும். அதுமட்டும்தான் அப்பாவுக்கும், எனக்கும் இருக்கிற ஒரே கடைசி ஆசை.” என்றுகூறிக் கண்ணில் கசிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டுச் சிரித்தாள், மகளின் தலையைத் தடவியபடி.

     இருவரும் கொஞ்சநேரம் மவுனமாக நின்றனர். சோபாவிற்கு தனது காதலை இப்போது தாயிடம் சொல்லவும் மனமில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் விட்டால் ‘இப்போது சொல்ல வந்த தைரியம், இனி என்றைக்கு வருமென்று அவளுக்கு தெரியவும் வாய்ப்பில்லை.’ மனதைத் திடப்படுத்திக்கொண்டு, “அம்மா…… எப்படி பேசணுமுண்ணு தெரியல. ஆனா இப்போ நான் உங்கிட்ட சொல்லாம இருந்தா அப்புறமா எல்லாமே தப்பா போயிடும்.” என்றபடி தலையைக் குனிந்தாள்.

     தாயாருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் எதைச் சொல்வதற்கு இப்படிப் பயப்படுகிறாள் என்ற பயம் மட்டும் அவளது உள்ளுணர்வில் எழுந்தது. பெண்ணைப் பெற்றவள் அல்லவா! எதையும் உடனே முடிவுசெய்யாமல் மகள் சொல்லப்போவதைக் கேட்க அமைதியாக நின்றாள்.

     தாயை நிமிர்ந்து பார்த்துபேச மனம் வராததால் தலை குனிந்தபடியே பேச ஆரம்பித்தாள்.

     “அம்மா…… என்னை ஒருத்தர் விரும்புறாரு.”

 

-தொடரும்…

மின்னூலாகப் படிக்க

Spread the love