76. வல்லானும் பொல்லானோ?
பரமனாய்ப் பெருகுகின்றாய் -உனைப்
பாரோர்க்கு அருளுகின்றாய்
உயர்வுற்றே இருக்கின்றாய் -பல
உதவிகளும் செய்கின்றாய்
கருவறைக்குள் தனித்திருப்பாய் -கண்
காணாமலே சிறக்கின்றாய்
கற்பழிக்கும் சாமிகளுக்கும் -என்றும்
கருணையளித்து களிக்கின்றாய்
கொள்ளையர்கள் பணத்துடனும் -ஏழை
கோழிவிற்றுவந்த பணத்தினையும்
வேறுபாடெதும் பார்க்காமலே -நாளும்
வேண்டுமென்றே அள்ளுகின்றாய்
நீண்டநீள வரிசையிலே -நாங்கள்
நீண்டநேரம் காத்திருக்க
வேண்டியவர் வந்தவுடன் -முரணாய்
வேறுவழியிலே அழைக்கின்றாய்
வல்லானாய் இருப்பாயென்று -நம்பி
வணங்கிடவே தேடிவந்தோம்
பொல்லானே நானுமென்றே -தன்னைப்
பொருத்தமாய் அமைத்திட்டாய்
பார்க்காமல் பேசாமல் -தீதால்
பணம்பொருளை கொள்ளையிடும்
பாதகரையே பாதுகாக்கும் -நீயும்
பரமனுக்கும் தகுதிதானோ?!…..
77. கடவுளுமில்லா நம்மவரே!
உலகினில் எங்குமே இருப்பதில்லை
உண்மையாய் எவருமே கண்டதில்லை
உறவுகள் எதிலுமே கொண்டதில்லை
உதவிகள் எவருக்குமே செய்வதில்லை
காலங்கள் கடத்திடும் பொய்மையிலே
காசுபணம் சேர்ந்திடும் கொள்ளையிலே
பொல்லார்கள் விதைத்திடும் வினைகளிலே
பொலிவாய்ப் பெருகுவதே கடவுள்களே!
சோம்பலில் சும்மாவே வாழ்வோரும்
சொகுசாய் வாழவே விழைவோரும்
சொத்தையே பெருக்கவே நினைப்போரும்
சோர்வுகள் தவிர்க்கவே முனைவோரும்
ஒன்றியே படைத்தது கடவுள்தாம்
ஒன்றாமல் பிழைப்பது தவறுகள்தாம்
கதைகளைப் புனைந்தே கொட்டுகின்றார்
காதுகளிலும் பூக்களையும் சுற்றுகின்றார்
பலவிதம் படையல்கள் படைக்கின்றார்
பகுத்தறி வழிப்பதில் நிலைக்கின்றார்
பழியோடு பதவிகளும் வகுக்கின்றார்
பலன்காண நன்மையையும் அழிக்கின்றார்
மனிதர்கள் ஆளுமைகள் தோற்றுவிட்டது
மமதையுடன் அகந்தையும் இணைந்துவிட்டது
மட்டட்டதாய் இலஞ்சவூழல் பெருகிவிட்டது
மக்களாட்சியும் வீழ்ச்சியினால் விம்மியழுகுது……
78. அதிகாரிகளின் மெத்தனத்தால்…..
வாக்களிக்க மனமில்லைதான்
வாக்களித்தும் பயனில்லைதான் -எனினும்
வாழ்நாளை மகிழ்ச்சியிலாழ்த்த
வாழ்த்துகளுடன் வேண்டுகிறோம்
மெத்தனமிகு அதிகாரிகளின்
மேலோட்ட பணிகளாலும்
தரங்கெட்ட நடத்தையாலும்
தனமீட்ட முடக்குகின்றார்
டாஸ்மார்க்கை நிறுத்திவிட்டு
பாஸ்மார்க் எண்ணிக்கையில்
தமிழ்நாட்டை ஆட்சிசெய்யும்
தகுதிபெறும் கட்சியுண்டா?
திட்டங்களைக் கிடப்பிலிட்டுத்
திருப்பத்தால் அரசமைப்போர்
கோடிகோடியாய் வரிப்பணத்தைக்
கொடியவராய் அழிப்பதென்ன?
விலைவாசியோ விண்ணுயர்ந்து
கல்விவிலையோ கடலளவு
ஏறுகின்ற நிலைதவிர்க்க
எவ்வரசால்தான் முடிந்திடுமோ?
தொழிலெல்லாம் வளர்ந்திடவும்
தொல்லையாவும் ஒழிந்திடவும்
விவசாயம் செழித்திடவும்
விடிவுகாலம் வருவதுண்டோ?
இலவசமாய் தம்பதிகள்
இணைந்திடும் திட்டமொன்று
இனிவரும் தேர்தல்களிலிலே
இணையிலா அறிக்கையாமோ?
தடையில்லா மின்சாரமும்
தரமிக்க உணவுகளும்
உழைத்துண்ணும் உயர்வுகளும்
உண்மையிலே நமில்வருமோ?!……
79. அங்கலாய்க்கும் உயரினம்
அகிலமெல்லாம் தேடியும்
அவரவராய் வினவியும்
அறிவினமாய்க் குலவியும்
அன்பினை உறவிலும்
உழைத்திடும் வேளையும்
உதவிடும் நாளிலும்
உண்டிடும் பொழுதிலும்
உறங்கிடும் போதிலும்
காதலென்ற பருவநோய்
காலந்தனைக் கொன்றிட
காரியத்தை நடுவோரில்
காணுகின்ற நட்புறவில்
பெற்றவர் கரிசனையில்
கற்றவர் அனுசரணையில்
மற்றவர் பிரிவினையில்
உற்றார் நிலையழிவில்
நிலைத்திடும் உறவில்லை
நினைத்திடும் உயர்வில்லை
வாழ்வினும் மகிழ்வில்லை
வரமளிக்க எவருமில்லை
உடலூனப் பிறவிகளாய்
உடல்நோய் கடும்வலியால்
தெருவோரம் இருப்பிடமாய்
தெரிந்தாரும் பகைவர்களாய்
தன்னலத்தால் தலைவர்களாய்
நன்றியற்றார் நல்லவராய்
பொறுக்கிகளே போதகராய்
பொல்லாரே நிறைந்தவராய்
அங்கலாய்க்கும் உயிர்களாய்
ஆதங்கத்துப் பேய்களாய்
ஆசைகளால் நலம்மடிந்து
அமைதியே மாண்டதே
அமைதி இழந்ததே!
அதுவாய் இறந்ததே!
அகத்தோ டிணைந்ததே!
அமைதியே இழந்ததே!……..
– தொடரும்
மின்னூலாகப் படிக்க