தென்றல் வீசும்: தொடர் 25

     “அம்மா வரட்டும், உண்மையைச் சொல்லி உன்னை என்னப்பண்ணுறேண்ணு பாரு.” என்று பயமுறுத்தினாள். தாய்க்கும் இவனது காதல் விசயம் நன்றாகவே தெரியும் என்று தங்கைக்குத் தெரியாதல்லவா! அதனால் மதனும் மிகுந்த தைரியத்துடன்,

     “தாராளமா போய்ச் சொல்லு. எனக்கென்ன பயம்.” என்று தெனாவெட்டாயக்; கூறினான்.

     அடுத்த நொடியே கோபத்தோடு தாயை நோக்கிச் சென்றாள் கீர்த்தனா. அதேநேரத்தில் அண்ணனிடம் ‘சொல்லிருவேன், சொல்லிருவேன்.’ என்று சைகையால் பலமுறை பயமுறுத்தினாள். மதனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாதவன் போல் இருந்தான். அண்ணனிடம் தனது பயமுறுத்தல் செல்லுபடியாகாததால் அம்மாவிடம் ஏதோ சொல்ல ஆரம்பித்தவள் போல்,

     “அம்மா, அண்ணனைப் பார்த்தியா…… என்ன வேலை செஞ்சிருக்கான்.” எனச்சொல்ல,

     “விடு கீர்த்தி, இந்தக் காலத்து பசங்க, எங்களை கேட்டா முடிவு செய்யுறானுங்க.” என்று எரிச்சலோடு கூறவே, திகைப்போடு நின்றாள் கீர்த்தனா.

     “அம்மா…… அப்போ உனக்கு இந்தவிசயம் ஏற்கனவே தெரியுமா?” என்று ஆச்சரியத்தோடு கேட்க,

     “தெரியுமாண்ணா கேட்கிற. நீங்க பேசினது எல்லாம் என்னோட காதிலையும் விழத்தான் செஞ்சது. உனக்கு, உன்னோட அண்ணன் காதலிக்கிறது மட்டும்தான் தெரியும். ஆனா அந்த பொண்ணு எப்படியிருப்பாண்ணுகூட எனக்குத் தெரியும்.” என்று சலிப்புடன் கூறினாள். சாந்தி.

     “என்னம்மா சொல்லுற, அண்ணன் அந்தப் பொண்ணு போட்டோவை உங்கிட்ட காட்டினானா?”

     “அடப்போமா, நேராக பார்த்து பேச வச்சிட்டான் உன் அருமை அண்ணன்.” என்று தொடர்ந்து ஆச்சரியங்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தாள் சாந்தி.

     கீர்த்தனாவிற்கு ஒன்றுமே விளங்கவில்லை. தான் அண்ணனுக்குப் பிரச்சனை கொடுக்கலாமுண்ணு நெனைச்சா, அண்ணன் எனக்குக் கொடுக்கிறானே என்ற அதிர்ச்சியுடன் அண்ணனைப் பார்த்தாள். அவனோ இங்கே நடப்பதைப் பார்த்தபடியே ஏளனம் செய்துகொண்டிருந்தான்; கீர்த்தனாவை வெறுப்பேற்றியபடி.

     “ஏண்டா, இதெல்லாம் எப்போ நடந்திச்சி? எங்கிட்ட ஏன் சொல்லல?” என்று சொல்லிச் செல்லச் சண்டைக்குத் தயாரானாள் கீர்த்தனா.

     “அண்ணனும், தங்கச்சியும் சண்டை போடுறதுபோல ரொம்பவே நடிக்காதீங்க. அப்பா வர்ற நேரமிது. அமைதியாய்ப் போய் உட்காருங்க.” என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து சென்றாள் அன்னை.

     தாயார் இப்படிச் சொல்லவும் மதன் அமைதியாக, அடுத்தநொடியே கீர்த்தனாவிற்கு இன்னொரு யோசனை கிடைத்தது. அப்பாவின் பெயரைப் பயன்படுத்தினால் அண்ணன் எப்படியும் சம்மதித்துவிடுவான் என்பதுதான் அந்த யோசனை. அந்த யோசனைப்படி அடுத்தடுத்த காய்களை நகர்த்த ஆரம்பித்தாள் அவள்.

     “அண்ணா……. என்னை ஞாயிற்றுக்கிழமை அண்ணியைப் பார்க்க அழைச்சிக்கிட்டுப் போறியா? போகலையா? போகலையிண்ணா அப்பாக்கிட்ட சொல்லவா?” என்றிவள் கேட்க, ‘இதற்குமேல் சென்றால் பிரச்சனை விபரீதமாகிவிடும்.’ என்று மதனுக்குப் புரியத் தொடங்கியது.

     அண்ணனிடமிருந்து பதில் வராததால், “அப்பா!” என்று உரத்த குரலில் கத்தினாள். அதேநேரத்தில் வெளியே சென்றிருந்த சேகரும் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தார். தந்தை வாசலில் நிற்பதைக் கண்ட மதனும், கீர்த்தியும் வெலவெலத்துப் போக, சேகரோ ஆத்திரத்தோடு, “என்ன பிரச்சனை?” என்று மகளைக் கேட்டார்.

-தொடரும்…

மின்னூலாகப் படிக்க

Spread the love