தென்றல் வீசும்: தொடர் 23

     சோபாவின் தாயாருக்கு மதனையும், அவனது தாயாரையும் பார்த்த உடனே கொஞ்சம் பிடித்ததுபோலத்தான் இருந்தது. இருந்தும் அதனை வெளிக்காட்டாமல் இருந்தாள், காரணம் கணவனின் முடிவை அவள் இன்னமும் தெரிந்திருக்கவில்லை அல்லவா……!

     “மதனோட அம்மாவுக்கும் உங்க விசயம் தெரியுமா…… என்ன?” என்று மைதிலி கேட்க சோபாவும், “ஆமாம்” என்று தலையை ஆட்ட சிரித்தபடி இருவரும் நடக்கத் தொடங்கினர்.

     மதனும், அவனின் தாயாரும் சற்றுதூரம் சென்றிருப்பர். தனது பேச்சை தொடங்கினான் மதன். சோபா பற்றிய புராணத்தைத் தாயிடம் கூறிக்கொண்டே பைக்கை ஓட்டிக்கொண்டிருந்தான்.

     ஆனால் சாந்தியோ மகன் சொன்னதை அப்படியே காதில் போட்டுக்கொண்டாலும், அவளது மனதில் அண்ணன் மகனுக்கு வந்த ‘வரன்’ பற்றிய சிந்தனைதான் ஓடிக்கொண்டிருந்தது. சிறிது நேரமாகத் தாயிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் மதனோ பைக்கை நிறுத்தினான். அண்ணன் வீட்டிற்கு வந்துவிட்டோமா என சுற்றுமுற்றும் பார்த்தாள் சாந்தி. ஆனால் அவளின் அண்ணன் வீட்டிற்குச் செல்ல தூரம் இன்னமும் இருந்தது.

     மதன் மட்டும் ஏதோ சொல்லிக்கொண்டே இருக்க அது மெல்லவந்து சாந்தியின் காதிற்குள் கேட்கத் தொடங்கியது.

     “அம்மா…… நான் சொல்லுறதைக் கேட்கிறியா?, இல்லையா?” என சற்று உரத்த குரலில் அவனும் கேட்க,

     “என்ன சொன்ன?” என்று அமைதியாக கேட்டாள்.

     “இப்போ நாம ஒரு பொண்ணையும், ஒரு ஆன்டியையும் பார்த்துப் பேசினோமே, அதைத்தான் கேட்டேன். அதில பொண்ணு எப்படி இருக்கா?”

     “ஏன் கேட்கிற?”

     “அந்தப் பொண்ணு முகத்தை நல்லா பார்த்தியா? இல்ல, இன்னொருமுறை பார்க்கணுமா…… அதுக்குத்தான் கேட்கிறேன்.”

     “ஏன் இன்னொரு முறை பார்க்கணும்?”

     “பொண்ணு நல்லா இருக்கா……. இல்லையாண்ணு தெரிஞ்சி வைக்கத்தான். வேற எதுக்கு?”

     “ஏன் இந்த விசயத்தில இவ்வளவு முக்கியம் காட்டுற. இப்போ நாம உனக்கு பொண்ணா பார்க்கப் போனோம். நல்லா பார்த்து புடிச்சிருக்கா, இல்ல புடிக்கலையாண்ணு சொல்ல.” என்று சாந்தி கேட்க, சற்றுநேர யோசனைக்குப்பின் மதன் அமைதியாகச் சொன்னான்.

     “ஆமாம்மா, பொண்ணு பார்க்கத்தான் போனோம். அந்தப் பொண்ணு சோபா இருக்கால்ல, அவளைத்தான் நான் காதலிக்கிறேன். அதனாலத்தான் சோபாவை உங்களுக்கு அறிமுகம் செஞ்சுவச்சேன்.” என்றுகூறி மீண்டும் பைக்கை ஓட்ட ஆரம்பித்தான்.

     சாந்திக்கு இப்போதுதான் லேசாக புரிய ஆரம்பித்தது. மகன் தன்னைப் பாசத்தோடல்லவா அழைத்துச் செல்கிறான் என்று தப்புக் கணக்கு போட்டது, தாமதமாகத்தான் புரிய ஆரம்பித்தது அவளுக்கு. ‘இனி புரிந்து என்ன பயன். அவனது வேலைதான் முடிந்துவிட்டதே.’ என்று எண்ணியபடி வேறெதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

     பெண்ணைப் பெற்றவள் இவ்விசயத்தில் மகளிடம் கோபம் காட்ட, இங்கே ஆணைப் பெற்றவள் காதல்விசயத்தில் மகனிடம் கோபம் காட்டாமல் அமைதியாக இருந்தாள். இந்த சமுதாயத்தின் நிலையும் இப்படித்தான். ஒரே நிகழ்வுதான் இருவருக்கும் ஏற்பட்டது. ஆனால் பெண்ணை நடத்தும் அணுகுமுறையும், ஆணை நடத்தும் அணுகுமுறையும் வெவ்வேறாகத்தான் இருந்தது.

 

-தொடரும்…

மின்னூலாகப் படிக்க

Spread the love