சாரல் கவிதைகள் – பகுதி 23

73. உறவழிந்து சாகிறேன்

 

தேங்கிநின்ற குளத்துநீரீல்

  தேடுகின்ற சிலரிருக்க

புதுவெள்ளம் ஆற்றுநீராய்

  ஆர்ப்பரித்து வந்துசேர

 

அணியணியாய் குளத்துமீன்கள்

  எதிர்நீச்சலில் துள்ளிக்குதிக்கப்

பார்த்துநின்ற நானும்சென்று

  பக்கத்துக் கடைதனிலே

 

தூண்டிலொன்று வாங்கிவந்தேன்

  நீண்டதொரு கம்பைமுறித்து

நூலிணைந்த தூண்டிலிலே

  புழுவொன்றை சொருகிவைத்து

 

புதுநீரைப் பூரிப்பாய்வரவேற்க

  வரிசையாய் வந்தமீன்கள்

முன்னிலையில் போட்டுவிடக்

  கண்டுவிட்ட பெரியமீனொன்று

 

கவ்வியே இழுத்துச்செல்ல

  வெட்டிநானும் கரையிழுக்க

துடிதுடித்து வந்தமீனும்

  துவண்டுதான் மாண்டதையா

 

பிணமுண்ணும் மனிதனாகப்

  பிறவிசெய்த ஆண்டவனே!

உயிர்கொல்லும் உயர்பிறப்பை

  உன்னால்தான் நானடைந்தேன்

 

எண்ணிஎண்ணி வருந்துகின்றேன்

  வாழ்வதற்கே உண்ணுகிறேன்

உண்பதற்கே வாழ்வதனால்

  உறவழிந்து சாகிறேன்!…….

 

74. எமையேன் ஒழிக்கின்றீர்?

 

எங்களை அழிக்காதீர்

  எருவாக எரிக்காதீர்

எவருமே வளர்க்காமல்

  எமையேன் ஒழிக்கின்றீர்

 

கவனிப்பார் யாருமின்றி

  காடுகளாய் அமைந்திட்டோம்

பராமரிப்பார் இல்லாமல்

  பயனீந்தே நிலைத்திட்டோம்

 

மரஞ்செடி கொடிகளாலே

  மலையாய் உயர்ந்திட்டோம்

நீர்பெருகும் அணைகளாக

  நிலஞ்செழித்த கரையானோம்

 

உயரின மரங்களோடும்

  உயர்வகை இனங்களோடும்

உறைவிடப் பயனுமானோம்

  உலகிற்கே தானமுமானோம்

 

எல்லைகள் வகுப்பதற்கும்

  எதிரிகளைத் தடுப்பதற்கும்

இயற்கையின் மழைவளத்தை

  இதமாகவே கவரலானோம்

 

கடல்பயணக் கலங்களுக்கும்

  கதவுசன்னல் நிலைகளுக்கும்

கருணையோடே எமையேஈந்தோம்

  கயமையெண்ணத் தீயோருக்கும்

 

எண்ணியே துணிந்திடாத

  எத்தரெண்ணக் கொள்ளையரே!

சித்தமெல்லாம் கலங்கிவிட்டீர்

  சிறப்பெல்லாம் இழந்தேவிட்டீர்……

 

75. புவிக்குணவா?

 

பிறப்பொன்று இல்லாத வாழ்வுமில்லை

  இறப்பொன்று இணையாது வாழ்வாரில்லை

சிறப்பொன்று எதுவுமே நிலைப்பதில்லை

  திறப்பொன்று இல்லாத வரவுமில்லை

 

அலைகின்ற கடலுக்குள் உலகிருக்கு

  அசைகின்ற உலகுக்குள் உயிரிருக்கு

அமைகின்ற நிலையிலே உயர்விருக்கு

  அரைகின்ற எதிலுமே உரமிருக்கு

 

பொல்லாங்கன் என்பாருள் பாரிருக்கு

  பொய்யுரைகள் சொல்வாருள் ஊரிருக்கு

அரசியல் ஆன்மீகம் வியாபாரமும்

  அழிகின்ற செயலிலே வளர்ந்திருக்கு

 

போதகம் எதிலுமே கதையிணைப்பார்

  பொல்லாராய்க் கவர்ச்சியில் தனைமறப்பார்

பொய்மையும் நடிப்பையும் இணைத்திடுவார்

  போலியாய் சமயத்தொண் டாற்றிடுவார்

 

கடவுள்கள் பலபடைத்து பெயர்களிட்டார்

  கடமையாய்ப் படையல்கள் படைத்திடுவார்

உருவங்களில் உயர்விணைத்து வணங்கிடுவார்

  உழைக்காமல் உண்பதற்கு வழியும்கண்டார்

 

உலகநிலை உணர்ந்திடுவீர் மனிதர்களே!

  உங்கள் விலைபுரிந்திடுவீர் அன்பர்களே!

அறிவினமாய் பிறந்ததுவும் தற்கொலைக்கா?

  அறிவீனமாய் அழிவதுவும் புவிக்குணவா?!

 

வரலாறுகள் தெரிந்திடாதார் வாழ்க்கையெல்லாம்

  வஞ்சனையாய் மதங்களினால் சிதறிப்போச்சே!

வரவொன்றையே எண்ணுவோர் கொள்கையினால்

  வருங்காலம் இயற்கைஈவும் கொள்ளையாச்சே!

 

தனமீட்டும் தன்னலத்தைக் குறைத்துவிட்டால்

  தன்னினத்தை தயவீந்து காக்கலாமே!

பயமூட்டும் செயல்களையே தடுத்துவிட்டால்

  பயனீந்து பண்பிணைந்து வாழலாமே!

 

ஓரினத்து மானிடரையே பிரித்ததினால்

  ஒருவரேனும் தனிஇனமாய் வாழ்வதுண்டா?

ஆறறிவும் உயர்பிறப்பும் கிடைத்தெதற்கு

  அறிவிழந்த பிண்டமென்ற இழிவினுக்கா?

 

மதங்களால் கடவுள்கள் விலையாவதால்

  கலகங்கள் உலகெங்கும் செழித்தோங்குதே!

கடவுள்களே! எவரேனும் வந்துபாருங்கள்

  காசினியின் சீரழிவில் நீங்கலொழிவீர்கள்…..

 

– தொடரும்

மின்னூலாகப் படிக்க

Spread the love