சாரல் கவிதைகள் – பகுதி 18

56. பண்புள்ள நட்பு

 

உயிரைக் காத்திட

  உதவிடுமே நட்பு!

உண்மை நிலைத்திட

  உழைத்திடும் நட்பு!

 

தடைபல வரினும்

  தழைத்திடும் நட்பு!

தவறுகள் நீக்கிட

  விழைத்திடும் நட்பு!

 

உறவுகள் வளர்ந்திட

  உடன்வரும் நட்பு!

உதவிக்கு முயன்றிட

  உருமாறும் நட்பு!

 

துயருக்குத் துணையாம்

  துடித்திடும் நட்பு!

துணையொன்று வந்தால்

  தூரத்து நட்பு!

 

காக்கும் தோழனாய்

  களித்துடும் நட்பு!

கயவரின் சூழ்ச்சியால்

  கலங்கிடும் நட்பு!

 

மாசற்ற நட்பொன்று

  மனிதரிடம் குறைவே

மாற்றத் திலியங்குமென்று

  மறுப்பதுவும் நிறைவே

 

எந்நாளும் நிலைக்குமே

  தூய்மையுறும் நட்பு!

எல்லோர்க்கும் வேண்டுமே

  பண்புள்ள நட்பு!…..

 

57. பெரியோர் உரைமறவோம்

 

“யாதும் ஊரே யாவரும் கேளிர்.”

  என்றுரைத்தாரே பூங்குன்றனார்

“ஒழுக்கும் மேன்மையைத் தருவது –அதனை

 உயிருக்கு மேலாகப் பாதுகாத்திடு.”

  எனமொழிந்தார் தெய்வப்புலவர்

“படிப்பது நல்லது! படிப்பது நல்லது!!

 இரந்தாவது படிப்பது நல்லது.”

  என்றார் அவ்வைமூதாட்டி

“ஓடி விளையாடு பாப்பா

 ஓய்ந்து இருக்கக்கூடாது பாப்பா

 கூடி விளையாடு பாப்பா.”

  என்றாரே தேசியக்கவி பாரதியார்

“முதன்மையாய் இறைவனை வணங்கு

 உன்னைப்போல் அயலானையும் விரும்பு.”

  என்றுரைத்தார் இறைமகனாம் இயேசுபிரான்

“நோய் முதுமை சாவு  இம்மூன்றும்

 எல்லாருக்கும் உரியதே.”

  என்றார் புத்தபெருமான்

“எது கொண்டு வந்தாய்

 எதனைக் கொண்டு போவதற்கு?”

  என்றார் விவேகானந்தர்

“இறைவனிடம் கேட்டு பாருங்கள் – அவன்

 இல்லை என்றே சொன்னதில்லை.”

  என்றே பாடினார் நகூரார்

“பேச்சைக் குறைப்பீர்! பெருக்குவீர் வளத்தை.”

  என்றார் அன்னை இந்திரா.

 

ஆன்றோர் உரைத்த அறிவுரையை

ஆயுள் முழுவதும் காத்திடுவீர்

ஆற்றலால் உழைப்பையே பயனாக்கி

ஆறறி உயர்வால் நிலைத்திடுவீர்….

 

58. கல்விதானே!

 

நீர்தமக்கு

  வேண்டுவோர்கள்

நிலத்தினை

  தோண்டுவார்கள்

 

அறிவினை

  தோடுவோர்கள்

அருமுரையை

  நாடுவார்கள்

 

உறவுடன்

  ஒன்றிவாழ

உயர்வெல்லாம்

  நம்மைச்சூழ

 

ஏழ்மைகள்

  விலகியோட

எவரையும்

  நினைவிலாக்க

 

நலமெல்லாம்

  வந்துசேர

நாட்டையும்

  ஆளநேர

 

அவரவர்

  செல்வமாக

அவரோடு

  ஒன்றிநிற்க

 

காண்பதைப்

  புரியவைக்கும்

கருப்பொருள்

  “கல்விதானே!”……

 

– தொடரும்

மின்னூலாகப் படிக்க

Spread the love