தென்றல் வீசும்: தொடர் 24

தாய், தங்களது காதலைப்பற்றி எதாவது கேட்பாள் என்ற எதிர்பார்ப்புடன் பைக்கை ஓட்டிக்கொண்டே சென்றான் மதன். ஆனால் தாயிடமிருந்தது எந்த கேள்வியும் அவனை நோக்கி வரவில்லை.

     எனவே மதன் மெல்லப் பேச்சை ஆரம்பித்தான்.

     “அம்மா….. ஏன் அமைதியா இருக்க.”

     “நீ பாசமா பைக்கில கூட்டிக்கிட்டுப் போகும்போதே நான் எச்சரிக்கையா இருந்திருக்கணும். தப்புப் பண்ணிட்டேன்!” என்று சிறிது கோபப்பட்டாள் சாந்தி.

     ‘அதிகமா கோபப்படலாம், அப்படி கோபப்பட்டு மதன் பாதியிலே விட்டுப்புட்டுப் போயிட்டா அப்புறம் என்ன பண்ணுவது? சுபகாரியம் பேசப் போகிற வழியில தடங்கல் வந்தா நல்லா இருக்காதே.’ என்ற சிந்தனையில் மேற்கொண்டு இவளும் ஒன்றும் பேசவில்லை. அவனும் எதுவும் கேட்கவில்லை.

     இப்படியாக இருவரும் தாங்கள் காதலிப்பதைத் தங்களின் தாய்களிடம் சொல்லிவிட்டோமே என்றும், ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திவிட்டோமே என்றும் இரட்டைச் சந்தோசத்தில் இருக்க, அடுத்த வேலையை கொடுக்க தயாரானாள் மதனின் தங்கை கீர்த்தனா.

     ஒருநாள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது கீர்த்தனா திடீரெனக் கேட்டுவிட்டாள்,

     “அண்ணா, உன் ஆளு……, மன்னிச்சிக்கோ, அண்ணியை எப்போ காட்டித்தர போற.”

     தங்கை இப்படி திடீரெனக் கேட்பாள் என்று துளிகூட நினைக்கவில்லை மதன்.

     “சொல்லுண்ணா, எப்போ கூட்டிக்கிட்டுப்போய்க் காட்டித்தரப் போற.” என்று மீண்டும் கீர்த்தனா கேட்க, மதன் யோசிக்க ஆரம்பித்தான்.

     தன்னை ஒருவழிச் செய்யாமல் இவள் விடப்போவதில்லை என்று அவனுக்குப் புரிந்தது.

     “இப்போதானே சொல்லியிருக்க. ஒருநாள் கூட்டிக்கிட்டுப் போறேன். அதுவரைக்கும் பொறுமையாய் இரு.” என்றுகூறி நழுவப் பார்த்தான். ஆனால் கீர்த்தனா அண்ணனை விடுவதாக இல்லை. சிறுவயதிலிருந்தே தான் விரும்பியதை எப்படியாவது கேட்டு வாங்குவதைப் பழக்கமாகக் கொண்டவளுக்கு வேறு என்னதான் சொல்லித்தர வேண்டும். அண்ணனை நச்செரிக்கத் தொடங்கினாள்.

     அவனும் எப்படியெல்லாமோ பேசிச் சமாளித்தான்.

     “கீர்த்தியம்மா, நாங்க வெளியே எல்லாம் சந்திச்சு பேசுறது இல்ல. ஊர் சுத்துற பழக்கம் சுத்தமா கிடையாது. சோபாவும் வெளியேவரச் சம்மதிக்கவும் மாட்டாள்.” என்றெல்லாம் கூறியும் எந்தபலனும் இல்லை. கருமமே கண்ணாக இருந்தாள் அவள்.

     “நீ என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது. இந்த வாரக் கடைசியில நாங்க சந்திக்கணும். அவ்வளவுதான்.” என்று தங்கை கட்டளையிட,

     “அதெல்லாம் முடியாது. போடி.” என்று முற்றுப்புள்ளி வைக்க முயன்றான் மதன்.

     இதனால் கோபமடைந்த கீர்த்தனா, தனது வழக்கமான ஆயுதத்தைக் கையில் எடுத்தாள்.

-தொடரும்…

மின்னூலாகப் படிக்க

Spread the love