சாரல் கவிதைகள் – பகுதி 19

59. பகையே!

 

நெஞ்சத்தில்

  வஞ்சம்

நிலைத்திடில்

  பகையே!

 

நேர்மைக்கு

  பங்கம்

விழைத்திடில்

  பகையே!

 

சொத்துக்கள்

  பிரிப்பதில்

சொந்தங்கள்

  பகையே!

 

உயர்ந்தவர்

  நிலையினை

உணர்வதில்

  பகையே!

 

மற்றவரை

  மதியாத

மனத்திலும்

  பகையே!

 

பெற்றவர்

  தடுத்திடும்

காதலும்

  பகையே!

 

எல்லைகள்

  நிலைப்பதில்

ஏற்படும்

  பகையே!

 

தொல்லைகள்

  மிகுதியால்

தொடர்வதும்

  பகையே!

 

நன்மைகள்

  யாவையும்

கொல்வதும்

  பகையே!

 

வாழ்வோர்

  சாவினை

வளர்ப்பதும்

  பகையே!

 

பொறாமை

  உரைப்பது

பொல்லாத

  பகையே!

 

நாமென

  வாழ்ந்திட

நலிவதும்

  பகையே!……

 

 

60. குழந்தைகள் நமக்கெதற்கு?

 

பட்டுப் பாவாடை பளபளக்கும்

பவளம் கழுத்தில் மினுமினுக்கும்

பார்ப்பவர் முகத்தில் பொலிவிருக்கும்

பாசத்தில் அம்மாவும் குதுகலிக்கும்

 

            கால்களில் சலங்கைகள் ஒலியெலிப்பும்

            கரங்களில் வளையல்கள் ஜொலிஜொலிக்கும்

            காணாமல் மறைத்தாலும் காட்டிவிடும்

            காரணம் கேட்டாலும் சிரிப்புதிரும்

 

புத்தகப் புழுக்களாய் முடக்காதீர்கள்

புதுப்புது விளையாட்டாய் வலுவூட்டுங்கள்

ஓடியாட ஒற்றுமையாய் நட்பூட்டுங்கள்

ஒருவரையும் பகையாளாய்ச் சொல்லாதீர்கள்

 

            கண்மை தீட்டிய கண்களிலே

            கண்ணீர் சுரந்தே முகம்கறுக்கும்

            பொட்டிட்ட நெற்றியும் சிவந்திடும்

            பொல்லாத மதிப்பெண் முதன்மைக்காய்

 

குழந்தையே முதல்தர செல்வம்தான்

குறுமதிச் செயல்களால் வருந்தாதீர்

குறும்பும் குற்றமும் இல்லையானால்

குதுகலம் குழந்தையாய் வருவதில்லை

 

            களிமண் போன்ற குழந்தையையும்

            கருத்தாய் இணைத்தே உணர்த்திடணும்

            கற்றலும் காத்தலும் கடமையானால்

            களித்திடும் உழைப்பாலே வளர்திடணும்…..

 

பண்புகள் வளர்க்காமல் படிப்பெதற்கு?

பாசங்கள் உணர்த்தாமல் வளர்வதெதற்கு?

உறவுகள் உண்மைகள் நிலைப்பதற்கு

உருவாக்கா குழந்தைகள் நமக்கெதற்கு?

 

 

61. மேனிமட்டும் பாராதே!

 

ஒருகிலோவில்

  மாம்பழமாய்

ஒண்ணேஒண்ணு

  வாங்கினேன்

 

அனைவருக்கும்

  பகிர்ந்திடவே

ஆவலோடே

  வெட்டினேன்

 

பாதிப்பழமோ

  புழுத்தது

மீதிப்பழமோ

  கெட்டது

 

வேதனையில்

  வெறுப்படைந்து

ஒருமனதாய்த்

  திட்டினேன்

 

மேனியையே

  பார்த்தெதையும்

விரும்பிடாதே

  மானிடா!

 

பணத்தால்

  பண்பழிவார்

பகட்டால்

  சிரித்தழிப்பார்

 

ஆய்ந்தெதையும்

  பாராமல்

அவசரத்தால்

  அழியாதீர்…..

 

– தொடரும்

மின்னூலாகப் படிக்க

Spread the love