தென்றல் வீசும்: தொடர் 19

     சோபா இதைச்சொன்னதும் மைதிலியின் உள்ளுணர்வில் ஏற்பட்ட பயம் இன்னும் அதிகரித்தது. அதனை வெளிக்காட்டாமல் பொறுமையாகக் கேட்டாள்.

     “நீ என்ன சொன்ன?”

     “அவன் ரொம்ப நல்லவம்மா, அதனால…..” என்றுகூறித், தலைகுனிந்து நின்றவள் வேகமாக தலையைத் தூக்கி தாயைப் பார்க்க, அங்கே அவளுக்கு எதிரே நின்ற மைதிலியின் பார்வையில் கோபம் தெரிந்தது. அடுத்து பேச வந்ததை தொடர்ந்து பேசாமல் மீண்டும் தலையைக் குனிந்தபடி அமைதியாக நின்றாள்.

     மைதிலி விடவில்லை. அதே கோபத்தோடு கேட்டாள்.

     “அதனால”

     “நானும் அவரை விரும்புறேன்.” என்றாள் தலையை குனிந்தபடி.

     மைதிலிக்கு ஆத்திரம் ஆத்திரமா வந்தது. மகள் ஒருவனை காதலிப்பதாகச் சொல்வதை எளிதாகக் கேட்டு சரியெனத் தலையாட்டும் பழக்கம் அவள் இருக்கும் இடத்தில் இன்னும் வரவில்லையே. இதனை ஒரு மானப்பிரச்சனையாக நினைக்கும் கூட்டத்தினைச் சேர்ந்தவர்களில் இவளும் ஒருத்தி என்பதால் அவளுக்கு மகளின்மீது எரிச்சல் அதிகமாக வந்தது. கோபப்பட்டு எதாவது பேசினால் இந்த இளந்தலைமுறையினர் எந்த முடிவிற்கும் துணிவார்கள் என்பதும் அவளுக்கு தெரியும்.

     ‘என்ன செய்வது, எல்லாம் விதி.’ என வருந்தியபடி சுவரோடு சாய்ந்து தரையில் உட்கார்ந்தாள். கணவனுக்கு இந்த விசயம் தெரிந்தால் ‘என் வளர்ப்பு சரியில்லை’ என்றல்லவா கூறுவார், என மனதில் கலங்கியபடியே எதுவும் மேற்கொண்டு பேசமால் இருந்தாள்.

     மைதிலி அமைதியாக உட்கார்ந்திருப்பதை கண்டு சோபாவும் எதுவும் கேட்காமல் தாயின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

     “இரண்டு பேரும் எங்க போயிட்டீங்க. வாசல் கதவும் திறந்து போட்டிருக்கு.” என குரலெழுப்பியபடி சமையற்கட்டை நோக்கி வருகிறார் பிரபு. தாயும், மகளும் அங்கே அமைதியாக இருப்பதைக் கவனிக்கிறார். தந்தையைக் கண்டதும் சோபாவின் இதயத்துடிப்பு அதிகரித்தது.

     “என்ன மைதிலி, சமையல் வேலையைச் சீக்கரமா முடிச்சிட்ட போல இருக்கு. அம்மாவும், பொண்ணும் நிம்மதியா, அமைதியா இருக்கிறீங்க போல.” என்றபடி குடிக்கத் தண்ணீர் எடுத்தார். தந்தையைக் கண்டதும் வெலவெலத்துப்போன சோபா, இங்கிருந்து தப்பித்தால் போதும் என்பதுபோல் மெதுவாக நடையைக் கட்டினாள். மைதிலியும் ஒன்று நடக்காதது போல காட்டிக்கொண்டு மீண்டும் சமையலில் ஈடுபட்டாள்.

     சிறிதுநேரத்திற்குபின் யாரோ பிரபுவைக் கூப்பிட அவரோடு சேர்ந்து இவரும் வெளியே கிளம்பினார். மறுபடியும் தாயும், மகளும் மட்டுமே வீட்டிலிருந்தனர். தனது வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு சோபா சொன்ன விசயத்தில் மனதை செலுத்தினாள் மைதிலி.

     தாயின் மனநிலை இப்போது என்னதோ! என்றறிய மகளும் அன்னையை நோக்கி வந்தாள்.

     “அம்மா……, ஏம்மா பேசாம இருக்க. ஏதாவது பேசுமா.” என்றுகூறித் தாயின் அருகில் அமர்ந்தாள் சோபா.

 

-தொடரும்…

மின்னூலாகப் படிக்க

Spread the love