தென்றல் வீசும்: தொடர் 21

     அன்று ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை என்பதால் மதன் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான். ஆனால் சாந்தி மட்டும் பரபரப்பாக இருந்தாள். சாந்தியின் அண்ணன் மகனுக்கு நல்லவரன் ஒன்று வந்திருப்பதால், சாந்தியையும் இதுபற்றி பேசவருமாறு அவளின் அண்ணன் அழைப்பு விடுத்ததால் மிகவும் பரபரப்புடன் புறப்படத் தயராகிக் கொண்டிருந்தாள்.

     கணவன் கட்சிபணிக்காக வெளியே சென்றிருப்பதால் வீட்டில் இருந்த காரும் இப்போது இல்லை. மதனை தொந்தரவு செய்ய சாந்தியும் விரும்பவில்லை.

     பிறகு அண்ணன் வீட்டிற்கு எப்படி செல்வது?

     வாடகை வண்டியில் போகவேண்டியதுதான். அப்போது சாந்திக்கு இன்னொரு யோசனை தோன்றியது. ஒரு மாற்றுயோசனையாக பேருந்தில் செல்ல முடிவெடுக்கிறாள்.

     அதே முடிவோடு புறப்படத் தயாராகிறாள். மதனோ ஹாலில் அமர்ந்து பாட்டு கேட்டுக்கொண்டிருந்தான். வீட்டிலிருந்து பேருந்து நிலையம் செல்ல ஏறக்குறைய கால்மணி நேரமாகும். அந்நேரம் பார்த்து ஒரு ஆட்டோகூட அவ்வழியாக போகவில்லை. நடந்துபோக சிரமமாய் இருந்ததால் மகனைப் பேருந்து நிலையம்வரையாவது தன்னை கொண்டுவிடக் கேட்கிறாள்.

     மதனோ வேலை இருக்கிறது. அது-இது என்று சாக்குபோக்குச் சொல்ல, சலித்தபடியே வீட்டிலிருந்து நடந்து செல்ல ஆரம்பித்தாள்.

     மதனின் தாயார் வாசலை தாண்டும் நேரத்தில் அவனது போனிற்கு மெசேஜொன்று சோபாவிடமிருந்து வந்து சேருகிறது.

     எடுத்துப் படித்தான்.

     ‘சோபாவும், சோபாவின் தாயாரும் மதனின் ஊருக்கு சற்று தூரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருப்பதாகவும், இன்னும் சற்றுநேரத்தில் திரும்பிச் செல்வதாகவும், உடனே வந்தால் பார்க்கலாம்’ எனவும் அதில் தகவல் அனுப்பியிருந்தாள்.

     அதனைப் படித்துக்கொண்டிருக்கும்போது மதனின் மனதில் பட்சி திடீரென ஒரு யோசனை சொல்லியது. தாயார் அவ்வழியாகத்தான் மாமன் வீட்டிற்கு செல்லவேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இருவரையும் சந்திக்க வைத்துவிடலாமே என்று பட்சி சொல்ல, உடனே தயாரானான்.

     வேகமாகச் சென்று நல்லதொரு துணியை உடுத்தினான். தலைமுடியை வகிடில்லாமல் வாரிவிட்டபடி கையில் ஹெல்மெட்டையும் எடுத்துக்கொண்டு பைக்கை நிறுத்திவைக்கும் இடத்தை நோக்கி ஓடினான். அதற்குள் சோபாவிடம், ‘நானும், அம்மாவும் உங்கள் இருவரையும் பார்க்க வருவதாக’ குறுஞ்செய்தியை தட்டிவிட்டான்.

     ‘அண்ணனுக்கு என்னாச்சி. எதுக்கு இப்படி பண்ணுறான்.’ என்ற சந்தேகத்தோடு கீர்த்தியும் வாசலுக்கு வருகிறாள்.

     வாசலில் தங்கையைக் கண்டதும் அவளுக்கு ஒரு டாட்டா காட்டியபடியே வண்டியில் ஏறி புறப்பட்டான். சாந்தி தெருமுனையைக் கடப்பதற்குள் மதனும் அம்மாவின் முன்னால்போய் வழிமறித்தான், பாசத்தோடு.

     “அம்மா….. வண்டியில் உட்காரு. நான் கொண்டுவிடுறேன்.” என்றுகூறி அழைக்க சாந்தியும் மகிழ்ச்சியுடன் அமர முயற்சித்தாள், நடக்கப்போகிற சுவாரசியத்தைப் பற்றித் துளிகூடத் தெரியாமல்.

     பைக் சிறிதுதூரம் போயிருக்கும், சாந்தி மகனிடம், “கண்ணா…… நீ வேற பாதையில போகிற.”

     “இல்லையே! சரியாகத்தான் போறேன்.”

     “இல்லப்பா, இந்த வழியா போனா பஸ் ஸ்டேண்டுக்குச் சுத்தித்தான் போகணும். இதுகூடவா உனக்குத் தெரியல.” என்று மகனுக்கு அவனது சொந்த ஊரைப்பற்றிச் சொல்லிக்கொடுக்க மதன் உள்ளுக்குள் சிரித்தான்.

     “அம்மா……. நீ பஸ்ல போக வேண்டாம். மாமா வீட்டிக்கு நான் கொண்டுவிடுறேன்.” என்றிவன் சொல்ல, சாந்தியோ ‘வேண்டாமென’க் கூறினாள். தங்கை தனியாக இருப்பதை நியாபகப்படுத்த, அவனோ வேறுதிட்டம் வகுத்துவிட்டதால் தாயின் சொற்களைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மகன் தன்மீது வைத்திருந்த பாசத்தை கண்டு மெய்சிலிர்த்தபடி உட்கார்ந்திருந்தாள் சாந்தி.

 

-தொடரும்…

மின்னூலாகப் படிக்க

Spread the love