சாரல் கவிதைகள் – பகுதி 21

66. எண்ணியே துணிவீர்

 

புற்றுக்கு

  உள்ளே

எதுஇருக்கும்?!

 

புரிந்திட

  எளிதிலே

முடியாதே!

 

குடியினால்

  மதியினை

இழந்தவரும்

 

குதர்க்கம்

  பேசியே

முதிர்ந்தவரும்

 

ஒன்றாய்

  கூடியே

வரும்வழியில்

 

எலியொன்று

  புற்றுக்குள்

நுழைந்திடவே

 

பொசுக்கென்று

  குடிகாரர்

கைநுழைக்க

 

ஓவென

  அலறியே

இறந்திடவே

 

கருநாகம்

  வெளியேறி

ஓடியதே!

 

எண்ணியே

  துணிவீரே

கருமங்களில்……

 

 

67. பொருளீட்டலுக்குள்!

 

சுயமாய் உழைத்து வாழ்வாயே!

சுகமாய் உயர்ந்து வளர்வாயே!

சுற்றம் மகிழ்ந்திட சிறப்பாயே!

சும்மாவே இருந்திடில் சீரழிவே!

 

            பெற்றோர்கள் இல்லாத பிறப்பில்லை

            பெரியோர்கள் இல்லாத தெளிவில்லை

            பெருமழை பெய்தால் வருந்தொல்லை

            பெரும்பிழை செய்தால் பெருந்தொல்லை

 

காலமும் நேரமும் நிற்காது

காணும் யாவுமே நிலைக்காது

காகமும் கத்தாமல் உண்ணாது

காதலும் பொருளற்றால் உயராது

 

            சிந்தித்தே மகிழ்வோர்கள் உயரினமே

            சிந்தியாது மடிவோரும் உயிரினமே

            படித்தோரும் நடிப்போரும் நம்மினமே

            பயனெல்லாம் அழிப்போரோ நடைபிணமே

 

உலகங்கள் முழுவதும் பொல்லாங்கனுக்குள்

உறவுகள் முறிவதும் பொல்லாப்புக்குள்

உரிமைகள் பெறுவதும் போராட்டத்துக்குள்

உண்மைகள் மறைவதும் பொருளீட்டலுக்குள்…….

 

 

68. மதியற்று ஏமாறாதீர்!

 

பெயரினை மாற்றுவதால்

  பெரும்பொருள்

சேர்ந்திடுமாம்!

 

மோதிரக்கல் மாற்றுவதால்

  மோசமெல்லாம்

நீங்கிடுமாம்

 

பெயரெழுத்தை மாற்றுவதால்

  தலையெழுத்தும்

மாறிடுமாம்!

 

இதையிதை மாற்றுவதால்

  இடரெல்லாம்

மாய்ந்துவிடும் -என்று

 

உழைக்காமல் பிழைப்பவரின்

  ஏமாற்றும்

கவர்ச்சியுரை

 

ஏழ்மையினை மாற்றுவதற்கு

  ஏற்றவழி

ஏதுமுண்டோ?!

 

ஏமாறாதீர்! எத்தர்கூட்டம்!! எச்சரிக்கை!!!

 

– தொடரும்

மின்னூலாகப் படிக்க

Spread the love