சாரல் கவிதைகள் – பகுதி 22

69. வாழவேண்டும் நண்பா!

 

நன்மைகள் செய்திடவேண்டும் நண்பா!

நடைமுறையில் உதவிடவேண்டும் நண்பா!

நாள்கடத்தி வருத்திடவேண்டாம் நண்பா!

நட்புஎன்றும் இருந்திடவேண்டும் நண்பா!

 

பொய்புரட்டுச் சொல்லிடாதே நண்பா!

போலிவேடம் போட்டிடாதே நண்பா!

பெற்றவரைப் பேணவேண்டும் நண்பா!

கற்றவரைச் சேரவேண்டும் நண்பா!

 

தாய்மொழியை வளர்க்கவேண்டும் நண்பா!

தனிவழியைத் தவிர்க்கவேண்டும் நண்பா!

தன்பொறுப்பை உணரவேண்டும் நண்பா!

தன்னலத்தைக் குறைக்கவேண்டும் நண்பா!

 

உலகமக்கள் அனைவருமே உறவுகளே

உலகனைத்தும் சேர்ந்ததே நம்நாடு

பேதமின்றி காப்பவனே கடவுள்

பேசுவதால் இணைபவனே மனிதன்

 

இயற்கையைத் கெடுத்திடாதே நண்பா!

இறைபயத்தை விட்டிடாதே நண்பா!

இழிவெதையும் தொடர்ந்திடாதே நண்பா!

அழிவெதையும் வளர்த்திடாதே நண்பா!

 

அன்பொன்றி நிலைக்கவேண்டும் நண்பா!

பண்பொன்றி பிழைக்கவேண்டும் நண்பா!

திறமையொன்றி உணரவேண்டும் நண்பா!

தீமையின்றி சிறக்கவேண்டும் நண்பா!

 

சாதிமதம் ஒழிக்கவேண்டும் நண்பா!

சமத்துவமே களிக்கவேண்டும் நண்பா!

ஒற்றுமையில் ஒன்றாவோம் நண்பா!

ஒழுக்கத்தினால் உலகாள்வோம் நண்பா!….

 

 

70. மாறிடுமோ விதி?

 

மதியாய்ந்து

  விளைப்பதுவே

மாற்றமில்லா

  விதியாகும்!

 

மதியழித்து

  விழிப்பவர்க்கு

மாறிடாத

  பழியாகும்!

 

இறையளித்த

  விதியென்றால்

இவ்வுலகில்

  மதியெதற்கு?

 

அழிவெல்லாம்

  அவரவராய்

செயலாற்றும்

  பணியால்தானே!

 

உழைப்பவர்கள்

  உயர்வதெல்லாம்

உறுதியுள்ள

  மதியால்தானே!

 

வீணரெல்லாம்

  விவரமற்று

விரையமாக்கும்

  விதமேமதி!

 

பரிகாரங்கள்

  படையலோடு

பணம்பறிக்கும்

  மதியிழப்பேவிதி!…..

 

 

71. இயற்கையழிக்கும் பிளாஸ்டிக்

 

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டில்

  பிரியமும் விருப்பமும் கொண்டதனால்

பின்விளைவு எதனையும் உணராமலே

  பிள்ளையாம் சந்ததிக்கே தீங்கிணைத்தார்

 

அரசுகளும் அனுமதியும் ஆணைகளும்

  ஆராயாமல் அவசரமாய் அளித்திடுவார்

ஆழ்கடல்கள் வளங்களையும் அழித்துவிடும்

  அனைத்துமண் நலங்களையும் கெடுத்துவிடும்

 

எளிதாகவே உபயோகிக்கும் பொருட்களென்றே

  எல்லோரும் உடனுறவாய் ஏற்றுக்கொண்டார்

நீர்நிலங்களில் நஞ்சிணைத்து வதைப்பதனாலே

  நிம்மதியை சாகடித்து வருந்துகின்றார்

 

எத்தனையோ கழிவுகள் நம்மிலுண்டு

  என்றாலும் பிளாஸ்டிக் கழிவுகளை

தனித்தே பிரித்தென்றும் சேர்த்திடணும்

  தளராமல் மறக்காமல் செய்திடணும்

 

சேர்க்கின்ற கழிவனைத்தும் மாற்றியமைக்கணும்

  சேருகின்ற கருத்துணர்ந்து சேவைசெய்யணும்

பொல்லாதார் பொருட்குவிப்பை தடுத்தேயாகணும்

  பொதுநலத்தார் ஒன்றுபட்டே நாமாய்யாகணும்

 

உற்பத்தியுடன் விற்பனைகள் தடுப்பதோடே

  உபயோகிக்கும் தீமைகளை தடுத்திடணும்

உறுதியான நடவடிக்கைகள் எடுத்தால்தான்

  உலகழிக்கும் பிளாஸ்டிக் முடிவிலாகும்!…..

 

 

72. விதைப்போம்!

 

வாய்மையும்

  பொய்மையும்

வாயில்தானே

  விளைந்திடும்!

 

நன்மைகளும்

  தீமைகளும்

நாவில்தானே

  விளைந்திடும்!

 

ஒற்றுமையும்

  வேற்றுமையும்

உள்ளத்திலே

  விளைந்திடும்!

 

இளமையும்

  முதுமையும்

இணைந்தே

  விளைந்திடும்!

 

விளைவது

  எதுவாயினும்

விதைப்பது

  அறுவடையே! -(எனவே)

 

ஒற்றுமையை

  விதைத்து

வேற்றுமையை

  அகற்றுவோமே!……

 

– தொடரும்

மின்னூலாகப் படிக்க

Spread the love