தென்றல் வீசும்: தொடர் 20

     “என்னத்த நான் பேச……. அதான் எல்லாமே நீயே பேசிட்டியே. காலேஜிக்கு போய் படிச்சா நல்லதா நாலுவிசயம் தெரியுமேண்ணு உங்களை அனுப்பிவச்சா ஏண்டியம்மா காதலிச்சிப் பெத்தவங்க மானத்தை கெடுக்கிறீங்க.” என்றாள் ஆத்திரத்துடன்.

     “யாரு உங்க மானத்தை கெடுத்தா….. ஒருத்தனை புடிச்சிருக்குண்ணுதானே சொல்றேன். காதலிச்சவங்க எல்லாம் மானத்தை கெடுத்தவங்கண்ணா, மத்தவங்க எல்லாம் மானத்தை கட்டிக்காப்பாத்துறாங்கண்ணு அர்த்தமா?” என மகள் ஆதங்கத்துடன் கேட்க,

     “உங்கிட்ட பதில் பேச முடியாதம்மா……. முடியவே முடியாது. அந்த பையன் என்ன சாதியோ? என்ன வகையோ?” என்று சோபாவின் காதில் கேட்கும்படி முனகிக்கொண்டே இருந்தாள்; தனது மனத்தாங்கலை வெளியே கொட்டியபடி.

     “அப்போ நீங்க என் வாழ்க்கையைப்பத்தி நினைக்கல. என்ன சாதி, என்ன குலம் இதுமட்டும்தான் முக்கியமா?” என்று சோபாவும் கோபத்துடன் கேட்க,

     “சோபா…… கல்யாணமுண்ணு சொல்லுறது ஏதோ இரண்டு மனசு மட்டும் சேருவது கிடையாது. இரு வீட்டார் சேரணும். சொந்தபந்தங்கள் எல்லாம் சேர்ந்து வாழ்த்தணும். அப்போதான் அது பெருமைப்படுற விசயமா பெத்தவங்களுக்கும் இருக்கும், மத்தவங்களுக்கும் இருக்கும். அப்படியில்லாம இரண்டுபேர் மட்டும்தான் வாழ்க்கையிண்ணு நினைச்சு வாழ்ந்தால், அந்த வாழ்க்கை நிம்மதியா இருக்குமுண்ணு எத்தனை பேரு சொல்லியிருக்காங்க. இன்னொரு பிரச்சனையும் இருக்கு. சாதி, மத பேதமில்லாம திருமணம் நடத்தப்போறதா இருந்தா அது கேட்கவேணுமுண்ணா புரட்சியிண்ணு தோணும். அப்புறமா குழந்தைகளுண்ணு வந்தா அது தகப்பன்வழி இனமாத்தான் போகுமே தவிர, சாதி-மத பாகுபாடில்லா இனமா அது வராது. நாங்க சாதி முக்கியம், மதம் முக்கியமுண்ணு சொல்லல. உன் சந்தோசம்தான் முக்கியம். இருந்தாலும் உன்னோட விருப்பம் எங்களோட விருப்பத்தையும் பூர்த்தி செய்கிற மாதிரி இருக்கணுமேதவிர, உன்னோட தனிப்பட்ட சந்தோசத்தை மட்டுமே கொண்டதாக அது இருக்கக்கூடாது. அப்புறமா உன் இஷ்டம்.” என்றுகூறி ஏக்கப்பெருமூச்சு விட்டாள், தன்னுடைய கருத்தைத் தெளிவாய்ப் பேசி முடித்தோம் என்ற நம்பிக்கையில்.

     தாயாரின் கேள்விக்குப் பதில்கூற முடியாமல் தவித்தாள் சோபா. எது எப்படியோ, காதலிப்பதைத் தாயாரிடம் சொல்லிவிட்டோம் என்ற நிம்மதி மட்டும் இப்போதைக்குச் சோபாவின் மனதில் இருந்தது.

     சிறிதுநேர சிந்தனைக்குப்பின் மைதிலியோ மகளிடம் வந்து அவனைப்பற்றியும், அவனது குடும்பத்தைப் பற்றியும் விசாரிக்க ஆரம்பித்தாள். சோபாவும் இதற்காக அல்லவா காத்திருந்தாள். கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் மதனைப்பற்றித் தாயிடம் சொல்ல ஆரம்பித்தாள்.

     மகள் சொன்ன அனைத்தையும் பொறுமையாய் கேட்ட மைதிலி, ‘ஒருநாள் தான் மதனைப் பார்க்க விரும்புவதாகவும், மதனுக்கு நேரம்கிடைக்கும் போது தன்னை சந்திக்கும்படி கூற’ சோபா மகிழ்ந்தாள். அதேநேரத்தில் முட்டுக்கட்டையாக இருப்பதைச் சொல்ல மறக்கவுமில்லை மைதிலி. சோபாவும் எல்லாவற்றையும் காதில் போட்டபடி தனது அறைக்குத் திரும்பினாள்.

     தந்தையின் சம்மதத்தை அவ்வளவு எளிதாகப் பெறமுடியாது எனச் சொல்லியபடி அங்கிருந்து சென்றாள் மைதிலி. சோபாவும் எல்லாவற்றையும் காதில் போட்டபடி தனது அறைக்குத் திரும்பினாள்.

     “நம் காதலை அம்மாவிடம் சொல்லிவிட்டேன்.” என்று சோபாவும் மதனிடம் கூற, அடுத்தபடியா மதனும், அவனுடைய தாயாரிடம் சொல்ல வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டான். இந்த விசயத்தில் தங்கையை பயன்படுத்த அவனது மனம் சம்மதிக்கவில்லை. காலம் அமையும் என்று பொறுமையாக இருந்தான்.

     இவர்கள் காதலிக்கும் விசயத்தை தாயிடம் முதலில் சொன்னது சோபாதான். அதுபோல மதனும் இவர்களது காதலை இவனது தாயிடம் சொல்ல வாய்ப்பளிக்க போவதும் இதே சோபாதான். அந்த வாய்ப்பு என்ன?

 

-தொடரும்…

மின்னூலாகப் படிக்க

Spread the love