தென்றல் வீசும்: தொடர் 22

     இவர்கள் இரண்டு ஊர்களை தாண்டியிருப்பர். மதனின் முகத்தில் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத்தொடங்கியது. மதனின் திட்டம்பற்றி எதுவும் அறிந்திருக்காத சாந்தி அடிக்கடி நேரத்தையும், மகன் ஓட்டும் வேகத்தின் அளவையும் கவனித்துக்கொண்டே இருந்தாள்.

     திடீரென மதனின் போனில் அழைப்பொன்றுவர அவனது பைக்கின் வேகம் குறைய ஆரம்பித்தது. சற்றுநேரத்தில் வண்டியை ஓரிடத்தில் நிறுத்தினான். சாந்திக்கு எதுவும் புரியவில்லை. ‘எதற்கு இங்கே வண்டியை நிறுத்துகிறான். அண்ணன் வீட்டுக்கு போக அல்லவா வந்தான். அப்புறம் எதற்காக இங்கு வந்து நிற்கிறான்.’ என்ற குழப்பத்தோடு மதனைப் பார்த்தாள்.

     “அம்மா கொஞ்சம் இறங்கிக்குங்க. எனக்கு தெரிஞ்ச ஒருத்தரை உங்களுக்கு அறிமுகப்படுத்துறேன்.” என்று சொல்ல, ஒன்றும் தெரியாத அப்பாவியான சாந்தி பைக்கிலிருந்து கீழே இறங்கினாள். மெதுவாக பைக்கிலிருந்து இறங்கிய சாந்தியை நோக்கியபடி இருபெண்கள் அவளுக்கு எதிர்திசையிலிருந்து வந்து கொண்டிருந்தனர்.

     அதற்குள் மதனும் பைக்கிலிருந்து இறங்கி வர, அவ்விரு பெண்களும் இவர்களின் அருகே வந்தனர்.

     மதன், தாயிடம், “அம்மா…… நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன் இல்ல, அதாம்மா என்கூட காலேஜில படிச்சிருந்ததா சொல்லியிருந்தேனே…… அந்த பொண்ணுதான் இவங்க. நீகூடப் பலமுறை சொல்லியிருக்கியே ‘அந்தப் பொண்ணு சோபாவை பார்க்கணுமுண்ணு’. இது அவங்க அம்மா.” என்றவாறு சோபாவையும், அவளது தாயார் மைதிலியையும் அறிமுகப்படுத்தினான்.

     ‘இவன் எப்போ சொன்னான், நான் எப்போ கேட்டேன்.’ என்ற சிந்தனையுடன் எதிரே நின்றவர்களுக்கு ‘வணக்கம்’ கூறினாள் சாந்தி.

     பதிலுக்கு மைதிலியும் ‘வணக்கம்’ சொல்ல மதன் சோபாவைப் பார்த்து கண்ணடித்தான். உடனே மைதிலி, மகளிடம் ‘இந்தப் பையனா?’ என்று கண்களால் சைகைவைத்து கேட்க, அவளும் சிறு வெட்கத்துடன் ‘ஆமாம்’ என்று தலையை ஆட்டினாள்.

     மைதிலி மதனைப் பார்த்தாள். பார்ப்பதற்கு எளிமையாக, அலட்டிக்கொள்ளாமல் தாயின் அருகே நின்றிருந்த மதனை சில நொடிகள் உற்றுப்பார்த்தாள். மதன் தன்பங்கிற்கு வருங்கால மாமியாரைப் பார்த்து ‘வணக்கம்’ கூற அவளும் லேசாகச் சிரித்தாள்.

     சாந்தியோ அவ்விரு பெண்களிடம், நீண்ட நாள் பழகியதுபோல அன்போடு நலம் விசாரிக்க, அவர்களும் பதிலுக்கு நலம் விசாரித்தனர். இருவரிடமும் பேச மனமிருந்தும் சாந்தியின் எண்ணத்தில் ‘அண்ணனின் வீட்டிற்குச் சீக்கிரத்தில் செல்ல வேண்டும்’ என்பது மட்டும்தான் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டு இருந்தது.

     மைதிலியும், சோபாவும்கூட என்னபேசுவது என்ற குழப்பமான நிலையில்தான் அங்கே நின்றுகொண்டிருந்தனர். மேற்கொண்டு நேரத்தை வீணடிக்க விரும்பாத சாந்தி, அவ்விருவரையும் பார்த்து,

     “நானும், மதனும் என் அண்ணன் வீட்டிற்கு போகிறோம். அதனால தப்பா நினைச்சிடாதீங்க. நாம இன்னொரு நாளு பேசிக்கலாமே.” என்று சொல்ல,

     “பரவாயில்லீங்க. தாரளமா போயிட்டு வாங்க. திடீர்ணு சந்திச்சதில என்ன பேசணுமுண்ணு தெரியல. அதுதான், இப்போ பார்த்துட்டோமே. இந்த அறிமுகமே இப்போதைக்குப் போதும். எங்களுக்கும் இனிமேல்தான் வீட்டிற்குக் கிளம்பணும்.” என்றுகூறிச் சிரித்தாள் மைதிலி.

     புறப்படுவதற்கு முன் சாந்தி, சோபாவைப் பார்த்து, “ரொம்ப அழகா இருக்கம்மா. வீட்டுக்கு போனதும் திருஷ்டி சுத்திப்போடு.” என்று சொல்லிச் சிரிக்க, தாயும்-மகளும் அதில் இணைந்துகொண்டனர்.

     அந்த சிரிப்புடனே சோபாவிடமும், மைதிலியிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டு சென்றனர் தாயும்-மகனும்.

 

-தொடரும்…

மின்னூலாகப் படிக்க

Spread the love